Published:Updated:

என் ஊர் : திருப்பூர்

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த பொட்டல் காடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

திருப்பூரின் 35 ஆண்டுகாலத் தொழில், சமூக வரலாற்றை 'மணல் கடிகை’ நாவல் மூலம் அழகாகப் பதிவுசெய்து கவனம் ஈர்த்தவர் சூத்திரதாரி (எ) எம்.கோபாலகிருஷ்ணன். மனித உறவுகளையும் அதன் சிக்கல்களையும் கொங்கு வட்டார வழக்கில் கதைகளாகப் பதிவுசெய்யும் இவர், தன்னுடைய சொந்த ஊரான திருப்பூர், நெசவாளர் காலனியைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

 ''திருப்பூர்னாலே பரபரப்பாக ஓடிக்கிட்டு இருக்கிற ஊர்னுதான் எல்லோ ருக்கும் தெரியும். ஆனா, பரபரப்பு இல்லாத அமைதியான திருப்பூரை நான் பார்த்திருக்கேன். அந்தத் திருப்பூர் பனியன் நகரம் இல்லை; பஞ்சாலை நகரம். திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ், ஆஷர் மில்ஸ், திருப்பூர் காட்டன் மில்ஸ், தனலட்சுமி மில்ஸ், எஸ்.ஆர்.சி. மில்ஸ்னு நாலஞ்சு மில்கள் மட்டுமே இயங்கிக்கிட்டு இருக்கும். அந்தக் காலகட்டத்துல மில்லு வேலைக்குப் போறதுன்னா தனி அந்தஸ்து.

என் ஊர் : திருப்பூர்

தொழிலாளர்கள் அதிகம் இருந்ததால திருப்பூர்ல தொழிற்சங்கங்களும் வலிமையாக இருந்தன. ஆண்டுதோறும் திருப்பூர்ல நடக்கிற மே தின ஊர்வலம், பிரமாண்டமா இருக்கும். தொழிலாளர்கள் சிவப்புக் கொடி ஏந்தி பேரணி நடத்துவாங்க. சி.பி.ஐ. கட்சித் தொழிற்சங்கங்கள், இப்ப புது பஸ் நிலையமாக மாறிப்போன காட்டன் மில்லில் இருந்தும் சி.பி.எம். தொழிற்சங்கங்கள் ஊத்துக் குளி ரோடு தனலட்சுமி மில்லில் இருந்தும் இரு வேறு திசைகளில் புறப்பட்டு பழைய ரயில்வே மேம்பாலத்துல வந்து இணைகிற காட்சி, கண்ணுக்குள்ளே நிறைகிற செங்கொடி காட்சி!

என் ஊர் : திருப்பூர்

அன்றைக்குத் திருப்பூரில் நஞ்சப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, பிஷப் மேல்நிலைப் பள்ளினு இரண்டு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள்தான் இருந்தன. நான் பிஷப் பள்ளியில் படிச்சேன். கண்டிப்புக்குப் பெயர் பெற்ற பள்ளி இது. கால்பந்து போட்டியில் பிஷப் பள்ளிக்கும் நஞ்சப்பா பள்ளிக்கும் இடையே போட்டி பயங்கரமா இருக்கும். ரெண்டு பள்ளி களும் சம பலத்தோட இருக்கிறதால  யாருக்கும் வெற்றி நிலையா இருந்தது இல்லை.

திருப்பூரில் அப்ப நெசவுத் தொழில் பரவலாக இருந்தது. எங்க குடும்பத் தொழிலும் நெசவுதான். இப்ப புது பஸ் ஸ்டாண்டாக இருக்கிற பகுதி, அன்றைக்கு நெசவாளர் காலனியாக இருந்தது. பனியன் கம்பெனிகளின் வருகைக்குப் பின்னாடி நெசவுத் தொழில் அழிஞ்சுப் போச்சு. இப்போ சாந்தி தியேட்டர் இருக்கிற இடம் அப்ப பொட் டல் காடு. எம்.ஜி.ஆருக்குப் பிடிச்ச இடம் இது. அவர் எப்ப திருப்பூர் வந்தாலும் அந்தப் பொட்டல் காட்டில்தான் பொதுக்கூட்டம் நடத்துவார். அதனால் இந்த இடத்தை எம்.ஜி.ஆர். காடுனுதான் சொல்வாங்க.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் இருக்கிற மன்னரை என்கிற ஊர்ல மொளகீஸ்வரன் கோயில் இருக்கு. இது சோழர் காலத்தில்கட்டப் பட்டது. திருவாதிரைக்கு மறுநாள் இங்க விசேஷம் நடக்கும். இங்கே இருக்கும் லிங்கம் இரண்டாகப் பிளவுபட்டு இருக்கும். அதை வெள்ளியிலான பட்டையில் இணைத்து இருப் பாங்க.

நான் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில்  பி.காம். படிச்சேன். எனக்கு எழுத்து ஆர்வம் வரக்

என் ஊர் : திருப்பூர்

காரணமே இந்தக் கல்லூரி யின்பேராசிரியர் பக்தவச்சலம்தான். அன்னைக்கு பஞ்சு மில் விளம்பரங்களுக்காக 'உதயம்’னு ஒரு பத்திரிகை வரும். அதுல நவீன இலக்கியக் கதைகள் பிரசுரம் ஆகும். அதை எனக்குக் காட்டி என்னை எழுத ஊக்குவிச்சவர் பக்தவச்சலம்தான்.  

திருப்பூரை வடக்கு, தெற்காகப் பிரிப்பது நொய்யல் ஆறு. திருப்பூர் சாயப் பட்டறைக் கழிவுகளால் நொய்யல் மட்டுமல்ல; திருமுருகன் பூண்டி பக்கத்தில் இருக்கும் நல்லாறும் பாதிக்கப் பட்டது. திருப்பூரில் தொழில் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே சுற்றுச்சூழலையும் காப்பதற்கான முயற்சிகளை எடுத்து இருந்தா, ஆறுகளும் மாசு அடைந்து இருக்காது; சாயப் பட்டறைகளும் மூடப்பட்டு இருக்காது. முன்னாடி எல்லாம் எங்கே திரும்பினாலும் 'ஆட்கள் தேவை’ பலகை மாட்டி இருக்கும். இப்ப அதைப் பார்க்க முடியலை. 'குட்டி ஜப்பான்’ நிறையவே இழந்துடுச்சு. பழைய அமைதி திரும்பின மாதிரி ஓர் உணர்வு. அதுக்காக இந்த இழப்பு ரொம்பவே அதிகம்..!''

-சந்திப்பு, படங்கள்: கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு