Election bannerElection banner
Published:Updated:

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா!

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா!

##~##

ஓடி வா அய்யா...
ஓடி வா சுடலை...
ஓடி வா கண்ணு!’  

ஸ்ரீவைகுண்டம் அருகே முருகன்குறிச்சி கிராமத்தில் உள்ள சுடலைமாடன் கோயில் கொடை விழாவில் ஒலிக்கும் பாட்டுச் சத்தம் ஊரெல்லாம் கேட்கிறது. அங்கே பெண்களைப் போல வேடம் அணிந்து இருந்த இரண்டு ஆண்கள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய பாட்டைக் கேட்டு, பூசாரிக்கு சாமியே வந்துவிட்டது. சாமியைக் குளிர்விக்க இன்னும் உரத்த குரலில் பாடுகிறார்கள். சாமியாடி உச்சத்துக்குச் சென்று, ''நான் திருவிழாவை ஏத்துக்கிட்டேன்பா. இனிமே ஊருக்கு எந்தக் குறையும் வராது. எல்லாரும் சந்தோஷமா இருங்க'' என்று அருள் சொல்லி அடங்குகிறார். ஆடிக் களைத்து மரத்தடியில் அமர்ந்து இருந்த ஸ்ரீவைகுண்டம் கணியன் காலனி முத்துராமலிங் கம் கணியன் குழுவைச் சந்தித்தேன்.

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா!

''இந்தக் கணியன் கூத்துக் கலை கிராமியக் கலைகள்ல ரொம்பப் பழமையானது. ரொம்பப் பாரம்பரியமானது. கிராமத்துக் கோயில் கொடைத் திருவிழாக்கள்ல கணியன் ஆட்டம் இல்லாம விசேஷமே நடக்காது. 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்’னு சொன்ன, கணியன் பூங்குன்றனாரின் மரபு வழியில் வந்தவர்களாகிய கணியன் சமுதாயத்து மக்கள் நடத்தும் நாட் டுப் புறக் கலைதான் இது. கோயில்ல உள்ள சுடலைமாடன், கருப்பசாமி, பன்றிமாடன், பூதத்தார், பட்டன் மாதிரியான காவல் தெய் வங்களோட வரலாற்றை, புகழைப் பாடுவோம். பாடல் பாடுறவரை, 'புலவர்’னோ 'அண்ணாவி’னோ சொல்வோம். பெண் வேஷம் போட்ட வங்க ரெண்டு பேர், மகுடம் வாசிக்கிறவங்க ரெண்டு பேர், பக்கவாட்டு படிப்பவர் ஒருவர் மற்றும் சிங்கி அடிப்பவர்னு ஒவ்வொருகுரூப்புக் கும் மொத்தம் ஏழு பேரு உண்டு. தென் மாவட் டங்களில் நெல்லை, தூத்துக்குடி, குமரினு மூணு மாவட்டங்கள்லதான் இந்தக் கலையையும் கலைஞர்களையும் பார்க்க முடியும். நாங்க மொத்தமே 500 குடும்பங்கள்தான் இருக்கோம்.

நான் காலேஜுல பி.ஏ. முடிச்சதும் போஸ்ட் ஆபீஸ்ல ஜூனியர் கிளார்க்கா வேலைக்குச்சேர்ந் தேன். கலையை விட்டுறக்கூடாதுனு வேலை நேரம் போக, லீவு நாட்கள்ல கூத்து நடத்திக்கிட்டு வர்றோம். வெறுமனே காவல் தெய்வங்களோட கதை மட்டும் இல்லாம, பார்வதி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், அம்மன் பாட்டு, காளி கதை எனப் பல தலைப்புகளில் கூத்து போடுவோம். வருஷத்துக்கு ஆறு மாசம்தான் தொழில் இருக்கும். மற்ற நேரங்கள்ல கிடைச்ச வேலையைப் பார்க்கணும்!'' என்கிறார் அண்ணாவி முத்துராமலிங்கம்.

எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா!

பெண்கள்போல வேடமிட்டு வருகிறார்கள் சிவப்பிரகாஷ§ம், மாசானமுத்துவும். ''புடவை கட்டுறதைவிட பெரிய வேலை முகத்துக்கு பவுடர் போடுறது. குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தொடர்ந்து ஆடணும். அதனால தேங்காய் எண்ணெயில் பவுடரைக் கலந்து முகத்துக்குத் தடவுவோம். நாங்க கட் டுற சலங்கையில குறைஞ்சது 100 மணிகள் இருக்கும் அப்பதான் சலங்கைச் சத்தம்நல்லா கேட்கும். புலவர் பாட்டுப் பாட... பாட... நாங்க ரெண்டு பேரும் விடாம ஆடணும். எனக்குக் கால் வலிச்சா நான்  ஸ்லோவா ஸ்டெப் போடுவேன். மற்றவங்க ஆட்டவேகத் தைக் கூட்டணும். அப்போதான் மக்கள் எழுந்திருச்சுப் போகாம சுவாரஸ்யமாப் பார்ப்பாங்க. மறுநாள் காலைத் தூக்கவே முடியாது. கால் வலி உயிர் போகும். இதுல சில ஊர் கோயில்ல தரையில இருக்கிற பொடி கல், முள், ஊசின்னு ஏதாவது காலில் ஏறிடும். இருந்தாலும் விடாம ஆடணும்'' என்கிறார் மாசானமுத்து.

''சில சமயம் வாரம் முழுக்கத் தொழில் இருக்கும். பொம்பளை வேஷம் கட்டுறதுக்காக, அப்போ எந்தச் சேலை ஃபேமஸோ அதை வாங்கி உடுத்துவோம். இந்தக் கலை அழிஞ்சிடக் கூடாதுனு படிச்ச பல பேர் கூத்துக் கட்ட வர்றாங்க. இருந்தாலும் அரசு இசைப் பள்ளியில் இதைப் பாடமாவெச்சா நிறையப் பேர் படிப்பாங்க. வருஷத்துல ஆறு மாசம் சும்மா இருக்கிற எங்களுக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது. ஆறு மாசம்தான் திருவிழா நடக்குது. அரசு மனசுவெச்சு உதவி செஞ்சா இந்தக் கலை அழியாம இருக்கும்!'' பேசி முடிக்கும்போது முத்துராமலிங்கத்தில் கண்களில் எட்டிப் பார்க்கின்றன கண்ணீர்த் திவலைகள்!

-இ.கார்த்திகேயன்
படம்: ஏ.சிதம்பரம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு