Published:Updated:

அருணாச்சல் CM டோர்ஜி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

Vikatan Correspondent

இடாநகர், மே 4,2011

அருணாச்சல் CM டோர்ஜி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருடன் பயணம் செய்த நால்வரும் பலியாகினர்.

டோர்ஜி காண்டுவின் மரணத்தை, வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டுவின் மறைவால் தாம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.  

கடந்த 5 நாட்களாக நடந்து வந்த தீவிரமான தேடுதலில், டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இன்று (புதன்கிழமை) கண்டறியப்பட்டது.

முன்னதாக, பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் யூரோகாப்டர் பி3 ரக ஹெலிகாப்டரில் டோர்ஜி காண்டு உள்ளிட்ட 5 பேர் தவாங்கில் இருந்து மாநிலத் தலைநகர் இடாநகருக்குப் பயணம் செய்தனர். இரு விமானிகள் அந்த ஹெலிகாப்டரை இயக்கினர். ##~~##

இடாநகரில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாங்கில் இருந்து சனிக்கிழமை காலை 9.56-க்கு புறப்பட்டது. அது 11.30 -க்கு இடா நகருக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் தவாங்கில் புறப்பட்ட 20 நிமிஷங்களிலேயே அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான அனைத்து தொடர்புகளையும் இழந்தது.
 
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இருக்குமோ என்று பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தேடுதல் பணி தீவிரமானது.

பூடான் எல்லைப் பகுதி, தவாங் - இடாநகர் இடையே கடந்த ஐந்து நாட்களாக தேடும் பணியில் விமானப்படையின் சுகோய், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

அத்துடன், தரை வழித் தேடும் பணியில் சுமார் 3,000 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும், செவ்வாய்க்கிழமை இரவு வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், லுகுதாங் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்ததை தேடலில் ஈடுபட்ட வான்படையினர் இன்று காலை கண்டறிந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் டோர்ஜி காண்டு உள்பட 5 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.