Published:Updated:

பப்பிக்கு பல் விளக்கி விடணும்!

பப்பிக்கு பல் விளக்கி விடணும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

'ஸில்கிக்கு நகத்தை கட் பண்ணிட்டு ஷாம்பு வாஷ் பண்ணிடுங்க. ஹீராவுக்கு ஈரம் காய்ஞ்சுடுச்சுனா, ஹேர் கலரிங் ஆரம்பிச்சுடலாம். இவ தலைக்குப் புது கலர் கொடுங்க. ஒரே கலர் கொடுத்தா அவளுக்கே போரிங்கா இருக்கும்'' - பரபரவென இயங்குகிறது அந்த பியூட்டி பார்லர். குளிரூட்டப்பட்ட அறைகளில் பிட்டு துணிகூட போட்டுக்கொள்ளாமல் பப்பி ஷேம் போஸ்களில் லயிக்கிறார்கள் கஸ்டமர்கள். உடனே கற்பனையைக் கண்டபடி விரிக்க வேண்டாம். இது செல்லப் பிராணிகளுக்கான 'ச்சோ ஸ்வீட்’ பியூட்டி பார்லர்!

 கோவை சாய்பாபா காலனியில் உள்ளது நாய்கள் மற்றும் பூனைகளுக்கான பியூட்டி பார்லர். பெரும்பாலும் போனில் முன்பதிவு செய்து விட்டுதான் வருகிறார்கள் உரிமையாளர்கள். பார்லருக்குள் வந்ததும் புதியவர்களைப் பார்த்து மிரண்டு, உர்ர்ர்... என முறைக்கும் நாய்கள், சொகுசான டேபிளில் ஏற்றிவிடப்பட்டு, லேசாக வருடப்பட்டதும் அப்படியே மயங்கிவிடுகின்றன.  

பப்பிக்கு பல் விளக்கி விடணும்!

நடிகர் அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஏற்கெனவே சென்னையில் இதுபோன்ற பியூட்டி பார்லரை நடத்திவருகிறார். தற்போது அதன் கிளையைக் கோவையிலும் சமீபத்தில் தொடங்கி இருக்கிறார்.

''நிறையப் பேருக்கு செல்லப் பிராணிகளை முறையாகப் பராமரிக்கத் தெரியறதும் இல்லை; அதுக்கான நேரமும் இல்லை. இந்தக் குறையைப் போக்கத்தான் சென்னையில விளையாட்டா இந்த அழகு

பப்பிக்கு பல் விளக்கி விடணும்!

நிலையத்தை ஆரம்பிச்சோம். கோவை மக்களுக்குச் செல்லப் பிராணிகள் மேலே பெரிய காதல் உண்டுங்கிறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். அதனாலதான் கோவையிலும் கிளையை ஆரம்பிச்சோம். நல்ல வரவேற்பு இருக்குது...'' என்கிறார் சுரேஷ் சந்திரா உற்சாகமாக!

பியூட்டி பார்லரின் மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன், ''நாய்களுக்குக் கண்டிப்பா பல் தேய்ச்சுவிடணும். இந்த அவசியம் நாய் வளர்க்கிற எத்தனை பேருக்குத் தெரியும்? சிக்கன், மட்டன், பிஸ்கட்னு சாப்பிட்டுப் பல்லைச் சுத்தம் பண்ணாம இருந்தா வயிற்றுப்போக்கு, பல் சொத்தை, ஈறு வீக்கம், குடல் நோய் ஆகியவை வர வாய்ப்பு இருக்கு. அதனால பல் விளக்குறது, நகங்களை கட் பண்றது மாதிரியான வேலைகளைச் செய்றோம். 'இதை வீட்டுலயே பண்ணிக்கலாமே?’னு சிலருக்குத் தோணலாம். நகங்களை கட் பண்றப்போ ரொம்ப ஜாக்கிரதையாச் செய்யணும். நாயோ அல்லது நீங்களோ கொஞ்சம் அசட்டையா இருந்துட்டாலும் சதை, நரம்புகள் சேதமடைஞ்சுடும். நகங்களை கட் பண்ணிவிடலைன்னா, அதுங்க பாசத்தோட நம்ம மேலே தொத்துறப்ப நமக்கும் காயங்கள் ஏற்படும். அதேபோல நாயை அடிக்கடி குளிப்பாட்டி ஆரோக்கியமா வெச்சுக்கணும்.

பப்பிக்கு பல் விளக்கி விடணும்!

முடி அதிகம் இருக்கும் பொமரேனியன் மாதிரியான நாய்களுக்கு அழுக்கு சேர்ந்து முடி பின்னிப் பிணைஞ்சுட்டா பார்க்க அசிங்கமா இருக்கும். பூச்சிகளும் சேர்ந்துடும். நாங்க அந்த முடியை வெட்டாம அழகா, நேர்த்தியாப் பிரிச்சு விடுறோம். இதே மாதிரிதான் பூனைகளுக்கும். இங்கே செல்லப் பிராணிகளின் தோல் மற்றும் உடம்பைப் பாதிக்கிற எந்த ரசாயனத்தையும் நாங்க பயன்படுத்துறது இல்லை. மூலிகை தயாரிப்புகளால் மட்டுமே மசாஜ் பண்ணி, குளிப்பாட்டுறோம். செல்லப் பிராணிகளும் நம்ம குழந்தைங்க மாதிரிதாங்க. அவங்களையும் ஆரோக்கியமாவெச்சுக்க வேண்டிய அவசியம் இருக்குங்க!'' என்கிறார் அழுத்தமாக.

- எஸ்.ஷக்தி
படங்கள்: கே.ஆர்.வெங்கடேஸ்வரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு