தொழில்நுட்பம்
Published:Updated:

அவதார் E4

அவதார் E4

அவதார் E4
 ##~##

டந்த ஆண்டு மே மாதத்தில்தான் ரெனோ ஃப்ளூயன்ஸ் அறிமுகமானது. ஓராண்டுக்குள் இதன் டீசல் இன்ஜினில் சில மாற்றங்களைச் செய்து இப்போது மீண்டும் வெளியிட்டிருக்கிறது. இந்த மாற்றம், பிரெஞ்ச் நாட்டு காரை பெட்டரான காராக மாற்றுகிறதா? சென்னையில் இருந்து பிரெஞ்சு நாட்டின் ஜன்னலாக விளங்கும் புதுச்சேரி வரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். 

ஃப்ளுயன்ஸ் டீசல் வேரியன்ட் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டபோது, உபகரணங்கள் நிறைந்த, விலை உயர்ந்த E4 வேரியன்டில் விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. மாறாக, உபகரணங்கள் அதிகம் இல்லாத விலை குறைந்த E2 மாடலில் தான் டீசல் காரை அறிமுகப்படுத்தியது. இந்த முடிவு, ஃப்ளூயன்ஸுக்குச் சாதகமானதாக இல்லை. இதை லேட்டாக உணர்ந்து கொண்ட ரெனோ, லெதர் இருக்கை மற்றும் உள்ளலங்காரம், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க்கிங் சென்ஸார், ப்ளூ-டூத், மழை வந்தால் தானாகவே இயங்கும் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட் லைட்ஸ் என்று சகலவிதமான வசதிகளோடும் ஃப்ளூயன்ஸ் E4  டீசல் காரை, கடந்த செப்டம்பர் மாதமே அறிமுகம் செய்தது. ஆனால், இதன் அத்தனை பிரச்னைகளும் முடியவில்லை.

ஃப்ளூயன்ஸில் பொருத்தப்பட்டு இருந்த 1.5 லிட்டர் டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின், ஆரம்ப வேகத்தில் உத்வேகத்தோடு செயல்படவில்லை. ஆனால், 2000 ஆர்பிஎம் தாண்டினால் சக்தி பிரவாகமெடுக்கிறது.

அவதார் E4

அதனால், 'நின்று நின்று ஓட்டக்கூடிய சிட்டி டிராஃபிக்கில், ஓட்டுவதற்கு இது சுலபமானதாக இல்லை’ என்று குரல்கள் எழுந்தன. இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, இன்ஜினுக்கு காற்று செல்லும் பாதை, இன்ஜெக்ட்டர்கள் என பல மாறுதல்களைச் செய்திருக்கிறது. பேப்பரில் எழுதிப் படிக்கும்போது இந்த மாறுதல்கள் எல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியாது. ஆனால், இன்ஜின் பர்ஃபாமென்ஸில் நல்ல மாற்றம் தெரிகிறது.

அதாவது, இன்ஜின் திறன் 3 bhp அதிகமாகி 108 bhp ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், டார்க்தான் கவனிக்க வேண்டிய விஷயம். இதன் அதிகபட்ச டார்க் அதே 24.5 kgm ஆகவே இருக்கிறது. ஆனால், முன்னைவிட 150 ஆர்பிஎம் முன்னதாகவே, அதாவது 1850 ஆர்பிஎம்-லேயே இந்த டார்க் வெளிப்படுவதுதான் கவனிக்கத்தக்க விஷயம். இந்த மாற்றத்தால், குறைந்த வேகத்தில் திக்காமல் திணறாமல் காரை ஓட்ட முடிகிறது. அது மட்டுமல்ல, முந்தைய காரில் 2000 ஆர்பிஎம்-ஐ தாண்டியதும் திடீர் என்று சக்தி பீறிட்டதைப் போல அல்லாமல், 1700 ஆர்பிஎம்-ல் இருந்தே சக்தி சீராக வெளிப்படுகிறது. அதனால், சிட்டி டிராஃபிக்கில் ஓட்டுவது இப்போது ஒரு பிரச்னையாக இல்லை. ஆனால், ஆரம்ப வேகத்தில் வெளிப்படும் சக்தி ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா அளவுக்கு இல்லை என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். இதன் கியர் பாக்ஸ் நன்றாக இருக்கிறது என்றாலும், இன்னமும் இதை இயக்குவதற்கு கொஞ்சம் அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கிறது. முந்தைய காரைவிட இந்த ணி4 டீசல் இன்ஜின் சத்தம் குறைவாகவே கேட்கிறது. ஆனாலும், ஐடிலிங்கிலும் சரி, ஆர்பிஎம் ஐயாயிரத்தைத் தாண்டும்போதும் சரி, இன்னமும் சத்தம் கேட்கிறது.

அவதார் E4

E4 டீசலின் உச்சபட்ச சக்தியைச் சோதித்துப் பார்க்க, இதன் அதிகபட்ச வேகத்தைத் தொட வேண்டிய தேவையே ஏற்படவில்லை. இதன் 'மிட் ரேஞ்ச்’ முன்னே செல்லும் வாகனங்களை ஓவர் டேக் செய்வதற்கும், நெடுஞ்சாலையில் ஹாயாக ஓட்டுவதற்கும் போதுமானதாக இருக்கிறது.

இன்ஜினைத் தவிர வேறு எந்த மாற்றங்களும் இதில் இல்லை என்றாலும், புதுச்சேரி ட்ரிப் இதில் இருக்கும் அம்சங்களோடு மறு பரிச்சயம் செய்துகொள்ள உதவியாக இருந்தது. இதன் சஸ்பென்ஷன் அருமை. குறைந்த வேகத்தில் பெரிய பள்ளத்தில் இறங்கினால்கூட அதிர்வுகளை இந்த கார் உள்ளே கடத்தவில்லை. அதேபோல, இதன் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்கும் அற்புதமாக வேலை செய்கிறது. காரைக் குறைந்த வேகத்தில் பயன்படுத்தும்போதும்கூட இதைக் கையாள்வது இலகுவாகவே இருக்கிறது. கால்களை நீட்டி மடக்குவதற்கு பின்னிருக்கைகள் தாராளமாகவே இருக்கின்றன. சென்டர் கன்ஸோலிலும் இருக்கும் பட்டன்கள் மிகச் சிறியதாக இருப்பதால், பயன்படுத்துவதற்குச் சிரமமாகவே இருக்கின்றன. ஸ்டீயரிங்கில் இருக்கும் ஆட்டோ கன்ட்ரோல் பட்டன்களும் வாட்டமான இடத்தில் இல்லை.

அவதார் E4

ஃப்ளூயன்ஸ் எடுத்திருக்கும் E4 அவதார், ஓட்டுவதற்கு உற்சாகம் கொடுப்பதாகவும் ஏராளமான உபகரணங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் ஜெட்டா போன்ற போட்டியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரெனோ இதன் விலையை நிர்ணயித்திருக்கிறது. தாமதமாகச் செய்யப்பட்ட மாற்றங்கள், பயன் தருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!