Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

தீப்புடிச்ச மாதிரி சேதி பரவுது ஊருக்குள்ள. தெருத் தெருவா சாட்டிக்கிட்டே போறான் தோட்டி மாதப்பன்.

 ''அய்யா... இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா... அட்டணம்பட்டி சீனிச்சாமி மகன் கருத்தமாயிக்கும் கருத்தமாயி மகன் முத்துமணிக்கும் சொத்துத் தகராறுல ஒரு பஞ்சாயத்து இருக்கிறபடியால, எட்டுப் பட்டரை சாதிசனமும்வாற புதன் கெழமை காலையில பத்து மணிக்கு அரசமரத்தடி அம்பலக் கல்லுல வந்து கூடணுமுன்னு ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவு... ஊர்ப் பஞ்சாயத்து உத்தரவு!''

''கிணிமிட்டி கிணிமிட்டி

கிணிமிட்டி கிணிமிட்டி''

தமுக்கு அடிச்ச சத்தம் தேஞ்ச இடத்துல இருந்து ஊராளுக பேச்சு ஆரம்பிச்சிருச்சு.

''எல்லாருக்கும் எதிரி வெளிய இருந்து வாறதில்லப்பா; வீட்டுக்குள்ளயிருந்துதான்.''

''பாவம் கருத்தமாயி... இந்த மனுசன் எத்தனையச் சமாளிப்பாரு பாவம். ரெண்டு தலைமுறையாக் கழியாத கடன்; ஒரு தலைமுறையாப் பேச்சுவார்த்தை இல்லாத பொண்டாட்டி; பாலூத்தி வளத்துப் பாம்பாகிப்போன மூத்த மகன்; ஊரைத் தூக்கி நிறுத்திட்டு வீட்டுக்கு இன்னும் வெறும்பயலா நிக்கிற இளைய மகன்; கஞ்சிக்கு விளையாத பூமி; கண்ணு தொறக்காத சாமி!''

மூன்றாம் உலகப் போர்

''என்னமோ கருத்தமாயி காட்டுல மட்டும்தான் மழை பெய்யாத மாதிரி பேசுறீங்க? எல்லார் பொழப்பும் அப்பிடித்தானக்கெடக்கு. வீட்டுக்கு வீடு வாசப்படி. எந்தப் பிள்ளைக தாய் தகப்பனோட ஒத்துப் பொழைக்குதுக? இடுப்புக்கு மேல வளந்ததும் கழுத்த எட்டிக் கடிக்குதுக. அழகுசங்கு மகன் தகப்பனக் கிணத்துல தள்ளிக் கொன்டுபுட்டானா இல்லியா?''

''ஆமா... அழகுசங்கு நல்லவனாக்கும்? சாகிற வரைக்கும் சொத்து இல்லடான்னு சொல்லிப்புட்டான்; மகன் கொன்னுபுட்டான். இடுப்பு வேட்டி மாதிரியே சொத்தை யும் இறுக்கிப் புடிச்சுக்கிட்டிருந்தா கதைக்கு ஆகுமா? ஆண்டமா, அனுபவிச்சமானு கொடுத்துறணுமா இல்லையா?''

''கொடுக்கறதுக்குத் தகப்பனுக்கு மனசு வரலாம். அத வாங்கிச் செலுத்த மகனுக்கு யோக்கியதை வேணுமா இல்லையா? பட்டுக் குஞ்சத்தக் கொண்டுபோயி விளக்கமாத்துல கட்டுனா விளங்குமா?''

''நீ விளக்கமாறை ஏன் பெத்த? வேல் கம்பைப் பெத்திருக்கணும்.''

''வேல்கம்பாப் பெறந்தது விளக்கமாறாப் போயிருதே.''

''யாரு தப்பு? வேல் கம்பு விளக்கமாறாப் போறவரைக்கும் பாத்துக்கிட்டிருந்தியே யாரு தப்பு? காளையோ, மோழையோ பெத்த துக கையில சொத்தைக் கொடுத் துட்டுக் கெழடு கட்டைக ஒதுங்க வேண்டியதுதான.''

''அப்ப... முத்துமணி கையில நிலத்தக் கொடுத்துட்டு, வயித்துல ஈரத் துணிய இறுக்கிக் கட்டிக் கருத்தமாயப் படுக்கச் சொல்றியா?''

''ஏன்? நிலம் கொடுத்த அப்பன் ஆத்தாளுக்குக் காலமெல்லாம் கஞ்சி ஊத்த மாட்டானா முத்து மணி?''

''ஊத்துவான் ஊத்துவான்... சாகப்போற வாய்க்குப் பாலூத்தக்கூடக் கணக்குப் பாக்கிற சண்டா ளப் பய... அப்பன் ஆத்தா பொழச் சுக்கெடக்கக் கஞ்சி ஊத்துவா னாக்கும்? அது தெரிஞ்சுதான புடிச்ச புடி விடாம நிக்கிறாரு கருத்தமாயி. கதசொல்லுவாகல்ல ஊருல... கடலுக்குள்ள தீவு இருக்கு; தீவுக்குள்ள மலை இருக்கு; மலைக்குள்ள குகை இருக்கு; குகைக்குள்ள பூவு இருக்கு; பூவுக்குள்ள வண்டு இருக்கு; வண்டுக்குள்ள புழுவு இருக்கு; புழுவப் புடிச்சு நசுக்குனா ராசா செத்துப்போயிரு வாருன்னு... அப்படித்தானப்பா கருத்தமாயி கதையும். நிலத்தப் புடுங்கிட்டா, அவரு ஆத்துமா அடங்கிரும். அதுக்குத்தான் அடிபோடுது அந்த லஞ்சத்துல பெறந்த நாயி!''

''அப்பனையே பஞ்சாயத்துக்கு இழுத்துட்டானே... பஞ்சாயத்துல என்ன கூத்தாகப்போகுதோ... கொடுமை நடக்கப்போகுதோ?''

வீட்டுக்குள்ள - திண்ணையில -தெருவுல - வயக்காட்டுல - களத்துமேட்டுல-சாராயக் கடையில - டீக்கடையில - தாயம்உருட்டுற இடத்துல - ஆத்தாங்கரையில - குளத்தாங் கரையில இதே பேச்சாயிருக்கு எங்க பாத்தாலும்!

மூன்றாம் உலகப் போர்

ன்னைக்கு ராத்திரி.

கட்டாகிப்போச்சு கரன்ட்டு. இருட்டுக் குள்ள முங்கிக்கெடக்கு ஊரு. சத்தத்தத் தொடச்சு வெளிய போட்டுட்டு இப்பநான் மட்டும்தான் இருக்கேன்னு சொல்லுது இருட்டு. இருட்டை எதுத்து என்னால நிக்க முடியலையேன்னு அழுதுக்கிட்டிருக்கு கருத்தமாயி வீட்டு லாந்தரு.

பச்சப் பனங்கிழங்கு மேல மஞ்சளத் தடவிக்கிட்டிருக்காக தகப்பனும் மகனும். கிழங்கை அவிக்க மஞ்சட்டிய வச்சு அடுப்பு மூட்டிக்கிட்டிருக்கா சிட்டம்மா. வெளிச்சமும் இருட்டும் கலந்தடிக்கிற மகன் மூஞ்சியையே பாத்துக்கிட்டிருக்காரு கருத்தமாயி.

''வெளிநாடு போக எல்லா சாங்கியமும் முடிஞ்சிருச்சா மகனே?''

''எல்லாம் முடிச்சாச்சப்பா. விசா மட்டும்தான் வரணும்; நாளைக்கு வந்துரும்.''

''அதென்னப்பா விசா?''

''நீ சொந்த நாட்டைவிட்டுப் போகலாம் கறதுக்கு அனுமதிதான் பாஸ்போர்ட்டு. எங்க நாட்டுக்குள்ள நீ வரலாம்கிற அனுமதிதான் விசா!''

''அதுக்கொரு அனுமதியா? கொக்கு, நாரை, குருவி எல்லாம் விசா வாங்கியா வெளிநாடு போயிட்டு வருதுக? மனுசன்தான் கெட்டசாதிப் பய போல இருக்கு. ஒருத்தனையும் நம்பி உள்ள விட முடியல!''

தகப்பனும் மகனும் மஞ்சப் பூசிவச்ச பனங்கிழங்கை அள்ளி மஞ்சட்டியில மொத்தமாக் கொட்டுனா சிட்டம்மா; சீமைக் கருவேல முள்ளுத் தள்ளி அடுப்பு எரிக்க ஆரம்பிச்சா.

தள்ளி உக்காந்திருந்த மகன்கிட்ட நகந்து நகந்து வந்தாரு கருத்தமாயி. அவன் தலைக் குள்ள கையவிட்டு அஞ்சு விரலையும் குடுமிக்குள்ள அழுத்துனாரு. அப்பன் செல்லம் கொஞ்சறது தலையிலயிருந்து கால் வரைக்கும் புரியுது மகனுக்கு. என்னமோ சொல்ல வாராருன்னு அவரு அழுத்துன அழுத்து ஒரு குறி காட்டுது.

''சின்னப்பாண்டி... இந்த ரெண்டு நாளா நெஞ்ச என்னமோ கவ்வுதுரா மகனே!''

''என்னப்பா சொல்ற? பஞ்சாயத்துக்குப் பயப்படறியா?''

''அதெல்லாம் ஒரு கவலையில்லப்பா எனக்கு. விடிஞ்சு எந்திரிச்சா மனுசனுக்கு அவன் பொழப்புல ஒரு உப்பு, உறைப்பு இருக்கணுமா இல்லையா? உங்கண்ணன் இல்லாட்டி, எம் பொழப்புல உப்பு ஏது? உறைப்பு ஏது? ஒரு வருசத்துக்கு நான் பெத்த மகன் மூஞ்சி காணாம அலையப்போறனே... அத நெனச்சுத்தான் மகனே நெஞ்சுக் கூட்டுல நிம்மதி செத்துப்போச்சு!''

அப்பன் தலையிலவச்ச கைய எடுத்து நெஞ்சுலவச்சு அழுத்திக்கிட்டான் சின்னப் பாண்டி.

''ஒரு வருஷம்தான்... கண்ணு மூடிக் கண்ணு முழிக்குமுன்ன ஓடிப் போயிருமப்பா!''

''ஒரு வருசம் கழிச்சாவது வந்து சேந்திர மாட்டியா?''

''நிச்சயம் வந்திருவனப்பா.''

''சத்தியம் பண்ணிக்கொடு.''

''எதுக்குச் சத்தியம்?''

''என் தலையில அடிடா மகனே. 'தண்ணி’ புழங்க மாட்டேன் - சீரெட்டுக் குடிக்க மாட்டேன் - சில்லரை விளையாட்டு விளையாட மாட்டேன். சொல்லி அடி என் உச்சந்தலையில.''

''ஏப்பா... என் மேல நம்பிக்கை இல்லையா?''

''உம் மேல இருக்கப்பா. ஊரு மேல நம்பிக்கை இல்ல!''

''சரிப்பா சத்தியம். நீ சொன்ன மூணை யும் தொட மாட்டனப்பா!''

அவன் நெஞ்சுலவச்ச கைய உருவி மகன் கன்னத்தையே தடவிக்கிட்டிருந்தாரு கொஞ்ச நேரமா.

சிட்டம்மா அடுப்புல போட்ட கிழங்கு வெந்து மலந்துபோச்சு. எறக்கி வைக்குமுன்ன உப்புக் கல்ல அள்ளி உள்ள  எறிஞ்சா. அவிச்ச கிழங்க சொளகுல கொட்டி ஆறவச்சுத் தட்டுல எடுத்துப் போட்டுக் கொண்டாந்து வச்சா.

பனங்கிழங்க உரிச்சு உரிச்சு அப்பனுக்குக் கொடுத்துக்கிட்டே சின்னப்பாண்டி சொல்றான்:

''யப்பா... நீங்க மூணு சொன்னீக. நான் மூணையும் கேட்டுக்கிட்டேன். நான் ரெண்டு சொல்லுவேன்; ரெண்டையும் கேட்டுக்கிருவீகளா?''

''சொல்லு மகனே!''

மூன்றாம் உலகப் போர்

''என் உசுரைக் கொடுத்து இந்த ஊர ஒரு மாதிரி கிராமமா மாத்தி வச்சிருக்கேன். அதுக்குள்ள நாய், நரி புகுந்துறாமப் பாத்துக்கிருவீகளா? நீங்கதான் காவல்   காக்கணும். மகன் விட்ட இடத்த அப்பன் கொண்டுசெலுத்துவீகளா?''

''நான் விட்டத நீ செய்யணும்; நீ விட்டத நான் செய்யணும். செய்யிறண்டா சின்னப்பாண்டி!''

''இன்னொண்ணும் சொல்லப்போறேன்; கேப்பீகளா?''

''மொதல்ல சொல்லு.''

''நான் வெளிநாடு போறத நெனச்சா நெஞ்சக் கவ்வுதுன்னு சொன்னீகளே... ஏன் தெரியுமா?''

ஏன்கிற மாதிரி ஒரு பார்வை பாத்தாரு கருத்தமாயி.

''நான் போயிட்டா இந்த வீட்டுல நீங்க தனி ஆளா ஆயிருவீங்க. பேச்சுத் துணைக்கு ஆளிருக்காது உங்களுக்கு. ஆடு, மாடு, கன்னுக்குட்டி, நாயி, பூனை, நரின்னு ஏகப் பட்ட பேச்சுத் துணை இருக்குஎங்காத் தாளுக்கு. நீங்க என்ன பண்ணுவீக?மோட்டு வளையப் பாத்துக்கிட்டே எத்தனை நேரம் மூச்சுவிடுவீக? பிள்ளை குட்டிக பக்கத்து லயே இருந்ததனால, சைகையிலும் சாடை மாடையிலுமா முப்பத்தோரு வருஷம் முடிஞ்சுபோச்சு உங்க காலம். இப்ப கடைசி ஆளு நானும் போகப்போறேன். இனி எப்படிக் காலம் தள்ளுவீக? அதனால...''

''அதனால...'' உரிச்ச கிழங்கை வாயில மென்னு அதக்கிக்கிட்டே கண்ணைஉருட்டி உருட்டி மகனைப் பாத்தாரு கருத்தமாயி.

''அப்பன், ஆத்தா ரெண்டு பேரும் என் கண்ணு முன்னால பேசணும். ரெண்டு பேரும் கூடிப் பேசி என்னிய வழியனுப்பி வைக்க ணும். என்னிய உங்க புள்ளயாப் பெத்தீக. நான் பேசி நீங்க கேட்டிருக்கீக. நீங்க பேசி நான் கேட்டதில்ல. பேசுங்கப்பா. பேசாத தாய், தகப்பன்கூட வாழறது ஒரு பிள்ளைக்கு எவ்வளவு கொடுமை தெரியுமா? அப்பன் - ஆத்தா சிரிச்சுப் பேசறதப் பாக்க ஒரு பிள்ளைக்கு ஆசை இருக்காதா? என்

நெஞ்சுல ஒரு பாராங்கல்லக் கட்டியே இத்தனை வருஷம் வளத்துட்டீங்களேப்பா. கண்காணாத தேசம் போகப்போறன். இப்பவாவது என் பாரத்தை எறக்கிவையுங்க அப்பா.''

மளார்னு அப்பன் மடியில விழுந்து சின்னப்பையன் மாதிரி கதறி அழுகிறான் சின்னப்பாண்டி. என்னமோ ஏதோன்னு அடுப்பைவிட்டு ஓடி வாரா சிட்டம்மா.

''வெளியூரு போற புள்ளைக்குத் தைரியம்  சொல்லி அனுப்பாம இப்பிடிக் கண்ணீரும் கம்பலையுமா அனுப்பக் கூடாதுன்னு சொல்லிவையி பூனைக் குட்டி!''

விளக்கமாத்தை எடுத்து பூனை மேல ஒரு போடு போட்டா சிட்டம்மா.

மடியில கெடந்த மகனத் தூக்கிக் கண்ணத் துடைச்சாரு கருத்தமாயி.

''ஏலே ராசா... இதென்னடா வம்பாப் போச்சு. என் மேல ஏதாச்சும் தப்பு இருக்கா? பேச மாட்டேன்னு முறுக்கி நிக்கிறது நானா? ஒரு புடிவாதக்காரிகிட்ட என் பொழப்பு அழிஞ்சுபோச்சு. பேச வேண்டிய காலத்துல பேசல; இனி பேசி என்னஆகப்போகுது? உனக்காக நான் பேசிப் பாக்கறேன் மகனே. அவளைத் திருப்பிப் பேசச் சொல்லு!''

அப்பனும் கூடவே அழுது தேத்தவும் ஆத்தா மேல சீறி விழுந்துட்டான் சின்னப் பாண்டி.

''இல்லாத பழிக்காக எங்கப்பனை இத்தன வருஷம் கொன்டு குலையஅத்துட்டியே கெழவி. நான் ஊருக்குப் போறதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் பேசல... நான் ஊருக்கே போக மாட்டேன் ஆமா.''

''ஏலே சின்னப் பயலே... உனக்கென்னடா தெரியும்? நான் அத்துக்கிட்டுப் போகாம இத்தன வருசம் ஊரு மேஞ்ச ஆளோட உலைவச்சதே பெருசு. இந்தா இந்தான்னு முடிஞ்சுபோச்சு பொழப்பு. இனி பேசுனா என்னா... பேசாட்டி என்னா?''

ஒரு இழுவையான பேச்சுப் பேசி, இன்னும் ரெண்டு பனங் கிழங்கை எடுத்துவச்சுட்டு உள்ள போயிட்டா சிட்டம்மா.

''உன் ஏக்கம் எனக்குத் தெரியுமுடாதங்கம். நீ எதையும் மனசுல வச்சுக்கிராத. நம்ம குலசாமி கூடவே வரும். போயிட்டு வா. ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கடா மகனே... ஒரே வீட்டுல பேச்சுவார்த்தை யோட பிரிஞ்சு பொழைக்கிறத விட, பேச்சுவார்த்தை இல்லாம ஒண்ணா இருக்கிறது பெருசில்லையா? விடு - விதி விட்ட வழி ஆகட்டும்!''

அழுத மகனத் தூக்கி நிமித்தித் தோள்ல சாச்சுக்கிட்டாரு. அழுக்கு வேட்டிய

எடுத்துக் கண்ணத் தொடச்சுவிட்டாரு. தேஞ்சுபோன லாந்தர்ல திருகிவிட்டாரு திரிய.

மகன் திங்காம வச்சிருந்த பனங்கிழங்க இழுத்தாரு பக்கத்துல.

''எடுத்துக்கடா மகனே... கெழங்க எடுத்துக்க!''

அவன் கண்ணைத் தொடச்சுக்கிட்டு அப்பனுக்காக ஒரு கிழங்கை எடுத்து உரிச்சான்.

பாவம்... அவன் கிழங்கு வேகல.

ரே கூடியிருக்கு அரசமரத்தடி அம்பலக்கல்லுல. வெளியூருக்கு எழவுக்குப் போன ஆளுகளத் தவிர வராத ஆளுக இல்ல. ஓரஞ்சாரமெல்லாம் கூடி நிக்கிறாக பஞ்சாயத்துல உக்கார முடியாத பொம்பளையாளுக.

சின்னஞ்சிறுசுக நெனப்புல ஒரு கண்காட்சி நடக்குது அங்க. காணாமப்போயிருச்சுக மரத்துல இருந்த காக்கா குருவிக எல்லாம். இறுக்கமா இருக்கு பஞ்சாயத்து; ஒருத்தரும் ஒரு வார்த்தையும் பேசல. ''பெத்த தகப்பனப்

பஞ்சாயத்துல நிக்கவச்சிருக்கிற மகனப் பாரு''ன்னு சலசலன்னு பேசிக்கிட்டிருக்குக அரசமரத்து இலைக மட்டும்.

தோள்ல கிடந்த துண்டைச் சுருட்டித்தரையில முறிவச்சாரு கருத்தமாயி. வருச நாட்டு யானை மாதிரி நிமிந்து நிக்கிற மனுசன் வாழைத்தாரு மாதிரி தரை பாத்து நிக்கிறாரு பாவம்.

ஒரு ஒப்புக்குக் கையக் கட்டிக் கிட்டு, என் கெண்டைக்கால் ரோமத்தக்கூட ஒரு பய அசைக்க முடியாதுங்கற மாதிரி வெடச்சு வெறப்பா நிக்கிறான் முத்துமணி.

வெத்தல எச்சிய உக்காந்துக்கிட்டே ஓரமாத் துப்பிட்டுத் தொண்டையச் செருமுறாரு நாட்டாமை.

''ஏப்பா முத்துமணி... பஞ்சா யத்துக் கூட்டுனது நீயி. உன் பிராது என்னா? சபையில சொல்லு?''

''பெரியவுகளாக் கூடியிருக்கீக. எனக்கு நல்ல தீர்ப்புச் சொல்லுங்க. என் நிலைமைய நெனச்சுப் பாருங்க. புடி கொப்புமில்லாம மிதி கொப்புமில்லாமப் பொழப்பத்துப் போய் நிக்கிறேன். உத்தியோகம் போச்சு; உள்ள காசும் போச்சு. மாமனாரு சாமியா ராகிச் சொத்தைக் கோயிலுக்கு எழுதி வச்சுட்டாரு. கேசு நடத்தவும் காசு இல்ல. தெருத் தெருவாப் பிச்சையெடுக்கிறேன். அதனால என் பிராது கேட்டுப் பஞ்சா யத்து என் மேல எரக்கம் காட்டணும்!''

முத்துமணி சொன்னதைக் கேட்டுக் கெக்கெக்கேன்னு சிரிச்சுக்கிட்டே எந்திரிச்சுட்டாரு பரமனாண்டி.

''எங்கேயோ கேட்ட கதையா இருக்கு தம்பி உன் கதை. ஒரே அருவாள்லஅப்பன் ஆத்தாள வெட்டிக் கொன்டவனக் கோர்ட்டுல கொண்டுபோயி நிறுத்துனாங்களாம். ரெண்டு கையும் தலைக்கு மேல தூக்கி நீதிபதிக்கு ஒரு கும்புடு போட் டுட்டு, 'அய்யா... ஜட்ஜய்யா... அப்பன் ஆத்தா இல்லாத அநாதைப்பய நானு... எனக்குக் கருணை காட்டுங்கய்யா’ன்னு பொய்க் கண்ணீருவிட்டானாம் அந்தக் கொலகாரப் பாவி. அந்தக் கதையால்ல இருக்கு உன் கதை. நீ உத்தியோகம் கெட்டதுக்கும் ஊரு மாறி அலையறதுக்கும் பஞ்சாயத்தா பொறுப்பு? உன் வழக்கை நீ சொல்லப்பா. நல்லது கெட்டத நாட்டாமை சொல்லட்டும். சுத்திவளைக்காம விசயத்துக்கு வா!''

பரமனாண்டிய வெறிச்சு ஒரு பார்வை பாத்துட்டு முத்துமணி சொல்றான்: ''சுத்தி வளச்சு ஏர்ற துக்கு இது என்ன பழநியா?திருப் பதியா? சொல்றேன் கேட்டுக்குங்க. எங்க தாத்தன் சீனிச்சாமி தேடி வச்ச சொத்து மூணரை ஏக்கரு. சீனிச்சாமி மக்க ரெண்டு பேரும் அத ரெண்டாப் பிரிச்சுக்கிட்டாக. என் பெரியப்பன் சுழியன் பங்கை எம் பேருல எழுதிக் கொடுத்துட்டாரு. பாதிப் பங்கு எங்கப்பன் அனுபோகப் பாத்தியதையில இருக்கு. கடனுக்கு அடமானம் கெடந்த பத்திரத்த அசலும் வட்டியும் கட்டி நான் மீட்டிருக்கேன். தாத்தன் அடமானம் வச்ச நிலத்தப் பேரன் மீட்டிருக்கேன். அப்ப டின்னா, தாத்தன் சொத்து இந்தப் பேரனுக்குத்தான சொந்தம்? விட்டு விலகச் சொல்லுங்க இந்தப் பெரிய மனுசன. இந்தாங்க நான் மீட்டுக்கிட்டு வந்த தாய்ப் பத்திரம்!''

பணிஞ்சு கொடுக்கிறவன் மாதிரி எறிஞ்சான் பத்திரத்தப் பஞ்சாயத்து மேல.

அதை எடுத்துப் படிக்கத் தெரிஞ்சவக படிச்சு சரிதான்னு தலையாட்டிக்கிட்டாங்க.

''யப்பா முத்துமணி! பத்திரத்த நீ மீட்டுட்டு வந்துட்ட சரி. ஆனா, நிலம் உங்கப்பன் பேருலயுமில்ல; உம் பேருலயும் இல்ல; உங்க தாத்தன் சீனிச்சாமி பேருலயில்ல இருக்கு. அப்பன் தாத்தன் சொத்துல உன் தம்பிக்கும் பங்கு இருக்கா இல்லையா? சொத்தை உனக்கெழுதிக் கொடுக்க உங்க அப்பனுக்கே அதிகாரமில்லப்பா!''

''கோர்ட்டுக்குப் போனா இப்பிடிச் சட்டம் பேசுவாங்கன்னு தான் நான் பஞ்சாயத்துக்கு வந்தேன். சட்டத்த விட்டுருங்க. நடைமுறையப் பாருங்க. அப்பறம் நடக்கக் கூடாதது நடந்துபோயி ரும்'' - தணிஞ்ச குரல்ல மிரட்டு னான் முத்துமணி.

''உன் மகன் சொல்றதச் சொல்லிட்டான். நீ என்ன சொல்ற கருத்தமாயி?''

பூமி பாத்து நிதானமாப் பேசுறாரு கருத்தமாயி:

''அய்யா... நான் நிலத்த விக்கப் போறதுமில்ல; ஊரைவிட்டு ஓடப்போறதுமில்ல. என் காலத்துக்குப் பெறகு, என் பிள்ளைக ரெண்டு பேரையும் பாதி பாதி எடுத்துக்கிறச் சொல்லுங்க. இப்ப நான் நிலத்த விட்டுட்டா சுடுகாட்டுலகூட எடமிருக்காது எனக்கு. உசுரு கொடுத்த மண்ணுலயே என் உசுரு போக ஆசைப்படறேன். என் மகன் சொத்தை நான் இல்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனா, உசுருள்ள வரைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!''

''அப்பிடிச் சொன்னா எப்பிடி கருத்தமாயி? உன் மகன் உங்க அண்ணன் நிலத்தக் கிரயத்துக்கு வாங்கியிருக்கான். மொத்த நிலத்துக்கும் கடனைக் கட்டியிருக்கான். அவன் செலவழிச்ச காசுக்கு என்ன வழி சொல்ற?''

''நிலத்தைப் பங்கு பிரிச்சா, கடனையும் பங்கு பிரிச்சுத்தான ஆகணும்? சின்னப் பாண்டி சம்பாதிச்சு வந்து கடனைக் கட்டி நிலத்தைப் பிரிப்பான். அதுவரைக்கும் எப்பவும்போல எங்கிட்டயே இருக்கட்டு மப்பா நிலம்!''

பஞ்சாயத்துக்காரங்க கசபுச கசபுசன்னு காதுக்குள்ள என்னமோ பேசிக்கிட்டாங்க.

துண்டை எடுத்து மறைவு கட்டி ஒருத்த ருக்கொருத்தர் கலந்துகிட்டாக.

அப்புறம் எல்லாரையும் கையமத்தி நாட்டாமை பேச ஆரம்பிச்சாரு: ''யப்பா முத்துமணி... நீ விவசாயம் பண்ணப்போறியா - விக்கப்போறியா நிலத்த?''

மூக்கு மேல கோவம் வந்திருச்சு முத்துமணிக்கு. ''ஏய்யா... விலைக்கு வாங்குன கோழியக் கூட்டுல அடைச்சா என்ன? கொழம்பு வச்சா என்ன? தீர்ப்புச் சொல்லுங்கய்யா.''

''இந்தா பாரப்பா... என்னைக்கிருந்தாலும் நிலம் உனக்குத்தான். இப்ப எங்க தீர்ப்பக் கேட்டுக்க. நிலம் உங்கப்பன்கிட்ட இருந் தாக் குடும்பமே கஞ்சி குடிக்கும். உனக்குச் சொந்தமாயிட்டா என்னாகும்னு ஊருக்கே தெரியும். அதனால உங்கப்பன் காலம் வரைக்கும் அவரே உழுது கஞ்சி குடிக்

கட்டும். அவரு காலத்துக்குப் பெறகு, உன் தம்பி உன் கடனைக் கட்டுனா நிலத்தைப் பிரி; இல்ல நீயே அனுபவி!''

''நூத்துல ஒரு தீர்ப்புய்யா. கடவுளே மனுசனுக்குச் சொன்ன மாதிரி இருக்கு!''

ஊரே கூடித் தீர்ப்பை ஒகோன்னு சொல்லிருச்சு.

மூஞ்சி செத்துப்போயி முத்துமணி சொல்றான்:

''எங்கப்பன் பஞ்சாயத்த நான் வீட்டுல பாத்துக்கிர்றேன். இன்னொரு பஞ்சாயத்து இருக்கு. பரமனாண்டி, கெடாவீரன், ஒத்த வீட்டு மூளி மூணு பேரும் அவுக நிலத்த எம் பேருல எழுதிக்கொடுத்திருக்காக. நிலத்த என்கிட்ட ஒப்படைக்கச் சொல் லுங்க. இந்தாங்க பத்திரம்!''

''இது என்னா புதுக் குண்டைத் தூக்கிப் போடறான்? நாங்க எப்ப எழுதிக் கொடுத் தோம்?''

வாங்கிப் பாத்தா பத்திரமும் சரியாயிருக்கு; கையெழுத்தும் சரியாயிருக்கு.

''ஏப்பா பரமனாண்டி! இது உன் கையெழுத்துதான?''

''ஆ...மா எங் கையெழுத்துதான்.''

''யக்கா மூளி! இது ஓங் கையெழுத்தா பாரு...''

''கையெழுத்து என்னதுதான். நான் எழுதிக்குடுக்கலையே.''

கெடாவீரனும் கையெழுத்த ஒத்துக்கிட் டாரு; பத்திரத்த ஒத்துக்கல.

இது என்னடா இது குறளி வேலையா இருக்குன்னு ஊரே மண்டை காஞ்சு நிக்குது.

அவுக முன் பணம் வாங்குன ரசீதுல இருந்த கையெழுத்த எடுத்துப் போலிப் பத்திரம் தயார் பண்ணுன சங்கதி முத்து மணிக்கு மட்டும்தான தெரியும்.

கசமுச கசமுசன்னு கலவரமாகிப்போச்சு கூட்டத்துக்குள்ள.

''இதுல என்னமோ ஒரு ஏடாகூடம் இருக்கப்பா!''- சலசலப்பாகுது பஞ்சாயத்து.

நெஞ்சு வெந்துபோயிக் கும்பி கருகிப் பேசுறாரு கருத்தமாயி:

''ஏலே முத்துமணி... என்னிய ஏச்சாக் கூடப் பரவாயில்லடா. ஊரை ஏச்சுப் பொழைக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா? இந்தப் பொழப்புக்கு நீ நாண்டுகிட்டுச் சாகலாம்டா.''

''நான் நாண்டுகிட்டுச் சாகணுமா? ஒன்னிய வெட்டி எறிஞ்சுட்டு நாண்டு கிட்டுச் சாகிறேன்!''

அதுவரைக்கும் கூட்டத்துக்குள்ள கையக் கட்டி உக்காந்திருந்த சின்னப் பாண்டி, புலி மாதிரி தவ்வி எந்திரிச்சு ஆவேசமாப் பாஞ்சு அண்ணன் சட்டையப் புடிச் சுட்டான்.

''அப்பனை வெட்டறேன்னு சொல்றியே... நீ ஒரு மகனா? எனக்கு அண்ணனா?''

''எடுறா கைய... எடுறா. என் நெஞ்சுல நீயா கையி வச்சிருக்க? எல்லாம் வெள்ளைக் காரி கொடுத்த விசை வேலை செய்யுது. அமெரிக்காவுக்கு நீ போயிருவியா? அதை யும் பாக்கிறேன்!''

தள்ளுமுள்ளாகிப்போச்சு பஞ்சாயத்து. அண்ணன்கிட்டயிருந்து தம்பிய வெலக் கித் தாய்க் கோழி குஞ்சுக் கோழியச் சிறகுக்குள்ள அணைச்சுக் கூட்டிட்டுப் போற மாதிரி சின்னப்பாண்டியக் கூட்டிக்கிட்டு நடந்துபோறாரு கருத்தமாயி.

முத்துமணி கத்துன கத்து கலவரக் கூச்சலத் தாண்டி வந்து காதுல விழுகுது.

''ஏலே அட்டணம்பட்டியில பெறந்த வனே... ஒன்னிய அமெரிக்கா போக விட மாட்டண்டா!''

- மூளும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு