Election bannerElection banner
Published:Updated:

ரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ!

ரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ!

##~##

'தோழர் அறக்கட்டளை’ -'என் விகடன்’ வாசகர்களுக்குப் பரிச்சயமான சேவை அமைப்பு. கோவை அரசு மருத்துவமனையின் பிணவறையில் நெடுநாட்களாகக் கிடக்கும் ஆதரவற்ற பிணங் களைத் தன்னுடைய பொறுப்பில் எடுத்து மரியாதையுடன் அடக்கம் செய்துவருவதுதான் இந்த மையத்தின் நோக்கம். இதன் நிறுவனரும், சேவையாளருமான தோழர் சாந்தகுமாருக்கு 'ரியல் ஹீரோஸ்’ விருதை, சமீபத்தில் வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறது ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன்.

 ரிலையன்ஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன், இந்தியா முழுவதும் இருக்கும் சேவையாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து கௌரவப்படுத்திவருகிறது. சி.என்.என். - ஐ.பி.என். நட்புடன் நடக்கும் இந்தத் தேடுதலில் இந்த ஆண்டு தேர்வான 24 மனிதர்களில் சாந்தகுமாரும் ஒருவர். முகேஷ் அம்பானி, சச்சின், அமீர்  கான் ஆகியோர் கைகளால் சாந்தகுமார் அந்த விருதைப் பெற்றிருக்கிறார்.

ரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ!

மும்பையில் நடந்த அந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக ஆஷா போன்ஸ்லே, சச்சின், ஹர்பஜன் சிங், அமீர் கான் என வெரைட்டியான செலிபிரெட்டிகள் கலந்துகொண்டு விருதுபெற்ற வர்களைக் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள். சாந்தகுமாருக்கு விருது வழங்கப்படும் முன், தோழர் அறக்கட்டளை செய்யும் சேவை குறித்து சி.என்.என். - ஐ.பி.என். எடுத்த குறும்படமும் திரையிடப்பட்டது.

உலகம் வியக்கும் வி.ஐ.பி-களிடம் மேடையில் விருதைப் பெற்ற சாந்தகுமாரிடம் 'பரபரப்பான வியாபார உலகில் தன்னைத் தாண்டி மற்றவர் களைப்பற்றி யோசிக்கக்கூட யாருக்கும் நேரம் இல்லை; மனசும் இல்லை. அவ்வளவு ஏன்? பெற்று வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரையே ஆதரவற்றோர் இல்லங்களில் விட்டுவிடுகிறார் கள். ஆனால், முன் பின் தெரியாத, இறந்த வர்களுக்காக நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. நீங்கள் ரியல் ஹீரோ மட்டும் அல்ல... ரியல் மனிதர்’ என்று கட்டி அணைத்து நெகிழ்ந்தாராம் அமீர் கான்.

ரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ!

விருது பெற்ற சாந்தகுமாரிடம் வாழ்த்துகளைச் சொல்லிப் பேசினேன். ''எட்டு வருஷங்களுக்கு முன்பு யதார்த்தமா இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சோம். ஜீவானந்தம், அண்ணாதுரை, சம்பத்குமார் இவங்க மூணு பேர்தான் இந்த அறக்கட்டளையோட முக்கியத் தூண்கள். தொடக்கத்தில் எங்கசொந் தப் பணத்தைப் போட்டும், நண்பர் கள் கொடுக்கிற பணத்தைவெச்சும் நீண்ட நாட்களாகப் பிணவறையில் கிடக்கிற பிணங்களை அடக்கம் செஞ்சிக்கிட்டு இருந்தோம். அப்புறம் கால ஓட்டத்துல ஆதரவற்ற பிணங் கள் மட்டும் இல்லாம, ரயில்ல அடி பட்டு சிதைந்த பிணங்கள், அடக்கம் செய்யக் கூட பணம் இல்லாம அல்லாடற ஏழைகளின் உறவினர் பிணங்களையும் அடக்கம் செஞ்சிக்கிட்டு இருக்கோம்.

இப்படி ஏப்ரல் முதல் வாரம் வரைக்கும் 1,521 பிணங்களை எங்களோட உறவுகளா நினைச்சு இறுதிச் சடங்கு நடத்தி இருக்கோம். விருதுக்காகவோ புகழுக்காகவோ இதைச் செய்யலை. ஆனா, இந்த விருது எங்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்து இருக்கு.  

ரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ!

ஒவ்வொரு ஆதரவற்ற பிணத்தை அடக்கம் செய்யும்போதும் நாங்க வேண்டுவது. 'இதுவே நாங்க அடக்கம் செய்யற கடைசி ஆதரவற்ற பிணமா இருக்கணும்’கிறதுதான். காரணம், உலகத்துலயே மிகக் கொடுமையான வேதனை, 'எனக்கு உறவுனு சொல்லிக்க யாருமே இல்லையே!’ அப்படிங்கிற விஷயம்தான். இறந்த ஆத்மாவுக்கு அந்த வலி வரக் கூடாதுங்கிறதுதான் எங்க வேண்டுதல்'' உள்ளத்தில் இருந்து உச்சரிக்கிறார் சாந்தகுமார்!  

வேண்டுதல் நிறைவேறட்டும் தோழரே!

- எஸ்.ஷக்தி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு