Published:Updated:

என் ஊர் : பாக்கமுடையான்பட்டு

அப்போது நிலா வெளிச்சத்தில் முயல்கள் விளையாடும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

மிழறிஞர், தனித்தமிழ் ஆர்வலர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம்கொண்ட ம.இலெ.தங்கப்பா... தன்னுடைய ஊரான, புதுச்சேரியின் பாக்கமுடையான்பட்டு குறித்த தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

 ''நான் தாகூர் கலைக் கல்லூரியில் பணிபுரிந்துகொண்டு இருந்த ஆரம்பகாலத்தில் நான் குடியிருந்த ஊர் வில்லியனூர். அங்கு இருந்து மிதிவண்டியில்தான் கல்லூரிக்கு வந்து செல்வேன். இப்போது இத்தனைக் குறுக்குத் தெருக்களைக்கொண்ட அவ்வை நகர் அப்போதுதான் உருவாக ஆரம்பித்திருந்தது. அதில் அப்போது நான் வீட்டுமனை வாங்கும்போது, மனையின் மொத்த விலையே 1,500 ரூபாய்தான். நான் வீடு கட்டத் தொடங்கியபோது, ஒரு மூட்டை பைஞ்சுதை (சிமென்ட்) 14 ரூபாய். கொத்தனார் கூலி 10 ரூபாய். ஆனால், இன்றைக்கு இந்த இடத்தில் 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் ஒரு சதுர அடியைக்கூட வாங்க முடியாது.

அவ்வை நகருக்கும் தாகூர் கலைக் கல்லூரிக் கும் இடையே எங்கும் முந்திரித் தோப்புதான். லாசுப்பேட்டை என்ற ஒரு பகுதியே அப்போது இல்லை. மாலை நேரக் கல்லூரி வகுப்புகளுக்கு அந்தத் தோப்பு வழியாகத்தான் சென்று திரும்புவேன். அப்படித் திரும்பும்போது நரி மற்றும் ஆந்தைகளின் சத்தத்துடன் நிலா வெளிச்சத்தில் முயல்கள் துள்ளிக் குதித்தோடுவதைப் பார்த்தபடி நடக்கும் அந்தக் குளிர்ச்சி உலகத்தை மண்ணில் புதைத்துவிட்டு அதன் மீதுதான் குடியிருப்புகளைக் கட்டியிருக்கிறார்கள்.

என் ஊர் : பாக்கமுடையான்பட்டு

அடுத்து பாக்கமுடையான்பட்டுக்கு அருகில் இருந்த வேஷன்காரன் தோப்பு. வேஷக்காரன் என்பவர் அந்தத் தோப்பை நிர்வகித்துவந்ததால் அந்தத் தோப்புக்கு அவருடைய பெயரே நிலைத்துவிட்டது. அதில்தான் அப்போது லட்சுமி திரையரங்கம் இருந்தது. அந்தத் திரையரங்கில் அதிகப்படியான கட்டணமே ஒன்றரை ரூபாய்தான். இப்போது அந்தத் திரையரங்கம் நாவலர் நெடுஞ்செழியன் அரசு உயர்நிலைப் பள்ளியாக மாறிவிட்டது. இந்தத் தோப்பை ஒட்டி பனை ஓலைக் குடிசைகள் நிறைந்த ஊர் நாவல் குளம். ஆனால், இப்போது நவீன கட்டடங்களுடன் நகரம் போல் காணப்படுவதைப் பார்க்கும்போது வியப்பே ஏற்படுகிறது.

எனக்கு இயற்கை உணவு வகைகளில் நாட்டம் அதிகம் என்பதால் கேழ்வரகு, கம்பு, திணை, மணிலாக்கொட்டை என்று உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். என்னுடைய மாணவர்கள் சுற்று வட்டார கிராமங்களில் விளைந்த இந்தப் பயிர் வகைகளை வாங்கி வந்து தருவார்கள். மதகடிப்பட்டு, மதுக்கரை போன்ற இடங்களுக்கு மிதிவண்டியிலேயே சென்று வழியில் மரத்தடிகளில் விற்கப்படும் தேங்காய்ப் பால் ஆப்பத்தை உண்ணுவது உண்டு. வழி எங்கும் மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் சூடாக விற்கப்படும். அவற்றை உண்பதற்காகவே புறப்பட்டுக் குழந்தைகளுடன் செல்வது வழக்கம்.

என் ஊர் : பாக்கமுடையான்பட்டு

பாக்கமுடையான்பட்டுக்கும் திருவள்ளுவர் நகருக்கும் இடைப்பட்ட பகுதி முழுக்கப் பச்சைப் பசேல் பயிர் நிலங்களாலும் ஆண்டு முழுவதும் நீர் ததும்பி நிற்கும் நெல் வயல்களாகவும் இருக்கும். இப்போது அந்தப் பசுமைப் பகுதிகள் பல நகர்களாக மாறிவிட்டன. இயற்கையும் பசுமையும் தானாக அழிந்துவிடவில்லை. நாம்தான் அதை அழித்து சமாதிகட்டி அதன் மீது குடியமர்ந்துவிட்டு, இயற்கை அழிந்துவிட்டது என்று வெறுமனே புலம்பிக்கொண்டு இருக்கிறோம். அதன் பயன்தான் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையோடு இணைந்திருந்த நம் வாழ்வைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி நமக்குப் புதுப் புது நோய்களைப் பெற்றிருக்கிறோம்!''

- ஜெ.முருகன்
படங்கள்: ஆ.நந்தகுமார்            
                                                                                      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு