Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : ஓவியர் ஸ்யாம்படம் : கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி

பிரபலங்கள்  விகடனுடனான தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

''ராஜபாளையத்தில் ஸ்கூல் படிக்கும்போதே நான் நல்லா ஓவியம் வரைவேன். அந்த 'ஓவியர்’ அந்தஸ்துக்காகவே எப்பவும் என்னைச் சுத்தி பத்துப் பசங்க இருப்பாங்க. அப்போ ஒருநாள், என்கூடப் படிச்ச சீனிவாசன்கிற பையன் ரஜினி கையெழுத்து போட்ட போட்டோவைக் கொண்டுவந்தான். உடனே பசங்க அவன் பின்னாடி போயிட்டாங்க. சடார்னு 'செல்வாக்கு’ இடம் மாறினதை என்னால் ஏத்துக்க முடியலை. ரஜினி, கமல் ஓவியங்களை வரைஞ்சு எடுத்துக்கிட்டு, 'மெட்ராஸுக்குப் போயி அவங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டுத்தான் வருவேன்’னு கிளம்பிட்டேன். ஏவி.எம். ஸ்டுடியோ, அங்கே இங்கேனு அலையுறேன். எங்கேயும் கதவு திறக்காம... கடைசியா நான் வந்து நின்ன இடம் விகடன் அலுவலகம்.

பத்திரிகைன்னா என்ன, அதுக்கு எப்படி வரையணும், என்ன தகுதி... எதுவும் தெரியாது. ஆனா, விகடன் ஆபீஸ் ரிசப்ஷன்ல உட்கார்ந்திருக்கேன். அங்கே இருந்த விகடன் தாத்தா சிலை எனக்கு சாமி சிலை மாதிரி தோணுச்சு. 'எனக்கு இங்கேயே வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சா, உனக்குத் தேங்காய் உடைக்கிறேன்’னு மனசுக்குள்ளயே வேண்டிக்கிட்டேன். ஆனா, ரஜினி, கமல் படங்களைப் பார்த்ததும் ஏதோ ரசிகர் மன்ற ஆளுனு நினைச்சுட்டாங்கபோல. அப்போ, வாய்ப்பு கிடைக்கலை.

நானும் விகடனும்!

ரஜினி, கமல் கையெழுத்து இல்லாம ஊருக்குப் போகக் கூடாதுங்கிற வைராக்கியத் துல அப்படியே எல்லாப் பத்திரிகை அலுவலகங்களிலும் வாய்ப்பு தேடினேன். அப்பிடி அப்பிடியே பரவலாக் கிடைச்ச வாய்ப்புகள் மூலமா விகடன் தவிர எல்லாப் பத்திரிகைகளிலும் படம் போட ஆரம்பிச்சேன்.

அப்பதான் சுஜாதா சார் ஒருநாள், 'நீங்க விகடனுக்குப் போய்ப் பாருங்க’னு சொல்லி என்னை அனுப்பினார். அடுத்த வார விகடன்ல வெளிவந்த 'தூண்டில்’ங்கிற சுஜாதா சார் கதைக்கு என் ஓவியம். அதுதான் விகடனில் வெளிவந்த என் முதல் ஓவியம். தொடர்ந்த சில நாட்களில் விகடனில் இருந்து என் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துச்சு. பெட்டி முழுக்க தர்பூசணிப் பழங்கள். விகடன் எம்.டி. பாலசுப்ரமணியன் சார் தன் தோட்டத்தில் விளைஞ்ச பழங்களை எனக்குக் கொடுத்துவிட்டிருந்தார். எனக்கு ஆச்சர்யமாவும் பரவசமாவும் இருந்துச்சு. அப்போ நான் விகடன் வட்டத்தில் ரொம்ப ரொம்ப ஜூனியர். ஆனா, என்னையும் மதிச்சு, அவர் அனுப்பிவெச்ச தர்பூசணி இனிப்பு இப்பவும் என் நாக்கில் நிக்குது.

17 வருஷமாச்சு. அப்போ ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் சின்ன இடைவெளிகூட இல்லாம தொடர்கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை, ஜோக்ஸ்னு ஏதோ ஒரு வகையில் என் ஓவியங்கள் தொடர்ந்து விகடன்ல வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, இப்ப வரைக்கும் எப்படி வரைஞ்சா விகடன்ல ஓ.கே. செய்வாங்கனு எனக்குப் பிடிபடலை. விகடனின் சீஃப் ஆர்ட்டிஸ்ட் பாண்டியன் சார் 'ஓ.கே. ஸ்யாம்!’னு சொல்ற வரைக்கும் எனக்கு திக்திக்... பக்பக்னுதான் இருக்கும்.

இப்போதைய வெகுஜனப் பத்திரிகை சூழலில் விகடனில் மட்டும்தான் ஓவியத் துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. ஓவியங்களுக்கு மட்டும் இல்ல; ஓவியர்களுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் விகடன். விகடன்ல வந்த 'ஆசை’ பகுதியில், தன்னை தமிழகத்தின் முக்கியமான ஓவியர்கள் அனைவரும் ஓவியமா வரையணும்கிற ஆசையை வெளிப் படுத்தி இருந்தாங்க ஒரு வாசகி. மாருதி, ஜெயராஜ், ராமு, ம.செ., அரஸ், நான். ஆறு பேரும் அந்தப் பெண்ணை வரைஞ்சோம். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் விகடன்ல மட்டும்தான் சாத்தியம்.  

நானும் விகடனும்!

சுஜாதா எழுதிய 'அனாமிகா’ங்கிற கதை ஒரு சின்ன குழந்தையின் மரணம் தொடர்பானது. அதுக்கு நான் வரைஞ்ச ஓவியத்தை நிறையப் பேர் பாராட்டினாங்க. சுஜாதா இறந்தப்போ எல்லா ஓவியர்களிடமும் சுஜாதாவை ஓவியமா வரைஞ்சு தரச்சொல்லிக் கேட்டாங்க. நான் அனாமிகாவுடன் சேர்த்து சுஜாதாவை வரைஞ்சு கொடுத்தேன். இப்படி விகடனுக்கும் எனக்குமான நெகிழ்ச்சியான, மகிழ்ச்சியான எத்தனையோ அனுபவங்களை அடுக்கலாம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் பத்திரிகை ஓவியம்கிறது கல்வெட்டு கிடையாது. அது தினமும் வாசல்ல போடுற கோலம் மாதிரி. குறைந்த பட்ச நேரமும் அதிகபட்ச அழகும்தான் இங்கே முக்கியம். நான் எந்த அவசரத்திலும் வரைஞ்சு கொடுப்பேன். மூடு சரியில்லை, உடம்பு சரியில்லைனு எதுவும் என்னைப் பாதிக்காது. நடுரோட்டில்கூட உட்கார்ந்து வரைஞ்சு இருக்கேன். ஓவியங்கள்ல நான் என்ன புதுசா முயற்சி பண்ணினாலும், எந்தத் தயக்கமும் இல்லாமல் விகடன் அதை வரவேற்கும். விகடன் கதைகளுக்கு இளமை ததும்பும் பல பெண்களின் படம் வரைஞ்சிருக்கேன். ஒருமுறை அப்படி வரைஞ்ச ஒரு பெண்ணின் ஓவியத்தைப் பார்த்துட்டு, அந்தப் பெண்ணைத் தன் பையனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு கேட்டு ஒரு அம்மா வந்தாங்க. 'அது வெறும் ஓவியம்தான்’னு எவ்வளவோ சொல்லியும் அவங்க கேட்கலை. 'வேணும்னா, உங்க பையன் போட்டோவை எடுத்துட்டு வாங்க. இதைவிட அழகான பொண்ணு அவர்கூட நிக்கிற மாதிரி ஒரு ஓவியம் வரைஞ்சு தர்றேன்’னு சொன்னேன். அப்படியே வரைஞ்சும் கொடுத்தேன். விகடன்ல வர்ற வார்த்தைகளைப் போலத் தான் அதன் ஓவியங்களையும் நம்புறாங்கனு புரிஞ்சுக்கிட்ட தருணம் அது.  

நான் காலேஜுக்குப் போய்ப் படிக்கலை. வரைஞ்சு பழகினதே பத்திரிகைகள்லதான். விகடனில் வந்த கோபுலு சாரின் சைலன்ட் ஜோக்குகளுக்கு நான் தீவிர ரசிகன். துணி மடிப்புகளையும் அதில் வர்ற முடிச்சுகளை யும்கூட ஓவியத்துல துல்லியமாக் கொண்டு வருவார். அவர்கிட்ட இருந்துதான் சட்டை மடிப்புகளை எப்படி வரையுறதுனு கத்துக் கிட்டேன். அந்தக் காலத்திலேயே ஜெயராஜின் ஓவியங்கள் அவ்வளவு செக்ஸியா இருக்கும். அவர் ஓவியங்களில் இடம்பெறும் பெண்களின் ஆடைகள் எப்பவும் லேசா நெகிழ்ந்து விலகியே இருக்கும். ஆனாலும், அதில் துளி ஆபாசம் இருக்காது. ஓவியத்தை ஒரு அனாட்டமியா பார்த்தவர் அவர். ராமு சார் துப்பறியும் கதைகளுக்கு வரைஞ்ச கோட்டோவியங் கள் இன்னமும் மனசுக்குள்ளேயே நிக்குது. நான் இரண்டு வண்ணங்களுக்கு மேல பயன்படுத்தவே தயங்குவேன். ஆனா, ம.செ. சார் அத்தனை வண்ணங்களை யும் அழகாப் பயன்படுத்துவார். எதுவுமே கண்ணை உறுத்தாது. அவ்வளவு அழகா இருக்கும்.

நான் இப்போ தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குனு நாலு மொழிப் பத்திரிகைகளுக்கு வரையுறேன். ஆனா, தமிழ்நாட்டில்தான் இவ்வளவு பன்முகத்தன்மைகொண்ட ஓவியர்கள் இருக்காங்க. இங்கேதான் தனக்குனு பிரத்யேகமா  ஷேடு கொண்ட ஓவியர்கள் அதிகம்.

எழுத்தாளர் சரசுவதி விகடனில் எழுதிய 'மல்லி’ தொடர்கதைக்கு நான்தான் ஓவியம் வரைஞ்சேன். கிராமத்துல இருக்குற ஒரு குட்டிப் பொண்ணு, படிச்சு பெரிய ஆளாகி, கலெக்டர் ஆகுற வரைக்கும் கதை போகும். ஒரு சின்னப் பொண்ணு வளர்ந்து ஆளாகும் முக-உடல் அமைப்பு மாற்றங்களை அப்படியே ஓவியத்தில் கொண்டுவரணும். தனிப்பட்ட வகையில் என் மனசுக்கு ரொம்பவும் பிடிச்ச ஓவியங் கள் அவை.

இப்போ வைரமுத்து சாரின் 'மூன்றாம் உலகப் போர்’ தொடருக்கு நான்தான் ஓவியம் வரையுறேன். 'வைரமுத்து தொடருக்கு வரையிறியா?’னு விகடன்ல கேட்டதும் கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. 'வீட்டுக்கு வாய்யா’னு வைரமுத்து கூப்பிட்டார். சின்ன நடுக்கத்தோடுதான் போனேன். 'கருத்தமாயி’ கேரக்டரை விவரிச்சார். அவர் சொல்லச் சொல்ல நான் வரைஞ்சேன். முடிச்சுக் காட்டினதும், 'இவ்வளவுதான்யா கருத்தமாயி’னு சந்தோஷப்பட்டார். 'எப்படிய்யா கச்சிதமாக் கண்டுபிடிச்சே?’னு கேட்டார். 'நீங்கதான் சார் அது’ன்னதும் ஓவியத்தை உத்துப் பார்த்துச் சிரிச்சார். எப்பவும் எழுத்தாளர்கள் தங்களுக்குள் இருக்கும் ஆளுமையைத்தான் பாத்திரங்களுக்குக் கொண்டுவருவாங்க. அதைச் சரியா அடை யாளம் கண்டுபிடிச்சு வரைஞ்சேன்.  

நானும் விகடனும்!

சின்ன வயசில் எங்க வீட்டில் விகடன் வாங்குவாங்க. அதைப் பார்த்துதான் நானும் வரைஞ்சு பழகினேன். அதே பத்திரிகையின் பக்கங்களை இன்னைக்கு என் ஓவியங்களும் தொடர்ந்து அலங்கரிப்பதை நினைச்சா ரொம்பப் பெருமிதமா இருக்கு. எனக்கு எப்பவும் விசிட்டிங் கார்டு தேவைப்பட்டதே இல்லை. எங்கே போனாலும் விகடன்தான் எனக்கு விசிட்டிங் கார்டா இருக்கும்.

பெங்களூரு ஓவியக் கண்காட்சிக்குப் போனா என்கிட்ட ஆட்டோகிராஃப் எல்லாம் வாங்குறாங்க. என்னை ஒரு செலிபிரிட்டியா மாற்றினது விகடன்தான். அதே விகடன்தான் என்னை அடுத்த உயரங்களுக்கும் அழைச்சுக்கிட்டுப்போனது.  விகடன் ஓவியங்கள் மூலமா கிடைச்ச வாய்ப்புகள்தான் இப்போ என்னை ஃபேஷன் ஷோக்களில் பங்கெடுக்க வெச்சிருக்கு. அங்கே நான் 'பாடி பெயின்டிங்’ பண்றேன்.

ரஜினிகிட்ட கையெழுத்து வாங்குறதுக்காகத்தான் சென்னைக்கு வந்தேன். இப்போ வரை அது நிறைவேறலை. அதேபோல, விகடன் தாத்தாவுக்கு தேங்காய் உடைக்கிறதா சொன்ன என் வேண்டுதலும் இன்னும் அப்படியே இருக்கு. சீக்கிரமே ரெண்டும் நிறைவேறணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு