Election bannerElection banner
Published:Updated:

என் ஊர் : ஆறகளூர்

ஆறு மரக்கா கம்பு கொடுத்து ஆங்கிலம் கற்றேன்!

##~##

வையாபுரி. விவசாயப் போராளி, சமூக ஆர்வலர், ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர். தோற்றத்தில் எளியவர். பழகுவதில் இனியவர். தன் சொந்த ஊரான ஆறகளூர் பற்றி தன் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்!

 ''தமிழகத்தில் இருக்கும் பழமையான கோயில்களுள் ஒன்று ஆறகளூரில் இருக்கும் சோழீஸ்வரர் ஆலயம். மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயில், என்ன காரணத்தினாலோ முழுமை அடையவில்லை. பாதிக் கட்டப்பட்ட நிலையிலேயே இன்றும் உள்ளது. ஊருக்குள் இருக்கும் மற்றொரு பழம் பெரும் ஆலயம், காமநாதீஸ்வரர் கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இது. பாடல்பெற்ற திருத்தலமான இது, முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சோழ அரசுக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர் வானவராயன் என்பவர் இந்த ஊரை  ஆண்டுள்ளார். இந்த விவரங்கள்அனைத்தும் 'சோழர் கால வரலாறு’ என்ற புத்தகத்தில் உள்ளது.

என் ஊர் : ஆறகளூர்

ஆறகளூருக்கு வந்து சிறந்த பாடல் பாடும் புலவருக்கு யானையைப் பரிசாகத் தருவாராம் மன்னர். அந்த அளவுக்கு எங்கள் ஊரில் நிறைய யானைகள் இருந்தனவாம். என் அப்பா விவசாயி என்பதால் சிறு வயது முதலே விவசாயம் மீது எனக்கு ஆர்வம் அதிகம். எங்கள் நிலத்தில் விளையும் வேர்கடலையை எந்திரத்தில் உடைக்க சின்ன சேலம் கொண்டுசெல்வார்கள். கடலையை உடைக்கும் எந்திரத்தைப் பார்க்கும் அந்த நாளுக்காக நான் தவமாகக் காத்திருப்பேன்.  

அப்போது எல்லாம் சட்டையும் இடுப்பில் துண்டும் கட்டிக்கொண்டுதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஆனால், எனக்கு பேன்ட் போட ஆசை. அதனால், சட்டையை பேன்ட் ஆக மாற்றி அணிந்து  கொண்டு பள்ளிக்குச் செல்வேன். எங்கள் வகுப்பு ஆசிரியர் சீத்தாராமையர் மாணவர்களை 'தொடப்பம்’, 'செருப்பு’

என் ஊர் : ஆறகளூர்

என்றுதான் அழைப்பார். ஆனால், அவர் போல பாடம் நடத்த முடியாது. சமூகத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமை எங்கள் பள்ளியிலும் இருந்தது என்பது கொடுமையான உண்மை.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தரையில்தான் அமர வேண்டும். ஐந்தாம் வகுப்புவரை நான்தான் முதல் மாணவன். எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கிலம் கட்டாய பாடம். நான் எங்கள் ஊரில் இருந்த ஆங்கிலம் படித்த ஒருவருக்கு ஆறு மரக்கா (36 கிலோ) கம்பு கொடுத்து ஆங்கிலம் கற்றேன்.

பண்ணையில் வேலைசெய்த தாழ்த்தப்பட்ட மக்கள் கொண்டுவரும் உணவை, தொட்டால் கூட உடைகளைக் களைந்து, துணிகளைத் துவைத்து, குளித்துவிட்டுதான் வீட்டுக்கு வர வேண்டும். நான் சின்னப்பையன். எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. ஆனால், யாருக்கும் தெரியாமல் அவர்கள் கொண்டுவரும் உணவைச் சாப்பிடுவேன்.  தீண்டாமை ஒழிய வேண்டும் என்கிற எண்ணம்தான் நான் தீண்டாமை ஒழிப்புத் திருமணம் செய்யவும் தூண்டியது. நான் திருமணம் செய்து முடித்து வரும்போது, ஊரில் உள்ள சீர்திருந்த எண்ணம்கொண்டவர்களும் இளைஞர்களும் என்னை தோள் மீது சுமந்துகொண்டு ஊர்வலம் வந்தது இப்போதும் பசுமையாக நினைவு இருக்கிறது.

என் ஊர் : ஆறகளூர்

எங்கள் ஊரில் ஆற்றங்கரை ஓரமாக உள்ள அம்பாயிரம் அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆறகழூர் மற்றும் பக்கத்து ஊரான பெரியேறு மக்கள் இணைந்து எருமைக் கிடாவை பலி தருவோம். கிடாவை வெட்டும்போது ஒரு வெட்டு எங்கள் ஊர் சார்பிலும், மற்றொரு வெட்டை பெரியேறு ஊர் சார்பிலும் வெட்ட வேண்டும். ஆனால், ஒருமுறை இரண்டு வெட்டையும் பெரியேறு தரப்பே வெட்டிவிட, இரண்டு ஊருக்கும் கலவரம் வெடித்தது. அந்த வன்முறை நாட்களை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது ஆனந்த விகடன், தினமணி, ஹிந்து, கலைமகள் போன்ற பத்திரிகைகள் எல்லாம் எங்கள் ஊருக்கு ரயிலில் வரும். அதை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள் சுகமானவை. திரும்பக் கிடைக்குமா அந்தச் சுகமான நாட்கள்!''

ம.சபரி
படங்கள்: க.ரமேஷ்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு