Published:Updated:

என் ஊர் : மயிலாப்பூர்

கடவுள் - மனிதன் நெருக்கம் மயிலையில் அதிகம்!

##~##

''கடலூரில் இருந்து 1969-ல் மயிலாப்பூரில் குடியேறினோம். அன்று முதல் இன்றுவரை வஸந்த், மேரி டு மயிலாப்பூர்!'' - மயிலாப்பூர் பற்றி மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் வஸந்த்.

 ''மயிலையில் குடியேறிய அன்றுதான் லஸ் கார்னரில் உள்ள நவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது எல்லாம் கபாலீஸ்வரர் கோயில் பிராகாரத்தைச் சுற்றி வெறும் மணல்தான். அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு கோயிலைச் சுற்றும்போது, 'நல்லா பாத்துக்கடா, இதுதான் மெரினா பீச்’ என்று அவர் சொன்னதை அப்படியே நம்பிய குழந்தைப் பருவத்தை மயிலாப்பூர் தந்தது. எட்டாவது படிக்கும்போது, மயிலையில் மிக்கி மௌஸ் வானொலி மன்றம் ஆரம்பித்து, அதற்கு அப்போதைய போலீஸ் கமிஷனர் ஸ்ரீபாலை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தது பெருமையான தருணம்.

எனக்குள் சினிமா ஆசை வந்ததற்கு முக்கியக் காரணம், காமதேனு தியேட்டர். அம்மா ஊருக்குப் போன ஓர் இரவில், நானும் அப்பாவும் தூங்கிக்கொண்டு இருந்த அண்ணனை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, நடிகர் திலகமும் சரோஜாதேவியும் நடித்த 'அஞ்சல் பெட்டி 520’ படத்துக்குப் போனதும் படம் முடிந்து திரும்பி வருவதற்குள், என் அண்ணன் தன் பங்குக்கு வீட்டில் ஒரு படம் காட்டி ஓய்ந்திருந்ததும் இன்றும் நினைத்துச் சிரிக்கும் சம்பவம். என் முதல் படமான 'கேளடி கண்மணி’க்கு, 'விவேக் சித்ரா’ சுந்தரம் சார் காமதேனு தியேட் டருக்கு எதிரில்தான் ஆபீஸ் போட்டுக்கொடுத்தார். ஒரு காலத் தில் புதுப் படம் ரிலீஸ் செய்து பட்டையைக் கிளப்பிய காம தேனு தியேட்டர், இன்று திருமண மண்டபம்!

என் ஊர் : மயிலாப்பூர்

என் பள்ளி நாட்களில், அப்படி ஒரு கோயில் இருப்பதற் கான அடையாளமே இல்லாமல், குடிசைக்குள் அருள்பாலித்த ஷீரடி சாய்பாபா இன்று மயிலையின் அடையாளங்களில் ஒன்று. நான் சரணாகதி அடையும் இடமும் அதுவே. கோயில், கச்சேரி, நாடக சபா என சதாசர்வ காலமும் ஆன்மிகம், கலா சார நிகழ்வுகளின் மையப்புள்ளி மயிலைதான். திருப்பள்ளி எழுச்சி, அறுபத்து மூவர் விழா, வைகுண்ட ஏகாதசி எனக் கடவுளுக்கும் நமக்குமான நெருக்கம் மயிலையில் அதிகம். சோவின் 'உண்மையே உன் விலை என்ன?’, டி.என்.சேஷாத்ரியின் 'தேவைகள்’ போன்ற நாடகங்கள், புல்லாங்குழல் ரமணி, மஹா ராஜபுரம் சந்தானம் போன்ற மேதைகளின் இசையை எனக்கு அறிமுகப்படுத்தியது இங்கு உள்ள ஆர்.ஆர். சபாதான்.

என் ஊர் : மயிலாப்பூர்

தினமும் இரவு 7 முதல் 8 மணி வரை லஸ் கார்னர் காமதேனு தியேட்டருக்கு அருகில் ஒரு மெட்டடோர் வேன் வரும். அது ஒரு மொபைல் போஸ்ட் ஆபீஸ். டியூப் லைட் வெளிச்சத்தில், உள்ளே ஒரு அஞ்சலகம் இயங்கிக்கொண்டு இருக்கும். கதை, கவிதை என நான் எழுதியதை பல இதழ்களுக்கு அந்த  மொபைல் போஸ்ட் ஆபீஸ் மூலம் அனுப்பி வைப்பேன். ரசித்து ருசித்த ராயர் கஃபே, விதவிதமான ஸ்டைல்களில் போட்டோ எடுத்துக்கொண்ட மயிலை ஸ்டுடி யோஸ் என மயிலாப்பூருக்கும் எனக்குமான உறவை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், மயிலையைப் பொறுத்தவரை எனக்கான வருத்தங்கள் இரண்டு உண்டு. ஒன்று லஸ் சிக்னலை ஒருவழிப் பாதையாக மாற்றியது. இப்படி ஓர் அராஜகமான யோசனை யாருடை யது என்று தெரியவில்லை. சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை துளியும் இன்றி இந்தச் செயல் அரங் கேறி இருக்கிறது. இங்கே டிராஃபிக்கைக் குறைக்க நிச்சயமாக வேறொரு மாற்று வழிஇருக் கும் என்று நம்புகிறேன். மற்றொன்று, சிதிலம் அடைந்துபோன எலியட்ஸ் பீச். கச்சேரி சாலை கடைசியில் செயின்ட் பீட்ஸ் சர்ச்சுக்குப் பின் னால், தன் பழைய அழகை இழந்து, இன்றும் இருக்கிறது அந்த பீச். 'இரவு தூங்கும் நேரம்’ என்று மவுத் ஆர்கான் வாசித்துக்கொண்டே மோகன் பாட்டுப் பாடுவாரே அதே பீச்தான். சர்ச் கோபுர வெளிச்சப் பின்னணியில் பீச் அவ்வளவு ரம்யமாக இருக்கும். எந்தக் காரணமும் இன்றி அந்த அழகிய கடற்கரை இப்போது புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது!''

- மோ.அருண் ரூப பிரசாந்த்,
படங்கள்: ஜெ.தான்யராஜு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு