Published:Updated:

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் வலியுறுத்தல்

Vikatan Correspondent

புதுடெல்லி, மே 2,2011

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் வலியுறுத்தல்

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை 'குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படி' என்று கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் முழுமையாக செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ##~~##

அல்-காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்திக் கொன்றனர்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் படி நிலை என்ற வகையில் நான் வரவேற்கிறேன். அல்-காய்தா மற்றும் இதர பயங்கரவாத குழுக்களுக்கு இது மிகப் பெரிய பின்னடைவு என்று நம்புகிறேன்.

அப்பாவி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, சர்வதேச சமூகம் - குறிப்பாக, பாகிஸ்தான் முழுமையாக செயலாற்ற வேண்டும்," என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்..  

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்டதாக இந்திய அரசுக்கு அமெரிக்க அரசு இன்று தகவல் அளித்தது.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒசாமா பின்லேடனையும், அவனது கூட்டாளிகளையும் நீதியின்முன் நிறுத்த அமெரிக்காவுக்கு நியாயமான காரணங்கள் உண்டு. 

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாதில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது, பல்வேறு பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளன என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது. 

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களும் பாகிஸ்தானில் தொடர்ந்து அடைக்கலம் புகுந்திருப்பதாக இந்தியா நம்புகிறது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ள நபர்களை கைது செய்யுமாறு மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.  அத்துடன் மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சில நபர்களின் குரல் மாதிரிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்," என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது ஒரு மைல்கல்...

ஒசாமா கொல்லப்பட்டது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'பாகிஸ்தானின் உள்பகுதியில் நடத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.

இது, உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், வெற்றிகரமான மைல்கல் நிகழ்வுமாகும்.

கடந்த ஆண்டுகளில் பயங்கரவாத குழுக்களின் பிடிக்கு, ஆயிரணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

நமது அண்டை நாடுகளில் விரவியுள்ள பயங்கரவாதிகளையும், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவுள்ள பயங்கரவாதத்துக்கும் எதிராக உலகம் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் இத்துடன் நின்றுவிடக் கூடாது. இந்தப் போராட்டம் கண்டிப்பாக தொடர வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.