Published:Updated:

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

   ஃபேஷியல் அனுபவம்!

திருமணங்களில் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் இருந்தும் சமீப காலமாகச் சொல்லாமல்கொள்ளாமல் இன்னொரு சம்பிரதாயமும் வந்து ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அது, மணமகன் திருமணத்துக்கு முன்தினம் அழகு நிலையத்துக்குச் சென்று முகத்துக்கு ஜிகினா எஃபெக்ட் கொடுப்பது. புரியும்படி சொன்னா ப்ளீச்சிங், ஃபேஷியல் பண்ணுவது. மூன்று வருடம் முன்பு என்னுடைய மூத்த அண்ணனுக்குத் திருமணம் நடந்தபோது, திருமணத்துக்கு முன்தினம் அவனையும் இந்தக் கொடுமைக்கு ஆளாக்கினார்கள்.

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

என் அண்ணன் அவன் நண்பனுக்கு போனைப்போட்டுக் கேட்க, அவர் ஒரு ஆண்கள் அழகு நிலையத்தைப் பரிந்துரைத்தார். துணைக்கு நானும் சேர்ந்து அங்கே போனேன். வெளியே சாதாரணமாக இருந்த பியூட்டி பார்லரின் உள்ளே நுழைந்ததும், டி.ஆர். படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த மாதிரி ஒரு ஃபீலிங். பயங்கரமா செட் போட்டு இருந்தார்கள். கரண் ஜோஹர் படங்களில் வருவதுபோல பளிச் என்று இருந்தது. நம்மூர்ல இப்படி ஒரு பியூட்டி பார்லரா? உள்ளே போனதும் வரவேற்பு எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. மெனுவைக்கொடுத்தார்கள். அதில் பல மாதிரியான ஃபேஷியல் முறைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இருப்பதிலேயே விலை கூடுன ஒரு வழிமுறையை உடன் பிறப்பு சொல்ல, அழைத்துச்சென்றார்கள்.

அவனுக்கு ஃபேஷியல் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த என்னிடம், 'நீயும் பண்ணுடா’ என்றான். ''எனக்கு இதுக்கு மேலயுமா அழகு வேணும்?''னு வடிவேல் ரேஞ்சுக்கு நான் கேட்க, அங்கே இருந்த பியூட்டிஷியன் என்னை ரொம்பக் கேவலமாப் பார்த்தாரு. ஆனா, என் அண்ணன் ஒரு விஷயம் சொன்னான் பாருங்க... ''டேய் கல்யாண வீட்டுல உங்க அண்ணிகூட படிச்ச புள்ளைங்கல்லாம் வரும்டே, நீயும் பண்ணு''னதும் எனக்குக் கண்ணீரே வந்துடுச்சு. அண்ணனுக்குத்தான் எம்மேல என்னா அக்கறை? ஓடிப்போய் சேர்ல நானும் உக்காந்துட்டேன். ஆனா, அது அக்கறை இல்லை.. ஆப்புனு அப்போ

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

தெரியலை.

என் முகத்துல தோசை மாவு சுட ஆரம்பிச்சானுங்க... கண்களுக்குக் கவசம் வெச்சு, முகத்துல என்னல்லாமோ எடுத்துப் பூசுனானுங்க. பூசுனதையே கழுவினானுங்க. அப்புறம் வேற எதையோ பூசினானுங்க. திரும்பவும் அதைக் கழுவினானுங்க. சும்மாவே அட்டு ஃபிகருங்க கூட என்னைத் திரும்பிப் பார்த்தது இல்லை. இதுல இருக்கறதையும் நாசம் பண்ணி விட்டருவானுங்களோனு பயம் வந்துடுச்சு. கடைசில ஒரு வழியா எல்லாம் முடிஞ்சு கண்ணாடியைப் பார்த்தா, அதே மூஞ்சிதான் இருந்துச்சு. அப்புறம் ஃபேஷியல் பண்ணா கமல்ஹாசன் மூஞ்சியா வரும்? நம்ம உடன் பிறப்பு என்ன பண்றாருனு திரும்பிப் பார்த்தா ஆளையே காணோம். பார்ட்டி எஸ்கேப். கூடப்பொறந்த பாவத்துக்கு அவனுக்கும் சேர்த்து காசை நான் அழுதுட்டு வந்தேன். ஆளுக்கு ஜஸ்ட் 1,300 ரூபாதான். அடப்பாவிகளா, இதுக்கு நான் நேர்மையான ஹமாம் சோப்புல நாலுவாட்டி முகத்தைக் கழுவி இருந்தா இன்னும் பளிச்சுன்னு இருந்திருப்பேன். 10 ரூவாய்ல முடிய வேண்டிய சமாச்சாரத்துக்கு 2,600 ரூபாய் மொய்வெச்சேன்!

                தமிழா தமிழா!

எனக்குத் தெரிந்து தங்கள் தாய் மொழியைச் சரியான உச்சரிப்புடன் பேசாத மக்கள் தமிழர்களாகத்தான் இருக்க முடியும். ஆனால், இங்குதான் தமிழினத் தலைவர்களும் தமிழ் காக்கும் காவலர்களும் தமிழ் தமிழ் என்று கதறும் சினிமா நாயகர்களும் அதிகம். கேரளத்தில் படித்தவர்களும் படிக்காதவர்களும் அவர்கள் மொழியை உச்சரிக்கும் விதத்தைக் கவனியுங்கள். தமிழ் மொழியில் உள்ள ஒலிகள் அதிகம் பயன்படுத்தப்படும் மலையாளத்தை அவர்கள் தவறாக உச்சரிப்பது இல்லை.

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

பூவை புஷ்பம் என்றும் சொல்லலாம். ஆனால், நம்ம ஆட்களோ புய்ப்பம் என்று சொல்கிறார்கள். 'வாழைப் பழம்’ என்பது 'வாலைப் பலம்’ ஆகி தற்போது 'வாயப் பயம்’ ஆக உருமாறிவிட்டது.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் நமது நடத்துனர் பயணிகள் கூட்டத்தில் 'வளி விடு.. வளி விடு’ என்று படு சீரியஸாகக் கத்திக்கொண்டு இருக்க, கேரளப் பயணிகள் விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்க்க முடியும். ஒரு எழுத்து மாற்றி உச்சரிப்பதால் அங்கு அர்த்தமே மாறிவிடுகிறது. இவை வேண்டுமென்றே தவறாக உச்சரிக்கப்படுவது இல்லை என்றாலும் மொழியை எப்படியும் உச்சரிக்கலாம் என்ற சிந்தனை எப்படி நம் மக்களுக்குள் உருவானது எனத் தெரியவில்லை. தமிழர்கள் பிற மொழிகளில் பேசும்போது, அதைத் தவறாக உச்சரிக்கும் பட்சத்தில் அவர்களால் திருத்தப்படுகிறோம், கிண்டலுக்கு உள்ளாகிறோம். ஆனால், நம் மக்கள் தமிழையே அப்படித்தான் உச்சரிக்கிறார்கள். பள்ளியில் கற்றுக்கொண்ட எழுத்துக்களின் ஒலி உச்சரிப்பை மறந்துபோனவர்கள் கலைஞர் பேசிய உரையைக் கேட்டு உச்சரிப்பைப் பழகிக்கொள்ளுங்கள் அல்லது இளையராஜா பாடிய பாடல்களைக் கேட்டாவது தமிழின் உச்சரிப்பைக் கற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில், ஒரே வழிதான் இருக்கிறது, 'வாயப் பயம்’ போன்ற வார்த்தைகளை தமிழ் அகராதியில் சேர்த்து அதுதான் சரி என்று மாற்றிவிடுவோம்!

பெயரில் என்ன இருக்கிறது?

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

நிறையப் பேரு செல்லப் பிராணிகளுக்கு பெயர்வைப்பது உண்டு. அந்தப் பிராணிகள்கூட அந்தப் பெயரில் அழைக்கும்போது, அனிச்சையான அசைவுகளைத் தருவதும் உண்டு. எனக்குத் தெரிஞ்சு எங்க ஊர்ல ஒரு வீட்டு பசு மாட்டுக்குப் பேரு... 'செல்வி’. அதை 'செல்வி’னு கூப்பிட்டா டக்குன்னு திரும்பிப் பார்க்கும். அதுவே அந்த வீட்டுக்காரங்க கூப்பிட்டா 'ம்ம்ம்ம்ம்ம்ம்மா’னு வாஞ்சையோட சவுண்டுவேற கொடுக்கும். சில பேரு செல்லமா வளர்க்கிற நாய்க்கு தனக்குப் பிடிக்காதவர்களின் பேரைக்கூட வைப்பது உண்டு. மனித புத்தி எப்படி எல்லாம் யோசிக்குது!

யானைக்குத் தெரிஞ்சா என்னாவும்?

வலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

யானையை மத்திய அரசு தேசியப் பாரம்பரிய விலங்காக அறிவித்திருக்கிறது. பார்யா... இந்த விஷயம் மட்டும் யானைக்குத் தெரிஞ்சுது, கூட்டம் கூட்டமாத் தூக்கு போட்டு செத்துடும். யானை முகத்தைவெச்சு பிள்ளையாருக்குப் படையல் போடுவானுங்க. காடுகளில் கிடைக்காத தண்ணீருக்காகவும் சாப்பாட்டுக்காகவும் உண்மையான யானை ஊருக்குள்ள வந்தா கரன்ட் ஷாக் கொடுத்து விரட்டுவானுங்க. தெருத் தெருவாப் பிச்சை எடுக்கவெப்பானுங்க. அரைகிலோ உருண்டை சோத்துக்கு ஆயிரம் டன் மரத்தைத் தூக்கச் சொல்வானுங்க. போங்கய்யா நீங்களும் உங்க பாரம்பரியமும். என்னைக்குப் புலியை தேசிய விலங்காக அறிவிச்சீங்களோ அதுக்கப்புறம்தான் புலிகளின் எண்ணிக்கைக் குறையவே ஆரம்பிச்சுருக்கு... நல்லாருங்கடே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு