''ஏண்டா தங்கம் சின்னப்பாண்டி... நெசம்தானா? எங்கள விட்டுட்டுப் பரதேசம் போகப் போறியாமில்ல. ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிச் சுப் பண்றா மகனே...''

தட்டோட்டுல போட்டு மறுமாத்தத்துக்குக் கானப் பயறு வறுத்துக்கிட்டே சத்தம் போட்டுப் பொலம்புறா சிட்டம்மா.

'கறுக் கறுக் கறுக் கறுக்...’

இம்புட்டு நேரம் வறுத்தும் நெறம் கூடி வராம நிக்குது பயறு. உப்புத் தண்ணிய லேசா அது மேல ஒரு தொளி தொளிச்சா; இப்ப வறுத்தா. செத்தவடத்துல வயசுக்கு வந்த பிள்ளை மொத மொதலா வெக்கப்படற தோரணையில் மூஞ்சி செவந்து பொன்னிறமா வருது பயறு. அகப்பையில இன்னும் ரெண்டு தள்ளுத் தள்ளி முந்தானையச் சுருட்டித் தட்டோட்டுல அடவு கொடுத்துப் பொத்துனாப்புல எறக்கிவச்சா வறுத்த பயற.

வலது கைய மோவாய்க்கு முட்டுக் கொடுத்துத் திண்ணையில ஒக்காந்து, கூரையில மூங்கில் மரம் துளைக்கிற வண்டையே வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கான் சின்னப்பாண்டி.

பசு மாட்டுக்குப் பருத்தி விதை ஆட்டிக்கிட்டிருக்காரு கருத்தமாயி.

'சதக் சதக்’குன்னு பருத்தி விதை சதங்கவும் உரலவிட்டுத் தவ்வித் தவ்வி மேல வருது ஆட்டுக்கல்லு.

''சொன்ன பேச்சுக் கேக்காம துள்ளுறதப் பாரு என் முரட்டுப் பய மகன் முத்துமணி மாதிரி'' ஆட்டுக்கல்ல மிசுங்கவிடாமக் கதகதன்னு ஆட்டவும் மஞ்சப் பாலப் பீச்சி எறியுது பருத்தி விதை.

மாட்டுக்குப் போடுற பருத்தி விதைய மசிய அரைக்கப்படாது. அரையும் குறையுமா அரைச்சு நாரும் பாலுமா இருக்கிறப்பவே நச்சுன்னு வழிச்சுறணும். ஆட்டுன பருத்திவிதைய அள்ளிக் குத்துச்சட்டியில கொட்டிக்கிட்டே கருத்தமாயி சொல்றாரு:

''மகனே சின்னப்பாண்டி... நாய் பேயி சொல்றதையெல்லாம் கேக்காத. உன் நெஞ்சுக்கூட்டுக்கு எது நல்லதுன்னு நெனைக்கிறியோ அதச் செய். நாங்க தக்குறிக. தெக்கு வடக்குத் தெரியாது எங்களுக்கு. உங்காத்தா ரயிலப் பாத்ததில்ல; நான் ஏரோப்ளேன் பாத்ததில்ல. நீயாச்சும் உலகத்தச் சுத்தி ஊரு வந்து சேரு.''

''உலகத்தச் சுத்துனவனெல்லாம் ஊரு வந்து சேந்துட்டானாக்கும். இப்பிடித்தான் நம்ம நரியூத்து முத்துக்காமு பேரன் வெளிநாட்டுக்கு வேலைக்குப் போறேன்னு போயிக் கரிச்சட்டி நிறத்துல ஒரு பொம்பளையப் புடிச்சு அவ வீட்டுலயே ஒதுங்கிட்டானாம். அப்பன், ஆத்தா செத்த எழவுக்குக்கூட வரல திருட்டுப்பய. அந்தக் கதை நம்ம வீட்டுல நடந்துரக் கூடாதுரா சின்னப்பாண்டி.''

''சொல்றா பாரு... சொந்தத்துல புத்தி வச்சுப் பொறக்காதவ. காட்டுக்குப் போற எல்லாப் பயலையுமா புலி அடிச்சுப்புடுது? எம் பிள்ள சிங்கம். அப்பிடியே புடிச்சாலும் கரிச்சட்டியவா புடிப்பான்? ஒரு வெள்ளைக்காரிக்குச் சீலை கட்டியில்ல வீடு வந்து சேருவான். ஏலேய்... புடிச்சா வெள்ளைக்காரியப் புடிடா மகனே. சொந்தபந்தத்துல இருக்கிற மேல் குளியாத சிறுக்கியெல்லாம் வேணாம் ஒனக்கு.''

''மேல் குளியாத சிறுக்கிகதான் கோயில் மாடாத் திரியிற புருசங்களுக்கும் குழந்தை பெத்துக் கொடுப்பாளுக; உப்புப் புளி இல்லாத வீட்டுலயும் ஒக்காந்து பொழைப்பாளுக. சுழி பாத்துப் புடிக்கணும்டா மகனே. தோல் பாத்துப் புடிச்ச மாடு தொழிலுக்கு ஒத்து வராது; ஆ... ஊன்னா... அத்துக்கிட்டு ஓடிப்போயிரும். எங்களுக்குத்தான் சொந்தப் புத்தி இல்லையாக்கும். சொல்றவக புத்திய வித்தாப் பொடிமட்ட வாங்கக் காணுமா?''

கானப் பயற வறுத்து முடிச்ச சிட்டம்மா, கருத்தமாய வறுக்க ஆரம்பிச்சுட்டா.

அவரும் விடல.

''தண்ணிக் கெணறத் தாண்டாத தவளைக்கு வாயப் பாரு வாய... நீ போயிட்டு வாடா மகனே. ஆமா... நீ படிக்கிற எடத்துல இருந்து ஒன்னிய அனுப்புறாங்களா... இல்ல, நீயாப் போறியா?''

''இல்லப்பா... அந்த வெள்ளக்காரப் பிள்ள தான் என்னக் கூட்டிக்கிட்டுப் போகுது. அப்பன், ஆத்தா ரெண்டு பேருக்கும் தெரியும் - அது நல்லப் பொண்ணு. எல்லாச் செலவையும் அந்த ஒரு புள்ளையே ஏத்துக்குதப்பா. போயிட்டு வந்தாப் புது மனுசனா வருவேன். வீட்டுக்கும் நல்லது; ஊருக்கும் நல்லது!''

''எல்லாம் சரிப்பா. பொட்டப்பிள்ளய நம்பிப் போறேங்கிறியே... அதான் இடிக்குது. வேட்டைக்குப் போனாக்கூட அண்ணன், தம்பியோட போகாதே - மாமன், மச்சினன்கூடப் போன்னு புத்தி சொல்ற ஊரப்பா இது. நீ ஊரு நாடு தெரியாத இளம்பிள்ளையோட போறேங்கிறியே... அவ ஒன்னியத் திக்குத் தெரியாத காட்டுல விட்டுட்டுப் போயிட்டா?''

''நல்லதையே நெனைங்கப்பா. ஏன் கெட்டத நெனைக்கறீங்க.''

''கெட்டதையெல்லாம் நெனச்சு நல்லத மட்டும் வாழணுமுடா மகனே. 'ஆளத் தேடிச் சீரைத் தேடு’ன்னு சொல்லுது சொலவம். ஆள் பலம் பாதி; பண பலம் பாதி. ஆள் பலம் இருக்கு ஒனக்கு. பண பலம் வேணுமே... அதான் யோசிக்கிறேன்!''

''பண பலம் இல்லாட்டியும் மன பலம் இருக்கப்பா. நான் பாத்துக்கறேன்!''

''அது எப்பிடிப்பா? நீ திண்டுக்கல்லுக்குப் போறேன்னாலும் கோழிக் குஞ்சை வித்து அஞ்சு பத்து வச்சு அனுப்புவேன் உன் சட்டையில. இப்ப அமெரிக்காவோ பேரிக்காவோ போறேங்கிறியே... உன்ன வெறுங்கையோட அனுப்பிவச்சா அப்பன் மனசு இங்க அடங்காதுடா தங்கம்!''

