Published:Updated:

பிஏசி தலைவராக ஜோஷி மீண்டும் நியமனம்

Vikatan Correspondent

புதுடெல்லி, மே 2,2011

நாடாளுமன்ற பொது கணக்குக்குழு (பிஏசி) தலைவராக முரளி மனோகர் ஜோஷி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ##~~##

பிஜேபி மூத்த தலைவரான ஜோஷி மேலும் ஓராண்டு காலத்துக்கு இந்தப் பதவியில் இருப்பார்.

ஜோஷி தலைமையிலான குழு தயாரித்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை குறித்த வரைவு அறிக்கை ஏப்ரல் 28-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருந்தது.

ஆனால், பிஏசி-யில் மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக 11 உறுப்பினர்கள் வாக்களித்ததால் இந்த அறிக்கையை வெளியிட முடியாமல் போனது.

இதையடுத்து, இந்த அறிக்கையை மக்களவைத் தலைவர் மீரா குமார் அலுவலகத்துக்கு, முரளி மனோகர் ஜோஷி அனுப்பிவைத்தார்.

இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று ஜோஷி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், அவரது பதவிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இருப்பினும் இந்த குழுவின் தலைவராக ஜோஷியை மீண்டும் நியமிக்க வேண்டும் என பிஜேபி பரிந்துரை செய்திருந்தது.

இதை ஏற்று அவரை மீண்டும் அப்பதவியில் நியமிக்க மக்களவைத் தலைவர் மீரா குமார் முடிவு செய்தார்.

இதனிடையே, 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக பிஏசி தலைவர் ஜோஷி அளித்துள்ள வரைவு அறிக்கை குறித்து மக்களவைத் தலைவர் மீரா குமார் முடிவு செய்வார் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.