Published:Updated:

விதிமுறைகளுக்கு உட்பட்டே EC செயல்படுகிறது: பிரவீன்

Vikatan Correspondent

மதுரை, மே 4,2011

விதிமுறைகளுக்கு உள்பட்டே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்றும், பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்றும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பிரவீன் குமார் தலைமையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிட்ம பிரவீன் குமார் கூறுகையில், "சட்டப் பேரவைத் தேர்தலில் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்துக்கு அடிப்படையில் என்ன விதிமுறைகள் உள்ளனவோ, அந்த விதிமுறைகளை மட்டுமே தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இது மட்டுமல்லாமல், அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு, தேவையைப் பொறுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் விதிமுறை மீறல் குறித்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதன் எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாயின என்ற விவரம் தெரிய வரவில்லை. தமிழகத்தில் மொத்தம் 62 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் சுவற்றில் கட்சிச் சின்னம், வேட்பாளர் பெயர் எழுதுவது போன்றவையாகும். பணப் பட்டுவாடா குறித்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 330 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 296 வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன," என்றார்.

தபால் வாக்குகளுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, "இதுகுறித்து எங்களுக்கு எவ்விதப் புகாரும் இதுவரை வரவில்லை. இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால் விசாரணை நடத்தப்படும்.

அவ்வாறு தபால் வாக்குக்காகப் பணம் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். இதில், ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

போலீஸார் உள்ளிட்டோருக்கு தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் சரிவரக் கிடைக்கவில்லை என்றும் சிலர் புகார் எழுப்பியுள்ளனர். கடைசி தேதி வரை சம்பந்தப்பட்ட படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன. தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்பது தெரியவரும்பட்சத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படும்," என்றார் பிரவீன் குமார்.