''எழவு வீட்டுக்கே ஆட்டை வித்துப் பொழைக்கிற பொழப்பாப்போச்சு நம்ம பொழப்பு. பூவரச இலைக்கே பொங்கல் பத்தாதுங்கிறப்ப வாழை இலைக்கு எங்கிட் டுப் போறது?'' - குறுக்குச் சால் ஓட்டுறா சிட்டம்மா.

''இருக்கட்டும்; முட்டைக்குள்ள மூச்சுவிடற குஞ்சுக்குப் படியளக்கிற கடவுளு எம் பிள்ளைக்கு அளக்க மாட்டாரா? குல சாமியக் கும்பிட்டுப் போறேன்; நல்லது நடக்கும்!''

கையில ஒட்டுன பருத்தி விதையக் குத்துச் சட்டியிலயே கழுவிவிட்டாரு. வேட்டியில கை தொடச்சாரு; வரிஞ்சு கட்டுன வேட்டிய அவுத்து இழுத்து உதறி இடுப்புல கட்டுனாரு. கொடியில பழைய துணிகளுக்கு மத்தியில கைதொடச்சுப் போட்ட காயிதம் மாதிரி கிடந்த சட்டைய விக்கிரமாதித்தன் வேதாளத்த இழுக்கிற மாதிரி இழுத்தாரு. ரெண்டு கையில தூக்கிப் புடிச்சு உதறலாமா வேணாமான்னு யோசிச்சாரு. உதறுனா அழுக்குப் போகாது. ஆனா, கிழிஞ்சுபோற சந்தர்ப்பம் இருக்கு.

''மூத்த பய மாதிரி முரண்டு புடிக்காதே சட்டையே... சின்னப் பய மாதிரி சொன்ன படி கேளு!''

சட்டையோட சம்பாசணை பண்ணிக்கிட்டே அதப் பொத்துனாப்புல உடம்புல போட்டுக்கிட்டாரு. முப்பத்தேழு வருசமாப் போகாத ஒரு வீட்டுக்குப் புறப்பட்டுப் போறாரு.

காக்கா வழி விட்டிருக்கு; கடவுள்தான் வழி விடணும்.

கடவுளே வழி விட்டாலும் முத்துமணி வழி விடணுமே!

முத்துமணி மரியாதை சின்னாபின்னமாகிச் சீரழிஞ்சுபோச்சு குடும்பத்துக்குள்ள.

மருந்துக்கும் மரியாதை இல்ல மாமனாரு வீட்டுல. ஆடு, கோழி, மீனுன்னு ஆரம்பிச்ச சாப்பாடு... கூட்டு, பொரியல், அவியல்னு மாறி ஊறுகா, சுட்ட மொளகா, வெங்காயம்னு சுருங்கி நிக்குது. காட்டுக்குள்ள கண்டேத்தியா வேட்டையாடி ருசி கண்ட சிங்கம், கால் கிலோ கறி வேணுமின்னு கசாப்புக் கடை வரிசையில நிக்கிற மாதிரி நிக்கிறான் பய.

மாமனாருகிட்டதான் மொதல்ல மரியா தையக் கெடுத்துக்கிட்டான்.

''மாமா... கேசு கழுத்துல கத்தி வச்சிருச்சு; எப்ப அழுத்தும்னு தெரியாது. என்னிய ஊரு நாடு மதிக்கல; சொந்த பந்தம் கைவிட்டுருச்சு. எங்கிட்ட கை கட்டி நின்ன பயலுக இப்பக் காலாட்டி உக்கார்றானுக. கேசு நடத்தக் காசு இல்ல. கழுத்துல கிடந்த நகையக் கழட்டிக் கொடுத்துட்டா லச்சுமி. மாமியா நகையையும் சேத்துக் கொடுத்துட்டீகன்னா, அடமானம்வச்சு கேசு நடத்திருவேன். காலா காலத்துல மீட்டுக் குடுத்துருவேன். என்ன சொல்றீக?''

எமனையே ஏச்சு வாய்தா வாங்குற பய முத்துமணி. சாமியாரையும் மாமியாரையுமா ஏய்க்க மாட்டான்? ஏச்சுப்புட்டான்; மாமியா நகையையும் வாங்கிட்டான்.

கொஞ்ச நாளாச்சு.

கேசு முடியல; நகையும் வந்தபாடு இல்ல.

ஆனா, பய பையில பசை குறையல.

அந்த நேரத்துல பழைய பர்மாக்காரரு ஒருத்தரு எப்பவோ வாங்குன கடன இப்பக் கொடுத்துட்டாரு மாமனாருகிட்ட. இந்தக் காசை என்ன பண்றது?

கையில வச்சிருந்தா இதையும் எடுத்துத் தின்டுபுடுவான்.

களவாணிப் பூனை இருக்கிற வீட்டுல கருவாட்டுக்கு எத்தன நேரம் காவலுக்கு நிக்கிறது?

கூப்பிட்டாரு மருமகன.

''மாப்ள... மூளியா நிக்கிறாக எம் மகளும் எம் பொண்டாட்டியும். கண்ணு, காது, மூக்குல ஒண்ணுமே இல்லாம எம் மகள நான் பாத்ததேயில்ல. எம் பொண்டாட்டியும் கழுவிக் கவுத்த பாத்திரம் மாதிரி கேவலமாக் கெடக்கா. அவ கழுத்தப் பாத்துட்டு உன் புருசனுக்கு ஒண்ணும்இல்லையேன்னு கேட்டிருக்காக அனுமந்தம்பட்டிக் கலியாண வீட்டுல. நீங்க கேசு முடிச்சு நகையத் திருப்பறது கடல் வத்திக் கருவாடு திங்கிற கதையாப் போயிரும். ஒண்ணு சொல்றேன் கேளுங்க... கையில கொஞ்சம் காசு வந்திருக்கு இப்ப. கொடுக்கிறன்; அடகுகெடக்கிற நகைய மீட்டு அவுகவுக கழுத்துல போட்ருங்க. இந்தாங்க ரூபா. வட்டிக்கும் சேத்துக் கொடுத்துருக்கேன். வாங்கியாந்திருங்க மாப்ள.''

ஒரு வாரமாச்சு; ரெண்டு வாரமாச்சு; இந்தா இந்தான்னு இழுக்குது; நகை வந்தபாடு இல்ல. சாடைமாடையாக் கேட்டாலும் வெறி நாயி மாதிரி உர்ருன்னு உறுமுறான் முத்துமணி. பொண்டாட்டிக்காரி அழுத்திக் கேட்டா, மிச்சம்வைக்காமச் சோத்தத் தின்னுட்டு எச்சித் தட்டைத் தூக்கி அடிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பாத்தாரு மாமனாரு. விசுக்குன்னு ஒருநாள் பஸ்ஸு ஏறிட்டாரு தேனிக்கு. அடகுக் கடைக்குப் போயி இன்ன மாசம், இன்னார் பேருல எடுய்யா ரசீதன்னு எடுத்துப் பாத்தா, அடகுவைக்கக் கொடுத்த நகைய வித்துட்டுப் போயிருக்கான் வெங்கம்பய. நகையும் கிரயம் போயிருச்சு; அடகு மீக்கக் கொடுத்துவிட்ட காசும் ஆத்துல போயி ருச்சு. அண்ணனையும் கொன்டு புட்டு மதினியையும் மேச்ச கதையாகிப்போச்சு முத்துமணி கதை.

சாராயக் கடையில உக்காந்திருந்தவனப் பாத்து ரோட்டுக்கு அந்தப் பக்கம் நின்னு மாமனாரு கத்துனாரு:

''அடேய் முத்துமணி... நீ எனக்கு மாப்ளையுமில்ல; மனுசனுமில்ல.''

இட்லிக்கு எப்பவும் நாலு சட்னி வேணும் முத்துமணிக்கு. ஒரு மொளகாச் சட்னி - ஒரு தக்காளிச் சட்னி - ஒரு தேங்காச் சட்னி - ஒரு கொத்துமல்லிச் சட்னி. நாக்குக்கு இன்னைக்கு எது புடிக்குதுன்னு நமக்கென்ன தெரியும்? அதனால நாலும் இருக்கணும்கறது முத்துமணி முடிவு. சட்னியில நாலுக்கு ரெண்டு பழுதாகாதுங்கறது இன்னொரு தீர்மானம்.

சாப்பாட்டுக்கும் நெறத்துக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. வெள்ளை வெள்ளையா முழிமுழின்னு முழிக்கிற இட்லிய எத்தன நேரம் பாத்துக்கிட்டிருக்கிறது? சிவப்புல ஒண்ணு, பச்சையில ஒண்ணு, மஞ்சள்ல ஒண்ணு, ஆரஞ்சுல ஒண்ணுன்னு இட்லியச் சுத்தி இருந்தா, அது கண்ணு வழியா மூளைக்குப் போயி, ஏ நாக்கே... எந்திரின்னு உறங்கிக்கிடக்கிற நாக்கை உசுப்புமா இல்லையா? ஒரு ஓரமாப் பிச்சு இட்லிய நாலு சட்னியிலயும் தனித் தனியா நனைச்சு நாக்குல போட்டா, எந்தச் சட்னி அன்னைக்குத் தேறுதோ அதுலயே கதைய முடிச்சுரலாமில்லையா? நல்லது பொல்லதுக்கு நாலு பேரு வேணும்கிற மாதிரியே இட்லிக்கும் நாலு துணை வேணுமப்பா. கல்யாணம்முடிச்ச நாள்ல இருந்து இந்த விஷயத்துல கட்சி மாறுனது இல்ல முத்துமணி.

ஆனா, அவன் பொழப்புல சட்னியும் மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாக் குறையுது.

நாலு மூணாகி, மூணு ரெண்டாகி, ரெண்டு ஒண்ணாகி, இப்ப ஒண்ணும் கழிஞ்சு ஊறுகாயாகி, ஊறுகாயில் காயும் போயித் தொக்குல வந்து நிக்குது.

''வக்கீலப் பாக்கப் போகணும்; ஏழு மணிக்கே இட்லி வேணும்''னு அன்னைக்குக் கேட்டுட் டான் முத்துமணி.

அப்பத்தான் மாவு ஊத்துறா லச்சுமி.

பண்டபாத்திரம் வேற பத்துல கெடக்கு.

அவசர அவசரமா இட்லி சுட்டு, கைக்குச் சிக்குன ஒரு தட்டுல போட்டு ''நீங்களே போட்டுத் தின்னுட்டுப் போங்க''ன்னு ஊறுகா பாட்டில எடுத்து ஒரு ஓரத்துல வச்சுட்டா லச்சுமி.

இட்லியில ஆவி போகுது; அவனுக்கு மானம் போகுது.

ஊறுகா பாட்டில எடுத்து ஒரு பக்கமாச் சாச்சு, உள்ள கரண்டிய விட்டு, ஆளுங்கட்சிக் கூட்டத்துக்கு ஆள் சேக்கிற மாதிரி அடிப்புடிச்சுக் கிடந்த தொக்கை வம்பாடுபட்டு ஒண்ணு சேத்து அவன் எடுத்துவைக்க, பேய் புடிச்ச பொம்பள மாதிரி தடார்னு தட்டைத் தட்டிவிட்டா மாமியாக்காரி.

''ஏண்டி லச்சுமி... ஒனக்குப் புத்திகித்தி கெட்டுப்போச்சா? அது உங்கப்பன் சாமியார் மட்டும் திங்கிற தனித் தட்டுடி. யாரு தட்டுல யாரு திங்கிறது? சாமி திங்கிற தட்டுல வந்ததும் போனதும் வாய் வச்சா தெய்வக் குத்தம் ஆயிராதா? வேற தட்டு இருந்தாப் போடு; இல்ல, கையில வாங்கித் திங்கச் சொல்லு.''

கத்திக் குமிச்சவ தட்டுல கிடந்த இட்லியத் தலைகீழாக் கொட்டிட்டுத் தட்டைச் சுத்தித் தண்ணி தொளிச்சுக் கைபடாமக் கரண்டியில எடுத்துட்டுப் போனா கொல்லைப்பக்கம். அவமானத்துல எரிஞ்சு கரியாகிப்போனான் முத்துமணி.

அழகான ஊரு கோகிலாபுரம்.

காத்தாட வயக்காடு - விசிறிவிடத் தென்னந்தோப்பு - 'ஒங்க வம்புக்கு நான் வல்ல’ன்னு உத்தமபாளையத்தவிட்டு ஒதுங்கி நிக்கிற ஊரு.

அங்க ஒரு தென்னந்தோப்பு இருக்கு லச்சுமி பேருல. பேரன், பேத்திக்கு ஆகட்டுமேன்னு அவங்கப்பன் அத மட்டும் கோயிலுக்கு எழுதிவைக்கல.

அறுநூறு மரம்; ஏறுன வெட்டு - பதினாலாயிரம் காய் விழுகும். எறங்குன வெட்டு - எட்டாயிரம் காய் விழுகும்.

அந்தத் தோப்புக்கு எப்பவும் முத்துமணிதான் மராமத்து - போக்குவரத்து.

அன்னைக்குக் காய் எறக்க ஆளக் கூப்பிட்டுப் போயிட்டான் தோப்புக்கு.

போனா -

பழைய காவக்காரனக் காணோம்; ஒரு எளந்தாரி நிக்கிறான்.

அவன் வேலியோரமாவே தடுத்துட்டான் முத்துமணிய.

''அய்யா... தோப்பு குத்தகைக்கு விட்டாச்சு. இந்தக் காய் வெட்டு எங்க வெட்டு. இனிமே நீங்க எளநி குடிக் கணும்னாக்கூட, எங்க முதலாளியக் கேக்கணும். லச்சுமியம்மா புருசன்தான நீங்க? உங்க சம்சாரம் சொல்லலையா? போங்கய்யா; போயிட்டு வாங்க!''

கழுத்தத்தான் புடிச்சுத் தள்ளல காவக்காரன்.

''ச்சே... சிவலிங்கம் செக்காப் போயிருச்சுன்னா, அது மேல நாயும் நரியுமில்ல ஒண்ணுக்கு அடிக்குது. இது ஒரு பொழப்பா?''

மூக்கு சிவக்குது முத்துமணிக்கு.

மாமனாரு - மாமியாரு - பொண்டாட்டிகிட்ட அவமானப்பட்டபோது கூட முத்துமணிக்கு வருத்தம் இருந் துச்சே தவிர, வலி இல்ல.

என்னைக்குப் பிள்ளைகளும் சேந்து அவன் மேல ஒரு நொட்டச் சொல்லுச் சொல்லிருச்சுகளோ, அன்னைக்குத்தான் எவன் கழுத்த அறுத்தாச்சும் பொழச்சே ஆகணும்கிற முடிவுக்கு வந்தான் முத்துமணி.

இனி, ஆனைமலயான்பட்டிதான் அடைக்கலம்னு வந்த அன்னைக்கே பிள்ளைக ரெண்டையும் ராயப்பன்பட்டிப் பள்ளிக்கூடத்துல சேத்துட்டான். ஆரம்பத்துல அப்பன் மேல பிரியமாத்தான் இருந்துச்சுக பிள்ளைகளும். போகப் போகப் புத்தி மாறிப்போச்சு.

தாய் தகப்பன் மேல பிள்ளைகளுக்குப் பிரியம் குறையுதுன்னா, அது வெளிய இருந்து வர்ற விவகாரம் இல்ல. வேம்புக்குக் கசப்பும் கரும்புக்கு இனிப்பும் வெளிய இருந்தா வருது? நல்லதோ, கெட்டதோ உள்ள இருந்துதான் வரணும். அப்பன் மேல பிள்ளைகளுக்கு அவமரியாதை வருதுன்னா, புருஷனைப் பத்திப் பொண்டாட்டி நல்ல சொல்லுச் சொல்லி வளக்கலேன்னு அர்த்தம். ஆத்தா மேல பிள்ளைகளுக்கு ஆசை குறையுதுன்னா, பொண்டாட்டியப் பத்திப் புருஷன் நல்லெண்ணத்தை ஊட்டி வளக்கலேன்னு அர்த்தம். அம்மாவும் பாட்டியும் அப்பனைப் பத்தி மாத்தி மாத்திச் சொல்ல, அப்பனை ஒரு கீழ்ப் பார்வை பாத்துப் பழகுதுக பிள்ளைக. நல்ல தகப்பன் மேல பழி சொன்னாலே நம்பிரும் பிள்ளைக. முத்துமணி பாவம் பெறவியிலேயே விஷம். லேசா வத்திவைக்கவும் பசக்குன்னு பத்திக்கிருச்சுக பச்சைப் பிள்ளைக.

மோட்டார் சைக்கிள்ல கூட்டியாந்து பள்ளிக்கூடத்துல எறக்கிவிட வந்த தகப்பனைப் பாத்து அஜய்தேவும் ரூப்கலாவும் வார்த்தையத் தேச்சுத் தேச்சுப் பேசுறாக... ''டாடி! எங்க பள்ளிக்கூடத்துக்கு இனி நீங்க வர வேணாம். எங்க டீச்சரெல்லாம் எங்கள ஒரு மாதிரி பாக்குறாங்க.''

பிள்ளைக சொன்ன அந்த வார்த்தையிலதான் முத்துமணிக்குள்ள இருந்த அத்தனை மிருகமும் மொத்தமா எந்திரிச்சுக் காச்மூச்னு கத்திக் குமிச்சுருச்சுக.

பட்டினி கிடந்த நாய்க்கு வெறி புடிக்குமாமில்ல; புடிச்சுருச்சு முத்துமணிக்கு.

கால் நடுங்குது கருத்தமாயிக்கு. உடம்பு முன்னப் போனாலும் நெஞ்சப் புடிச்சு யாரோ பின்னுக்குத் தள்ளுற மாதிரி தெரியுது. முப்பத் தேழு வருசம் கழிச்சு அந்த வீட்டுப்படி மிதிக் கணுமா? எனக்கு அந்த யோக்கியதை இருக்கா? சரி... வேற வழி இல்ல. கடன் கேப்போம்; இல்லேன்னு சொல்லிட்டா, பழைய தப்புக்கு மன்னிப்புக் கேட்டுட்டுத் திரும்பிருவோம்.

நெஞ்சை இறுக்கிப் புடிச்சுக்கிட்டுத் துணிஞ்சு ஏறிட்டாரு கவட்டைக்காலன் வீட்டுக்குள்ள. உள் வாசல்ல மேஞ்சுக்கிட்டிருந்த கோழிக எல்லாம் இவரைக் கண்டதும் ஓடி ஒளியுதுக. பசு மாடும் வெள்ளாடும் வெறிச்சு வெறிச்சு இவரைப் பாக்குதுக. சக்கர நாற்காலியில உக்காந்திருக்கான் கவட்டைக்காலன் மகன். அவனுக்கு காப்பி ஆத்திக் கொடுத்துக்கிட்டு இருக்கான் ஒரு பொடிப் பய. ரெண்டு காலும் விளங்காமலே பெறந்தவன் அவன். தாய் மடி, பொண்டாட்டி மடி எல்லாமே அவனுக்குச் சக்கர நாற்காலிதான். கருத்தமாயி கவட்டைக்காலனை வெட்டியெறிஞ்சப்ப ஆறேழு வயசு அவன் மகனுக்கு. இப்ப நாற்காலி கொள்ளாம உடம்பு பெருத்துப்போயி, தாடி மீசையோட ஒரு பக்கமாச் சாஞ்சு ஒரு மார்க்கமா உட்காந்திருக்கான். அவனக் கையெடுத்துக் கும்புட்டாரு கருத்தமாயி.

''யப்பா... உங்க குடும்பத்துக்குக் கடன்பட்டவன் வந்திருக்கனப்பா. உங்க பரம்பரைக்கு என்னால ஒரு கெட்டது நடந்துபோச்சு. அது நான் எண்ணிச் செஞ்ச காரியமில்ல மகனே... என்னமோ அது ஒரு காலக் கூத்து. செயிலவிட்டு ஏழே வருசத்துல வெளிய வந்துட்டேன். ஆனா, மனசாட்சியவிட்டு இன்னைக்கு வரைக்கும் வெளிய வர முடியல. என்னைக்காவது உன் குடும்பத்துக்குப் பட்ட கடனைத் தீத்திருவேன். ஆனா, உங்க பரம்பரைக்குச் செஞ்ச பாவத்த என்னைக்குத் தீக்கப்போறேன்?''

கண்ணுல லேசாத் தண்ணி ஊறித் தொண்டை கட்டிப்போயிக் குரல் உடையுது கருத்தமாயிக்கு.

ஆனா, கருத்தமாயி நெனைக்கல கவட்டைக்காலன் மகன் முருகராசு சாமி குறி சொல்ற மாதிரி அம்புட்டு அழகாப் பேசுவான்னு.

''நீங்க முப்பத்தேழு வருசமா மறக்காம இருக்கீக. ஆனா, எங்க குடும்பம் அத மூணே மாசத்துல மறந்திருச்சு பெரியப்பா. பெறப்பை ஒரு வழியில வச்சுட்டு, சாவைப் பல வழிகள்ல வச்சிருக்கு கடவுளு. எங்கப்பனை நீங்க கொல்லல; உங்க வழியா அவுருக்குச் சாவு வந்திருக்கு. அத மறந்துருங்க. உக்காந்து டீ குடிங்க. வந்த காரியம் சொல்லுங்க...''

''உங்க கடனைக் கட்டவும் எங்க குடும்பத்த நிமித்தவும் இப்ப ஒரு காலம் கைகூடி வந்தி ருக்கு முருகராசு. பழைய பத்திரத்து மேல ஒரு லச்ச ரூவா எச்சாக் கொடுத்தீங்கன்னா, என் சின்னப் பயல அமெரிக்காவுல ஒரு படிப்புப் படிக்க வச்சு ஆளாக்கி அழகு பாத்திருவேன். இல்லேன்னு சொல்லிராத மகனே. ஏறாத படி ஏறி வந்து கேட்டிருக்கேன்!''

முருகராசு ஒண்ணும் பேசல.

தலைய அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி உதடு பிதுக்கி உச்சு மட்டும் கொட்டிக்கிட்டான்.

''என்ன பெரியப்பா... பத்திரத்து மேல கடன் கேக்குறீகளே... பத்திரம் இல்லையே.''

''பத்திரம் இல்லையா? என்னப்பா சொல்ற?''

''நேத்துதான உங்க மகன் கடனக் கட்டிப் பத்திரத்த வாங்கிட்டுப் போனான்.''

''என் மகனா? சின்னப்பாண்டியா?''

''இல்ல. முத்துமணி!''

இடி வந்து விழுந்திருச்சு கருத்தமாயி தலையில.

'யாத்தே... இத்தன வருசமாப் பாம்பு வாயில கிடந்த பத்திரம் இப்ப முதலை வாய்க்குப் போயிருச்சே...’

கதி கலங்கிக் கண்ணு இருண்டு உலகமே மங்கி மறையுது கருத்தமாயிக்கு.

- மூளும்