Election bannerElection banner
Published:Updated:

வலையோசை : பவித்ரா நந்தகுமார்

வலையோசை : பவித்ரா நந்தகுமார்

வலையோசை : பவித்ரா நந்தகுமார்

பெண் என்பவள்...

21 வயது கல்லூரி மாணவி வித்யா. திருமணம் ஆகி ஓர் ஆண்டே ஆன நிலையில், சமீபத்தில் தன் கணவனை ஒரு விபத்தில் இழந்துவிட்டார். கணவனின் உடல் இன்னும் வீட்டுக்கு வராத நிலையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் தன் கைப்படக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் வித்யா. அதில் 'கட்டிய கணவன் இறந்த பின் மனைவிக்குச் செய்யும் சடங்குகள் என்னை அச்சுறுத்துகின்றன. என் வீட்டில் உள்ளவர்களோ பழமையில் ஊறியவர்கள். என்னால், அந்த இம்சைகளைத் தாங்க முடியாது.  என் கணவன் சென்ற இடத்துக்கே நானும் போய்விடுகிறேன்’ என்று அதில் எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

வலையோசை : பவித்ரா நந்தகுமார்

வித்யா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? தற்கொலைக்கு முன் என்னென்ன நினைத்திருப்பார்?

எனக்குத் திருமணமான புதிதில் என் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானார். அவரின் மனைவிக்கு வயது 71. அவர் அழுது ஆர்ப்பரித்துக்கொண்டு இருந்தபோதே, மூன்று முழப் பூவைக் கொண்டுவந்து சிறு கொண்டையில் திணித்தனர். பின் சடலத்தைக் குளிப்பாட்டும் முன்பு, அந்தப் பாட்டியையும் எதிரில் அமர வைத்துவிட்டு, தலைக்கு நீருற்றிப் பழுக்க மஞ்சள் பூசி, இரண்டு ரூபாய் நாணயம் அளவு குங்குமம் இட்டு, பூ வைத்து அவரை அலங்கரிக்கிறேன் பேர்வழி என்று அலைக்கழித்தார்கள். ஏற்கெனவே சாப்பிடாமல் அழுது அழுது களைத்து இருந்தவருக்கு, ஜன்னி வந்து மயங்கியே போனார்.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1911-ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு வயதுகூட ஆகாத விதவைகள் 31 பேர்.  ஐந்து வயது நிரம்பாத விதவைக் குழந்தைகள் 673 பேர்.  1928-ம் ஆண்டு கணக்கின்படி 30 வயது நிரம்பாத விதவைகள் 4 லட்சம் பேர். இத்தனைக்கும் அப்போது மக்கள் தொகை மிக மிகக் குறைவு. சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1751 முதல் 1791 வரை நடந்த பெண்களின் தற்கொலைகளைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர் குணே, தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்களில் பெரும்பாலான பெண்கள் பிராமண விதவைகளே என்று கண்டறிந்தார். வேத புராணங்கள், இதிகாசங்கள், உபநிடதங்கள், நீதி இலக்கியங்கள் என எதைத் திருப்பினாலும் அவற்றில் எதிலும் பெண்ணுக்குச் சரியான நீதி இல்லை என்ற கருத்து உறுதியாகிறது!

தேவை முன் எச்சரிக்கை!

வலையோசை : பவித்ரா நந்தகுமார்

பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன். என்னைப் போல் ஒரு தம்பதியும் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அவர்கள் ஏற வேண்டிய பேருந்து வரவும் இருவரும் ஆளுக்கொரு புறமாக முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பேருந்திலோ அதிக கூட்டம். இந்தக் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது, உட்காரவும் இடம் இல்லை என அந்தப் பெண் இறங்கிவிட்டார். கணவரும் இறங்கிவிட்டிருப்பார் என்பது அவர் யூகம். ஆனால், அவரோ பேருந்தின் உள்ளேயே மாட்டிக்கொண்டு வெளியே வர இயலாமல் போனது. வண்டியும் புறப்பட்டுவிட்டது. கணவர் தன்னுடைய செல்போன் மூலம் மனைவியின் செல்போனைத் தொடர்புகொண்டு அடுத்த பேருந்தில் கிளம்பி வரும்படி சொல்லிவிட்டார். அந்தப் பெண், ''கையில் பணம் எதுவும் எடுத்து வரவில்லையே'' என்று புலம்ப ஆரம்பித்தார். அவர் சூழ்நிலையை உணர்ந்து அவருக்குப் பயணச் செலவுக்கான பணத்தைக்கொடுத்தேன். நெகிழ்ந்து நன்றி கூறினார். ஆண்களோடு வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் பெண்கள், அவர்களையே சார்ந்து இருக்காமல் தம் கையிலும் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துச் செல்வது தர்மசங்கடமான வேளைகளில் கை கொடுக்கும்!

விளம்பரங்களில் பெண்கள்!

வலையோசை : பவித்ரா நந்தகுமார்

பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் ஒரு விதி உண்டு. எந்த ஒரு காயையும் நேரடியாகக் குழிக்குள் தள்ளக் கூடாது. ஒரு வெள்ளைக் காயின் உதவியுடன்தான் தள்ள வேண்டும். அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய விளம்பர உலகம். எந்தப் பொருளை சந்தையில் விளம்பரப்படுத்த எண்ணினாலும், பெண்களைப் பயன்படுத்தாமல் அவர்களால் துளிகூட காய் நகர்த்த முடியாது.

நம் விளம்பரங்களில் பெண்கள்பற்றிய புனைவுகள் இருக்கிறதே, அப்பப்பா! தன் குழந்தைகளுக்குச் சிறந்ததையே வாங்கிக்கொடுக்கும் கெட்டிக்காரத் தாய், தன் குழந்தையின் நண்பர்கள் கேலி செய்வதைக் கண்டு வெகுண்டு, சிறந்த ஊட்டச் சத்து பானத்தை உபயோகித்து, தன் குழந்தையை மற்ற குழந்தையின் வளர்த்திக்கு ஈடுசெய்து 'தான் சிறந்த அன்னை’ என நிரூபிப்பது... சிறந்த குடும்பத் தலைவியாக இருந்து எப்படிப்பட்ட கடினமான கறையையும் ஒரே சிட்டிகையில் களைந்துவிடுகிறாள் மந்திர மாயக்காரி போல. இதுகூடப் பரவாயில்லை. ஓர் ஆண் உபயோகிக்கும் பெர்ஃப்யூமுக்கு மயங்கி பல கவர்ச்சிக் கன்னிகள் அவனைப் படுக்கைக்கு அழைப்பது போன்ற காட்சிகள் அருவருப்பின் உச்சகட்டம்.

அடுத்துவரும் தலைமுறை பெண்களை எப்படிப் பார்க்கும்? நினைத்தாலே பகீர் என்கிறது!

வலையோசை : பவித்ரா நந்தகுமார்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு