Published:Updated:

நாட்டு நடப்பு

Vikatan Correspondent

 -பசுமைக் குழு

  சரத் பவார் ராஜினாமா செய்ய வேண்டும்!

நாட்டு நடப்பு

கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் சமீபத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. ##~~##

இதில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வந்தனா சிவா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ''எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டதனால், இப்பகுதியில் மட்டும் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இன்றைக்கும் இப்பகுதியில் பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன்தான் பிறக்கின்றன.

இப்படி நாட்டு மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் எண்டோசல்பான் பயன்பாட்டை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் சரத் பவார், இதைச் செய்ய முடியாவிட்டால்... தனது பதவியை ராஜினாமா செய்யட்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிராக தேசம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் சூழலிலும் அவர் கிரிக்கெட் விளையாட்டின் மீதுதான் கவனம் செலுத்தி வருகிறார்'' என்றார் ஆவேசம் பொங்க!

சாயக்கழிவுகளுக்கு இயற்கைத் தீர்வு!

நாட்டு நடப்பு

சாயக்கழிவு நீர் பிரச்னையால் திருப்பூரே திகைத்துப் போய் உள்ளது. இந்நிலையில் சாயக்கழிவு நீரை இயற்கை முறையில் ஆவியாக்கும் தொழில்நுட்பத்தை திருப்பூரிலிருக்கும் 'நிப்ட்டி' கல்லூரி கண்டறிந்துள்ளது. இதற்கான அறிமுகக் கூட்டம், கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 20-ம் தேதி நடந்தது. தலைமை வகித்துப் பேசிய கல்லூரித் தலைவர் ராஜா சண்முகம், ''எவாப்ரேட்டர் தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பிறகு வரும் கழிவுநீரை இயற்கை வழியில் ஆவியாக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்துக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஐ.ஐ.டி., வல்லுநர்கள், விவசாயிகள் என பல தரப்பிலும், ஆதரவு கிடைத்துள்ளது. விரைவில் இதைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

இந்தக் கூட்டத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  

சிறுதானியங்கள் சிறக்க வேண்டும்!

நாட்டு நடப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்கள் மற்றும் தீவனப்பயிர்கள் பற்றிய இரண்டு நாள் வருடாந்திர ஆராய்ச்சிக் கருத்தரங்கம் ஏப்ரல் 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்றது. ஐதராபாத், தீவனப்பயிர்கள் ஆராய்ச்சி இயக்குநரக இயக்குநர் முனைவர் ஜே.வி. பாட்டீல் இதில் பங்கேற்று பேசியபோது சிறுதானியங்களின் பெருமையை எடுத்து வைத்தார்.

''கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சிறுதானியங்கள் மிகவும் உபயோகமாக உள்ளன. மாறி வரும் பருவமாற்றங்களிலும் அதிக மகசூல் கொடுக்கக் கூடியதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இவை உள்ளதால்... நிரந்தர பசுமைப் புரட்சிக்கு இவையே வழிவகுக்கும். நெல்லைவிட அதிகமான புரதம், நார், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் ஏனைய வைட்டமின் சத்துக்கள் சிறுதானியங்களில் உள்ளன. கேழ்வரகில், பாலுக்கு இணையான கால்சியம் சத்து உள்ளது. நன்மை செய்யக்கூடிய கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும், மிதமான சர்க்கரை வெளியிடும் தன்மையும் சிறுதானியங்களில் உள்ளதால்... சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் பருமன் உடையவர்களுக்கும் வரப்பிரசாதமாக அவை விளங்குகின்றன'' என்று சொன்னார் பாட்டீல்.

பெண்கள் விவசாய விஞ்ஞானிகளாக மாறவேண்டும்!

நாட்டு நடப்பு

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 'வேளாண் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மற்றும் எதிர்நோக்கும் சவால்கள், வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் ஏப்ரல் 19-ம் தேதி கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில வேளாண் விளைபொருள் உற்பத்தி கமிஷனர் மற்றும் முதன்மைச் செயலர் ராமமோகன ராவ், ''கிராமப்பகுதி பெண்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். விவசாய சாகுபடி பரப்பு குறைவாக உள்ள நிலையில், மக்கள்தொகை எண்ணிக்கை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு, நகரமயமாக்கல், புவி வெப்பமடைதல் போன்றவை உற்பத்தியை மேலும் பாதிக்கின்றன.  விளைபொருட்களின் விற்பனை விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்க்கெட் விலை குறித்த தகவல் கிடைக்காததால், விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைப்பதில்லை. மொபைல் போன், மீடியா மூலமாக விளைபொருட்கள் குறித்தத் தகவல்களை அடிக்கடி தெரிவிக்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொத்தத்தில் பெண்கள்... விவசாயி, விஞ்ஞானி மற்றும் தொழில்முனைவோராக மாறி, வேளாண் வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்.

* பசுமை விகடன் 10.5.2011