Published:Updated:

என் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது!

என் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ராஜேஷ் தேவராஜ். இவரின் ஆழமான புன்னகைக்குப் பின்னால் கொட்டிக்கிடக்கிறது எண்ணிலடங்கா சோகம்.

 ''நான் பிறந்தபோதே 'மெகாயூரேட்டர்’ என்ற சிறுநீரகக் குழாய்க் குறைபாடோடுதான் பிறந்தேன். இது, இன்று எளிதில் சரி செய்யக்கூடிய பிரச்னை. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன் எளிமையான மருத்துவச் சிகிச்சைக்கு வழி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. ஒரு வயதுகூட நிரம்பாத என் உடம்பில் அன்று கிட்டத்தட்ட 100 தையல்கள். 'அறியாமை அதிர்ஷ்டம்’ என்று சொல்வார்கள் இல்லையா, அன்று நான் சின்னப் பையனாக இருந்ததால் அன்றைய வலி இப்போது தெரியவில்லை. ஆனால், அதன் அடையாளம் என் இடுப்பைச் சுற்றி இன்னமும் தழும்புகளாக உள்ளன.

என் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது!

அதன்பிறகு பெரிதாக எந்தச் சிக்கலும் இன்றி வாழ்க்கை நகர்ந்தது. ஆனால், உடல் பரிசோதனைகள் தொடர்ந்தன. அந்த வலியில் இருந்து விலக, நான் டென்னிஸ் மட்டையைக் கையில் எடுத்தேன். மகேஷ் பூபதியை எல்லாம் தோற்கடித்து இருக்கிறேன். தேசிய அளவில் விளையாடிய நான், ஒரு கட்டத்தில் படிப்பே முக்கியம் என முடிவு செய்தேன். கோவை சி.ஐ.டி. கல்லூரியில் பி.இ. முடித்துவிட்டு எம்.எஸ். படிக்க அமெரிக்கா சென்றேன். திரும்பி வந்தபோது பல சவால்கள். மீண்டும் சிறுநீர்க் குழாய்ப் பிரச்னை. 'க்ரானிக் ரீனல் ஃபெயிலியர் ஏற்பட வாய்ப்பு அதிகம்’ என்றது மருத்துவம். 'மாற்று சிறுநீரகம் பொருத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை’ என்றனர்.

என் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது!

என் சகோதரன்,  சகோதரி இருவரும் எனக்காகச் சிறுநீரகம் தர முன்வந்தாலும் அவர்களின் உடல் நலம் சரியாக இல்லாததால் இருவரும் நிராகரிக்கப்பட்டனர். ஆனால், என் 61 வயது அம்மாவின் சிறுநீரகம் எனக்கு ஒத்துப்போனது. நல்ல உடல் நலத்தோடு இருந்தால் எந்த வயதிலும் சிறுநீரகத்தைத் தானம் செய்யலாம் என்பதற்காக இதைச் சொல்கிறேன். பக்கத்து படுக்கையிலேயே அம்மா, இடுப்புப் பகுதியில் கட்டோடும் கண்ணீரோடும் பிள்ளை பிழைத்துவிடுவான் என காத்து இருந்த தருணம் நெஞ்சில் இன்னமும் நிற்கிறது. மீண்டும் மருந்துகள், மருத்துவர்கள் என நீண்ட பயணத்துக்குப் பிறகு உடல் நலம் தேறி டென்னிஸ் மட்டையை 37-வது வயதில் மீண்டும் எடுத்தேன்.

திடீர் என ஒருநாள் இடுப்புக்குக் கீழே ஆளைக் கொல்கிற வலி. 'இது அபூர்வமான குறைபாடு. தொடர்ந்து ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டதால் இடுப்பு, தொடைக்கு நடுவில் ரத்த ஓட்டம் நின்றுவிட்டது. இதனால் எலும்புகள் வலுவிழந்து உடைந்துபோக நேரிடலாம். உடலின் முக்கியமான பகுதிகள் செயல் இழக்கவும் வாய்ப்பு உண்டு. இடுப்பு, வயிற்றுப் பகுதிக்குச் சிக்கல் தருகிற எந்த ஒரு பயிற்சியையும் செய்யக்கூடாது’ என்றனர் மருத்துவர்கள். நான் இடிந்து போகவில்லை. காலம் என் கவலைகளை மறக்கடித்தன. சைக்கிளிங் மீது காதல் பிறந்தது. சைக்கிளிங்கால் எந்தக் கேடும் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டேன். ஓயாமல் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். வாரத்துக்கு 250 கி.மீ. ஓட்டும் அளவுக்குப் பயிற்சி செய்தேன். போட்டிகளில் களம் இறங்கி இளைஞர்களைப் பின்னுக்குத் தள்ளினேன். நம்புங்கள், எனக்கு அப்போது 40 வயது!

தமிழ்நாடு சைக்கிளிங் சங்கப் போட்டிகளில் முதல் ஐந்து பேரில் ஒருவன் ஆனேன். பிறகு என்னைப் போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கான, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளவில் நடைபெறும் சைக்கிளிங் போட்டியில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டேன். 24 பேர் கலந்துகொண்ட 30 கி.மீ. போட்டியில் நான் 13-வது இடம். அடுத்த வருடம் நிச்சயம் மெடல் வாங்குவேன்.

என் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது!

இந்தப் பேட்டி மூலம் வாசகர்களுக்குச் சொல்ல என்னிடம் எதுவுமே இல்லை, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாலும் தன்னம்பிக்கையோடு வாழலாம் என்பதைத் தவிர!''

- பூ.கொ.சரவணன்
படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு