Published:Updated:

டோர்ஜி காண்டு கதி என்ன?-3ம் நாளாக தேடுதல் தீவிரம்

Vikatan Correspondent

இடாநகர், மே 2,2011

டோர்ஜி காண்டு கதி என்ன?-3ம் நாளாக தேடுதல் தீவிரம்

அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் மாயமாகி 48 மணி நேரம் முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாவது நாளாக தேடுதல் பணி இன்றும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் யூரோகாப்டர் பி3 ரக ஹெலிகாப்டரில் டோர்ஜி காண்டு உள்ளிட்ட 5 பேர் தவாங்கில் இருந்து மாநிலத் தலைநகர் இடாநகருக்குப் பயணம் செய்தனர். இரு விமானிகள் அந்த ஹெலிகாப்டரை இயக்கினர்.

இடாநகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாங்கில் இருந்து சனிக்கிழமை காலை 9.56-க்கு புறப்பட்டது. அது 11.30 -க்கு இடா நகருக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் தவாங்கில் புறப்பட்ட 20 நிமிஷங்களிலேயே அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான அனைத்து தொடர்புகளையும் இழந்தது. ##~~##

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்குமோ என்று பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தேடுதல் பணி தீவிரமானது.

தேடும் பணியில் விமானப்படையின் சுகோய், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை சுமார் 2 மணி நேரம் மட்டுமே தேடும் பணி நடைபெற்றது.

பூடான் எல்லைப் பகுதி, தவாங் - இடாநகர் இடையே காணமல் போன ஹெலிகாப்டர் தென்படுகிறதா என்று தேடப்பட்டது. ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. திஸ்பூர், 

வான் வழியாக மட்டுமல்லாது, முதல்வரின் ஹெலிகாப்டர் சென்ற பகுதியில் இந்திய ராணுவத்தின் 2,400 வீரர்கள் பல குழுக்களாகப் பிரிந்து தரைவழியாகவும் தேடி வருகின்றனர். இந்திய- பூடான் எல்லையில் இப்பணி நடைபெறுகிறது. இன்றும் இப்பணி தொடர்ந்துள்ளது.

இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை, மாநில போலீஸாரும்  இணைந்து காணாமல் போன ஹெலிகாப்டரை தரைவழியாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே காண்டு சென்ற ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கிவிட்டதாக சில ஊடங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து ராணுவம் தேடும் பணியை நிறுந்திக் கொண்டதாகத் தெரிந்தது. ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படாததை அடுத்து மீண்டும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

காண்டுவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று உள்துறை அமைச்சக செயலாளர் கோபால் கே.பிள்ளை தெரிவித்தார்.