##~##

'குப்பைத்தொட்டி டாட் காம்’. (www.kuppathotti.com) குப்பையைக் காசாக்குவது, பொது இடங்களில் குப்பைப் போடுவதைக் குறைப்பது என இந்த இணையதளம் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கிறார் ஜோசப் ஜெகன்.

 ''சொந்த ஊர் திருநெல்வேலி. அங்கேயே எம்.சி.ஏ. முடித்துவிட்டு சென்னையில் ஒரு எம்.என்.சி-யில் வேலை. என் மனைவி சுஜாதா, கல்லூரியில் எனக்கு ஜூனியர். காதலித்துத் திருமணம் செய்தோம். அவருக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை. இருவரும் புதுமையாக ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று விரும்பினோம். பல யோசனைகள் செய்தும் எதுவும் பிடிபடவில்லை. 'ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. வீட்டுலயே குப்பையைப் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்’ என சலிப்புடன் என்னை அறியாமல் சொன்ன 'குப்பை’ என்ற வார்த்தைதான் இந்த இணையதளம் உருவாகக் காரணம். 

இது 'குப்பை' மேட்டர்தான்!

மக்கள் சேகரித்துவைத்துள்ளக் குப்பைக்கு நியாயமான விலைகொடுத்து வாங்கி மறுசுழற்சி செய்யலாம், இதன் மூலம் பொது இடங்களில் குப்பையையும் குறைக்கலாமே என இது டூ-இன்-ஒன் கான்செப்ட். இந்திய அளவில் முதல் 500 பணக்காரர்களில் ஸ்க்ராப் தொழில் செய்யும் ஒரு மனிதரும் இருந்தது எங்களுக்குப் பெரிய ஊக்கமாக இருந்தது. சென்னையில் யார் எல்லாம் அதிகமாகக் குப்பை போடுகிறார்கள் என ஆய்வு செய்தோம். குப்பைக்குக் காசு என விளம்பரப்படுத்தினால் நடுத்தர மக்கள் ஆர்வமாகக் குப்பையைச் சேகரித்து விற்கத் தயாராக இருப்பார்கள் எனப் புரிந்தது. ஆனால், குப்பையை நேரில் கொண்டுவந்து தர அவர்களுக்கு நேரம் இல்லை. அது மட்டும் இல்லாமல் எடையில் ஏமாற்றுவது, சரியான பணம் தராததுதான் குப்பை சேகரித்தலை நல்ல தொழிலாக வளர்க்க வில்லை எனப் புரிந்தது. முகவரி, செல்போன் எண்ணுடன் பல்வேறு தரப்பினர் கொண்ட இணையதளத்தை உருவாக்குவது என முடிவு செய்து தொடங்கப்பட்டதே 'குப்பைத் தொட்டி டாட் காம்’. இந்தப் பெயர் என் மனைவி சுஜாதாவின் தேர்வு. இப்படி ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பது என முடிவு எடுத்ததும் முதலில் அவர் தன் வேலையை ராஜினாமா செய்தார்.

இது 'குப்பை' மேட்டர்தான்!

எங்களை அணுகும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் கண் முன்னே குப்பையை எடைபோட்டு வாங்கி அதற்கு உரிய பணத்தைத் தருவது என்று முடிவு செய்தோம். இந்தத் திட்டத்தை விளக்கி நோட்டீஸ் போட்டு விநியோகித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு. என் சொந்த டாடா ஏஸ் வண்டியில் நானும் என் நண்பரும் சேர்ந்து ஒவ்வொரு வீடாகப் போய் குப்பை சேகரித்தோம். இந்த நான்கு மாதத்தில் எங்கள் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை ஆறாயிரம். குப்பையை சேகரிக்கும் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அடையாள அட்டையும் தந்து இருக்கிறோம். இவர்களின் சேவையில் குறைபாடு இருந்தால் உடனடியாக இணையத்தின் மூலமோ செல் போனிலோ புகார் செய்யலாம். இந்த வசதி எங்கள் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியது.

இப்படி சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு விற்கிறோம். மற்ற ஊர்களில் முகவர்களைவைத்து இதை விரிவுபடுத்தலாம் என்றிருக்கிறோம். எங்கள் துண்டு பிரசுரங்களைப் பார்த்து பி.டி.ஐ. செய்தி நிறுவனம் எடுத்த பேட்டி டெல்லி, மும்பை, கொல்கத்தா நகரப் பத்திரிகைகள் மூலம் எங்களை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்தது. இதனால் பல பெரிய நிறுவனங்கள் எங்களுக்குக் குப்பை தர முன் வந்துள்ளன. நானும் என் வேலையை சமீபத்தில் ராஜினாமா செய்துவிட்டு குப்பைத் தொழிலில் முழு நேரமாகக் களம் இறங்கிவிட்டேன். குப்பையைக்குறைப்பதோடு, அதை ஒரு நிறைவான தொழிலாகவும் மாற்ற முடிந்து இருக்கிறது'' என்கிறார் ஜோசப்.

இது 'குப்பை' மேட்டர்தான்!

பூ.கொ.சரவணன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு