##~##

''மார்க்கெட் நெரிசல், தண்ணீருக்காகக் குடங்களோடு வீதியில் போராடும் பெண்கள் எனப் பரபரப்பான திருவல்லிக்கேணி காட்சிகளோடு கடந்தன எங்கள் பள்ளி நாட்கள். 'திருவான்மியூரில் ஆருத்ரா தரிசனத்தில் சிவன் ஆடிக்கொண்டே வருவார்’ எனக் கேள்விப்பட்டு 19-எம்மில் தொடங்கியது அடையாறை நோக்கிய எங்கள் பயணம். ராயப்பேட்டை, மந்தைவெளி கடந்து வருகிறபோது நகரத்தின் விளிம்பில் இருந்து அழகான ஒரு கிராமத்தை நெருங்குகிற உணர்வு அடையாறை நெருங்கும்போது உண்டாகியது. அன்று பார்த்த அடையாறு ஆறு, 'இது சென்னைதானா?’ என்ற கேள்வியை மனதில் எழுப்பியது. 'லாட்டிஸ் பிரிட்ஜ் சாலை’ சென்னை மொழியில் அன்று 'பலகை வாராவதி சாலை’ என அழைக்கப்பட்டது. அதைக் கடக்கும்போது தென்பட்ட ஓடு வேய்ந்த கடைகள், மரங்கள் அடர்ந்த சாலைகள் அடையாறு மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தின'' - அடையாறு பற்றி தீராத காதலுடன் பேசுகிறார்கள் இரட்டை எழுத்தாளர்கள் சுபா.

என் ஊர் : அடையாறு

''எம்.ஆர்.சி. நகர் வழியாக இங்கு வரும்போதும் சரி, ராஜ்பவன் வழியாக வரும்போதும் சரி சென்னையின் வெம்மை நீங்கி உங்களைக் குளுமை அணைத்துக்கொள்ளும். சென்னையில் இயற்கையே ஏ.சி. செய்து இருக்கும் ஒரு பகுதி என்றால், அது அடையாறு மட்டும்தான். பறவைப் பார்வையில் சென்னையைப் பார்த்தால் மிச்சப் பகுதிகள் கட்டடங்களால் சூழப்பட்டு இருக்கும் நிலையில், அடையாறு மட்டுமே பசுமையால் போர்த்தப்பட்டு இருக்கும். இந்தப் பகுதி அப்போது பெரும்பாலும் காடுகள் சூழப்பட்டு இருந்ததால் மக்கள் இங்கு வசிக்க விரும்பவில்லை. இதை மக்கள் புழங்கும் ஓர் இடமாக மாற்ற விரும்பிய அன்றைய முதல்வர் ராஜாஜி, இங்கு பல்வேறு வீடுகளைக் கட்டி, திரைக் கலைஞர்களுக்குக் கொடுத்தார். இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு ஏரியாக்களுக்கு காந்தி, நேரு, கஸ்தூரிபா, ஜீவரத்தினம், பக்தவத்சலம், காமராஜர் என தேசத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டினார். அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆரின் சத்யா ஸ்டுடியோவில் அவரையும் படப்பிடிப்பையும் பார்க்க எப்போதும் கூட்டம் அலைமோதும்.

ஈராஸ் திரையரங்கம், அடையாறின் அடையாளம். அது ஒரு கிராமத்து டென்ட் கொட்டகையை நினைவுபடுத்தும். அதற்கு எதிரே ஓடு வேய்ந்த டீக்கடைகள் இருக்கும். அதனுள் பெரிய மரத் தூண்கள் வரிசையாக இருக்கும். அதன் திண்ணைகளில் படம் பார்த்த களைப்பு நீங்க உட்கார்ந்து வருவோம். இன்றைக்கு அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு மண்டபம் ஆகி, பின் கார் ஷோ ரூம் ஆகவும் மாறிவிட்டது. எனினும் அந்த வழியான பயணங்கள் எங்கள் நினைவுகளைக் கிளறிவிடும்.

என் ஊர் : அடையாறு

அடையாறு ஆலமரம், ஐ.ஐ.டி., காந்தி மண்டபம், ராஜ் பவன் என்று பசுமையின் போர்வையும் அதில் குடிகொண்டு கீதம் பாடும் பறவைகளின் பங்களிப்பும் இன்னமும் அப்படியே இருப்பது எங்கள் பகுதியின் தனித்துவம். அடையாறு ஆற்றின் கரை யோரம் பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால் அதைச் சுத்தமான நீரோடு பார்க்க இயலாது. ஆனால், அந்த நீரைக் களங்கம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றால் தியோசபிகல் சொசைட்டிக்குப் போக வேண்டும்.

எங்கள் பகுதி வழிபாட்டுத் தலங்கள் ரொம்பவே பிரபலம். அஷ்டலக்ஷ்மி, மருந்தீஸ்வரர் ஆலயங்கள், அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், பழமையான மசூதி என இவை பல தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் சின்னங்கள். மாபெரும் தத்துவ மேதை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் 'தி ஸ்கூல்’ இங்கேதான் இருக்கிறது. இசைக் கல்லூரி, நாட்டியத்தில் இன்னமும் பிரகாசிக்கிற கலாஷேத்ரா ஆகியன இந்தப் பகுதியின் மறக்கவே முடியாத இடங்கள்.

என் ஊர் : அடையாறு

சுபாவாகத் தொடங்கிய எங்களின் எழுத்துப் பணி, மிகப் பெரிய பரிணாமங்களைத் தொட்டது அடையாறில்தான். அடையாறு என்றைக்கும் அடையாளத்தை இழக்காத ஒரு சின்ன பூலோக சொர்க்கம்!''

பூ.கொ.சரவணன்
படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு