Published:Updated:

குடிசை முதல் கோப்பை வரை!

குடிசை முதல் கோப்பை வரை!

##~##

''ஃபேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தபோது, நான் கொடுத்த ஒரு க்ளிக் என்னுடைய வாழ்க்கை யையே அர்த்தம் உள்ளதாக மாற்றி இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை!'' - கலகலவெனப் பேசுகிறார் சென்னை எம்.என்.எம். ஜெயின் கல்லூரியில் மெக்கானிக் கல் இன்ஜினீயரிங் படிக்கும் சாய் ஆதித்யா. வீடு இழந்த, ஏழ்மையான பின்புலம் உள்ள சிறுவர்களுக்குக் கால்பந்து பயிற்சி தரும் 'ஸ்லம் சாக்கர்’ என்கிற அமைப்பின் சென்னைப் பகுதிக்கான ஆர்வலர். வீடு இழந்தோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு வெளிநாடுகளுக்குச் சிறுவர்களை அழைத்துச் செல்லும் குழுவில் பங்குபெற்று, சென்னை திரும்பி உள்ளார்.  

 ''கால்பந்து என்னை மாதிரி இங்கு பல பேருக்கு உயிர். ஆனால், அந்த விளையாட்டின் மூலம் பல குட்டிப் பசங்களின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதை நிரூபித்த அமைப்பு தான் ஸ்லம் சாக்கர். இந்த அமைப்புப் பற்றி தனக்கு வந்த ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார் என் பள்ளி சீனியர். ஸ்லம் சாக்கர் நடத்தும் போட்டிகளோடு உலக அளவில் புகழ்பெற்ற ப்ரீமியர் லீக்குகள் தொடர்பில் இருப்பது என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

குடிசை முதல் கோப்பை வரை!

வீடு இழந்தவர்களின் குழந்தைகள், பாலியல் தொழில் செய்பவர்களின் குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய பிள்ளைகள், குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்களின் பிள்ளைகள், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் போன்றோரைக் கண்டறிந்து அவர் களுக்குக் கால்பந்து பயிற்சி தந்து, அவர்களுக்கு வாழ்க்கையின் மீதான பிடிப்பை ஏற்படுத்து வதுதான் இந்த ஸ்லம் சாக்கரின் முக்கியப் பணி. ஆனால், ஒருமுறை வரும் குழந்தைகளைத் தொடர்ந்து பயிற்சிக்கு வர வைப்பதுதான் இதில் உள்ள சவால்.

அந்தக் குழந்தைகளைத் தொடர்ந்து வரவழைக்க ஷூ, டி-ஷர்ட் என அவர்களுக்குப் பரிசளித்து ஊக்கப்படுத்துகிறோம். பயிற்சியை நிறுத்தாமல் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு கிரிக்கெட் பேட், பந்து எனக் குட்டிக் குட்டியான பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுப்போம். அந்த வகையில் ஸ்லம் சாக்கர் தமிழகம் உட்பட இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 70 ஆயிரம் குடும்பங்களைச் சென்று சேர்ந்துள்ளது.

குடிசை முதல் கோப்பை வரை!

இந்தச் சுட்டிகளைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விளையாடவைப்போம். அதில் ஒவ்வொரு பகுதியிலும் நன்றாக விளை யாடும் குழந்தைகளைத் தேர்வுசெய்து  எங்கள் அகாடமிக்கு அழைத்துவந்து பயிற்சி தருவோம். இந்தப் பயிற்சியில் பிரகாசிக்கும் குழந்தைகளில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடுபவர்களை மட்டும் 'ஹோம்லெஸ் உலகக் கோப்பை’யில் கலந்துகொள்ளச் செய்வோம். இந்த உலகக் கோப்பைக்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்வோம். தாங்கள் வசிக்கும் நகரம், கிராமத்தைக்கூட தாண்டாத இவர்களை, உலகம் சுற்றவைப்பது இந்த அமைப்பின் சிறப்பு. இதைத் தவிர இவர்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் சொல் லித் தருகிறோம். 'பெண்களை மதிக்க வேண்டும்’ எனச் சொல்வதோடு நின்று விடாமல், இவர்களின் அணிக்கு ஒரு பெண்ணையே கேப்டனாக்கி அந்த எண்ணத்தை இவர்களின் மனதில் ஆழமாக விதைக்கிறோம்.

குடிசை முதல் கோப்பை வரை!

இந்தியா 2006-ல் இருந்து இந்த உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்கிறது. பெரும்பாலான பிள்ளைகளுக்கு ஏழ்மையான பின்புலம் என்பதால் இவர்களின் ஆட்டத்தில் கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். ஆனால், நம் சுட்டிகள் இங்கே ஆடிப் பழகிய பிறகு விளையாடிய 2007 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 'ஃபேர் ப்ளே விருது’ பெற்றது. எட்டு வகையான பிரிவுகளில் இந்தப் போட்டிகள் நடக்கும். அதில் இந்தியா இந்த முறை 'கம்யூனிட்டி’  பிரிவுக்கான ஷீல்டை வென்றது சந்தோஷமான விஷயம்!

சென்னையில் வியாசர்பாடி, கூவம் கரை ஓரத்தில் வசிக்கும் குடிசைப் பகுதிப் பிள்ளை களுக்குப் பயிற்சி அளித்துவருகிறோம். தற்போது இங்கு பயிற்சி தருபவர்கள் ஸ்லம் சாக்கரில் ஏற்கெனவே கலந்துகொண்டவர்களே. மாலை வரை படிப்பு, வேலை முடிந்து வந்து நள்ளிரவு வரை  இதற்காக நேரம் செலவிடுகிறோம். ஆனால், இங்கு பயிற்சிக்கு ஒழுங்கான கால்பந்து மைதானங்கள் கிடைப்பது இல்லை; நிதிப் பற்றாக்குறை என சிரமங்கள் பல இருந்தாலும் சென்னையில் அடுத்த மாதம் தனியாக அகாடமி ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சி தர உள்ளோம். இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்குடன் இணைந்து அடுத்த மாதம் குழந்தைகளுக்குப் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்த உள்ளோம்!''

- பூ.கொ.சரவணன்
படங்கள்: க.கோ.ஆனந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு