Published:Updated:

வயசுப் பொண்ணு... கொலுசு சத்தம்!

காட்டேரி கவுன்டவுன் ஸ்டார்ட்

##~##

ருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பேய் பிசாசுகளுக்கு ரொம்பவும் பிடித்து விட்டதோ என்னவோ... அடிக்கடி இங்கு பேய்கள் முகாமிடுகின்றன. பலகட்ட பேய், பிசாசு சீஸன்களில் இது ஸ்பெஷல் எபிசோடு!  

 கடந்த மாதம் ஓசூர் அருகே சூளகிரி பகுதியில் மையம்கொண்ட பேய் வதந்தி, காவேரிப்பட்டிணம் வழியாக, தருமபுரி அருகே இருக்கும் முக்கல் நாயக்கன்பட்டி பக்கம் நகர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப இங்கே நிறைய ஆடு, மாடுகள் மர்மமாக இறக்க... காட்டேரி கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.

முக்கல்நாய்க்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஜீவா நகர், காந்தி நகர், ராஜா தோப்பு, எட்டிமரத்துப்பட்டி, ஆலிவாயன் கொட்டாய், நரியன் கொட்டாய் உள்ளிட்ட கிராமங்கள் மதியம் 3 மணிக்கே இழுத்துப் போர்த்திக்கொள்கின்றன. வீடுகள்தோறும் ரத்த சிகப்பில் 'இன்று போய் நாளை வா’ என்று எழுதிவைத்து, பட்டை நாமம் வரைந்து பீதியைக் கிளப்புகிறார்கள்!

வயசுப் பொண்ணு... கொலுசு சத்தம்!

ஊரை மிரட்டும் ரத்தக் காட்டேரி வகையறா சமாச்சாரங்கள் உண்மைதானா என்று அறிய உதறலுடன் கிளம்பினேன். 'தங்கச்சியை நாய் கடிச்சிருச்சி...’ என்று சொல்லி தப்பிக்கப் பார்த்த போட்டோகிராஃபரை ஒரே அமுக்காக அமுக்க... அசைன்மென்ட் ஆரம்பம். மாலை 6 மணிக்கு முக்கல்நாய்க்கன்பட்டிக்குள் நுழைந்தால் ஊரே காலி. ''ஹலோ... சார்... ஐயா... அம்மா...'' என்று தண்டோரா போடாத குறையாகக் கூவி நம்முடைய நல்வரவை அறிவிக்க... சுமார் 15 நிமிடங்கள் கழித்து முதலில் ஜன்னல், அப்புறம் கதவு எனத் திறந்து வெளியே வந்தார்கள் மகா ஜனங்கள்!

டிராக்டர் டிரைவர் சின்னசாமிதான் முதன் முதலில் கொள்ளிவாய் பிசாசுக்கு 'ஹாய்!’ சொன்னவர். அவரிடம் கையைக் கொடுக்கப்போய் அப்புறம் அனிச்சையாகக் கையை இழுத்துக்கொண்டேன். ''அய்யோ, இப்ப நினைச்சாக்கூட உடம்பு நடுங்குது சார். 10 நாளைக்கு முன்ன ராத்திரி நேரத்துல வத்தல்

வயசுப் பொண்ணு... கொலுசு சத்தம்!

மலை அடி வாரத்துல டிராக்டர்ல உழவடிச்சுக்கிட்டு இருந்தேன். கலப்பையில புதர் சிக்கவும் கீழே இறங்கி அதை எடுத்துவிட்டுட்டு இருந்தேன். முதுகுப் பக்கம் யாரோ ஐஸ் கட்டியில தொடுற மாதிரி ஜில்லுன்னு இருந்துச்சு. திகிலடிச்சு திரும்பிப் பார்த்தா, வயசுப் பொண்ணு படக்குனு மறைஞ்சுடுச்சு.

எனக்கு நெஞ்சாங்கூடே நின்னுப் போச்சுங்க. இரும்பு மேல உட்கார்ந்துட்டா பேய், பிசாசு பக்கத்துல வராதுங்கிறதால சட்டுன்னு வண்டியில ஏறிட்டேன். சமயம் பார்த்து டிராக்டர் லைட்டும் ஆஃப் ஆகிப்போச்சு. எனக்குக் கை, கால் எல்லாம் உதறுது. 10 நிமிஷம் அசையாம உட்கார்ந்து இருந்தேன். எதையும் காணோம். ஒருவழியா டிராக்டரை ஸ்டார்ட் செஞ்சா அது என்னை மீறி தறிகெட்டு ஓடுது. அப்புறம் அதுவும் ஆஃப் ஆகி நின்னுடுச்சு. கொஞ்ச தூரத்துல அந்தப் பொண்ணு வாயிக்குள்ள தீப்பந்தம் எரிய... என்னை நோக்கி மெதுவா மிதந்து வந்துச்சு. தப்பா, நெனைச்சிக்காதீங்க சார்... அம்மா மேல சத்தியமா... வேட்டியிலேயே உச்சா போயிட்டேங்க. அப்புறம் எப்படி வண்டியை விரட்டினேன்னு தெரியலை. அடிச்சுப் பிடிச்சு ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன். நாலு நாள் காய்ச்சலுக்கு பிறகு இப்பதான் உடம்பு கொஞ்சம் தேவலை...'' என்று சுற்றி இருந்தவர் களை உறையவிட்டார். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் எங்கோ போய் திருநீறு, குங்குமம் எல்லாம் பூசிக்கொண்டு வந்திருந்தார் போட்டோகிராஃபர்.      

அடுத்து தன்னுடைய அனுபவத்தை விவரிக்கத் தொடங்கினார், கண்ணன் என்பவர். ''அமாவாசைக்கு முதல் நாள் ராத்திரி சாப்பிட்டுட்டுத் தூங்கப் போனேன். கரன்ட் கட் ஆகி இருந்ததால வாசக் கதவை திறந்துவெச்சிருந்தேன். நடுஜாமத்துல திடீர்னு வாசல் பக்கம் கொலுசு சத்தம். எனக்கு 'திக்’னு ஆகிடுச்சு. மெதுவா எட்டிப் பார்த்தா வெள்ளை துணி உடுத்தி, நல்லா

வயசுப் பொண்ணு... கொலுசு சத்தம்!

சிங்காரிச்சுக்கிட்டு வயசு பொண்ணு நிக்குது. அது என்னைப் பார்த்து சிரிக்க... நான் என்னை யும் அறியாம அந்தப் பொண்ணை பார்த்து நடக்க ஆரம்பிச்சுட்டேன். நடுவுல கல் தடுக்கி நான் தடால்னு விழவும்... அந்தப் பொண்ணு மறைஞ்சுடுச்சு. அப்புறம்தான் சுய நினைவுக்கு வந்து, ஓடியாந்து கதவைச் சாத்திக் கிட்டு படுத்துட்டேன். காலையில எழுந்தா உடம்பு எல்லாம் நடுங்குது. ரெண்டு நாளு நிக்காம பேதி. உள்ளூர் பூசாரிக்கிட்ட மந்திரிச்சப் பின்னாடிதாங்க சரியாச்சு...'' என்றார் திகில் விலகாமல்!

பா.ம.க-வைச் சேர்ந்த பழனி என்பவரோ, ''பொதுவா மாசி, பங்குனி மாசத்துல அறுவடை முடிஞ்சு வேலைவெட்டி இல்லாம இருப்போம். அதனால, ராத்திரியில ரொம்ப நேரம் ஊருக்குள்ள ஆட்கள் கதைப் பேசிக்கிட்டு திரிவாங்க. இந்த ஆள் நடமாட்டம் போதை போடுற வங்களுக்கும், ராத்திரியில 'ஜோடி’ தேடுற கோக்குமாக்கு ஆட்களுக்கும் தொல்லையா இருக்கும் போலிருக்கு. அவனுங்கதான் கொள்ளி வாய் பிசாசை எல்லாம் ஊருக்குள்ள கூட்டியாந்து விடுறானுங்க...'' என்றார் சீரியஸாக!

மணியைப் பார்த்தேன். இரவு 11.40. இருந்த ஓரிருவரும், ''பார்த்துப் போங்கப்பா...'' என்று சொல்லி திருநீறு பூசிவிட, மெதுவாகக் கிளம்ப யத்தனித்தோம். பைக்கை ஸ்டார்ட் செய்து கிளப்பினால், முன் சக்கரம் பஞ்சர். ''காட்டேரி வேலையா இருக்குமோ...'' என்ற நினைப்புடன் நடுக்கத்துடன் வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்ல...  இரவு 1.30 மணி வாக்கில் காந்தி நகர் கூட்டு ரோடு வந்தது. நல்ல நேரமாக மினி பஸ் ஒன்று கடைசி டிரிப்பாக வந்து சேர... வண்டியை ஓரம் கட்டிவிட்டு பஸ் ஏறினோம். கடைசிவரை நமக்குக் கிட்டவே இல்லை காட்டேரி தரி சனம்!

வயசுப் பொண்ணு... கொலுசு சத்தம்!

டெய்ல் பீஸ்: நாம் சென்றுவந்த சில நாட்களுக்குப் பிறகு அம்மனிடம் சீரியஸாகவே பூஜை நடத்தி, காட்டேரியை கட்டுப்படுத்த வேண்டுதல் வைத்திருக்கிறார்கள் அந்தக் கிராம மக்கள்!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு