Published:Updated:

இன்னோர் இளவழகி

சலவைத் தொழிலாளியின் சாதனை மகள்

##~##

'சாதிக்க வசதி வாய்ப்புத் தேவை இல்லை;  திறமை, கடின உழைப்பு போதும்கிறதுக்கு எங்க பகுதியில உள்ள எட்டாம் வகுப்பு மாணவி நாகஜோதியே உதாரணம். இந்திய அளவில் கேரம் விளையாட்டுல சத்தம் இல்லாம ஏகப்பட்ட சாதனைகள் செய்திருக்கு இந்தப் பொண்ணு. இந்த ஏழ்மையான பொண்ணு செய்திருக்கிற சாதனைகளை 'என் விகடன்’ ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமா?’ - இது வடசென்னை வாசகர் பாலகுமார் வாய்ஸ் ஸ்நாப்பில் நமக்குத் தந்த தகவல். நாகஜோதியை வியாசர்பாடி, ஜெகஜீவன்ராம் நகர், இரண்டாவது தெருவில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தேன். வீட்டில் உள்ள ஒரே அறையையும் நாகஜோதிகேரம் விளையாடும் வகையில் வடிவமைத்து இருக்கிறார் அவருடைய அப்பா காத்தவராயன்.

 ''சின்ன வயசுல இருந்தே அப்பா, அண்ணன்கூட கேரம் விளையாடுவேன். அப்பாதான் என் குரு.அவர் தான் எனக்கு கேரம் விளையாட்டை அறிமுகம் செஞ்சுவெச்சார். அஞ்சாவது படிக்கிறவரை வீட்டுல தான் விளையாடுவேன். அப்ப எங்க வீட்டுக்கு அடிக்கடி வர்ற பால்ராஜ் என்ற அண்ணன், 'பொண்ணு சூப்பரா விளையாடுதே, டிரெயினிங் கொடுத்தா நிச்சயம் போட்டிகள்ல ஜெயிக்கும்’னு சொல்லி, நேரு ஸ்டேடியத்துல இருக்கிற இலவச கோச்சிங் சென்டருல சேர்த்துவிட்டார். 'நல்லா அருமையா விளையாடுறே பாப்பா. இந்திய அளவில் நடக்கிற போட்டியில கலந்துக்க உன்னைத் தேர்வு செய்திருக்கோம்’னு எனக்கு டிரெயினிங் தந்த ஆனந்த் சார் சொன்னப்ப எனக்குத்தலை கால் புரியலை. இது ஒரே ஒரு மாசடிரெயி னிங்ல கிடைச்ச வாய்ப்பு. முதல் போட்டியே குஜராத்ல. பயம், பதற்றத்தால அதுல என்னால ஜெயிக்க முடியாமப் போயிடுச்சு'' என்கிற நாகஜோதி தன் வெற்றிக் கதையைச் சொல்கிறார்.  

இன்னோர் இளவழகி

''அதுக்குப் பிறகு விஜயராஜ், ஆனந்த் சார் ரெண்டு பேரும் அசோசியேஷன்ல தீவிரமாப் பயிற்சி தந்தாங்க. 'பயம்தான் உன் பிரச்னை’னு புரியவெச்சாங்க. 'பயந்தா வீட்டுக்குள்ளேயே இருக்கவேண் டியதுதான்’னு நானும் புரிஞ்சுக்கிட்டேன். பிறகு தேசியப் போட்டிகள்ல யாரும்எதிர் பார்க்காத மாதிரி விளையாடிப் பரிசுகள் வாங்கினேன். அடுத்து இன்டர்நேஷனல் பிளேயர் யுவராணிகூட டபுள்ஸ் ஆடும் வாய்ப்பு. 'சின்ன பொண்ணுனு நினைக் காம நம்மளை நம்பி ஆட வர்றாங்களே’னு எனக்குச் சந்தோஷம். அதே சந்தோஷத் தோட அதில் விளையாடினேன். ஜெயிச் சுட்டோம். அதுக்குப் பிறகு நான் விளை யாடின போட்டிகள் எல்லாத்துலயும் வெற்றி தான். இந்த மூணு வருஷத்துல மாவட்ட அளவில் நடந்த ஆறு போட்டிகள்லயும் முதல் பரிசு. உங்களுக்கு ஒண்ணு சொல்லட்டுமாண்ணா, நான் மொத்தம் கலந்துகிட்டதே இந்த ஆறு போட்டிகள்தான்'' என்று சொல்லி சிரித்த நாகஜோதி தொடர்கிறார்.

இன்னோர் இளவழகி

''மாநில அளவில் மூணு, தேசிய அளவில் ஆறுனு நிறைய பரிசுகள் வாங்கியாச்சு. இந்த மாதிரி நான் பரிசு வாங்குறதுக்கு எங்க அம்மா வும், தெருப் பசங்களும் ஒரு காரணம். எப்பவும் இவங்ககூடதான் கேரம் விளையாடுவேன். பெரும்பாலும் தெருவுல ஸ்டூல் போட்டு அது மேல கேரம்வெச்சு காத்தோட்டமா விளையா டிட்டு இருப்பேன். கேரம் விளையாட்டை ஒலிம்பிக்ல சேர்க்கப்போறதா எங்க சார் சொன்னார். அப்படிச் சேர்த்தா கண்டிப்பா தங்கம், வெள்ளினு நாட்டுக்காக நிறைய பதக்கங்களை அள்ளிட்டு வந்துடுவேண்ணா'' என்று சந்தோஷ மாகச் சிரிக்கிறார்.

இன்னோர் இளவழகி

நாகஜோதியின் அப்பா காத்தவராயன், ''வெளி மாநிலங்களுக்குப் போகணும்னா ரொம்ப செலவாகுமேனு ஆரம்பத்தில் தயங்கி னேன். பங்காரு பாபு, ஆனந்த் சார்னு கேரம் அசோசியேஷனைச் சேர்ந்தவங்கதான் இவ ளுக்குப் பயிற்சியும் கொடுத்து தேசியப்போட்டி கள்லேயும் கலந்துக்கவெச்சது. நானும் இப்ப பொண்ணுங்க, பசங்கன்னு வியாசர்பாடியில 40 பேருக்கு இலவசமா கேரம் சொல்லித் தர்றேன். என் பொண்ணுக்குச் சொல்லித் தர்ற மாதிரியே அவங்களுக்கும் சொல்லித் தர்றேன். ஊரார் புள்ளையை ஊட்டி வளர்த்தா நம்ம பிள்ளை தானா வளரும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கள்ல, அதனாலதான் என் பொண்ணு இவ்வளவு பரிசு குவிச்சிருக்கானு நினைக்கிறேன்'' என்று வெள்ளந்தியாகச் சிரிக்கிறார்.  

கண்முன்னே பிள்ளைகள் பாராட்டப்படுவதுதானே பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

அடுத்த கட்டுரைக்கு