Published:Updated:

யார் பேசுறது... புரட்சிப் பூக்களா?

யார் பேசுறது... புரட்சிப் பூக்களா?

##~##

சினிமா ஆசையில் வாழ்க்கையைத் தொலைத்த ஆயிரமாயிரம் இளைஞர்களில் ஏமராஜனும் ஒருவர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்காபுரத்தைச் சேர்ந்த 38 வயதான இவருக்குக் கனவு, லட்சியம், வாழ்க்கை எல்லாமே சினிமாதான். 'இயக்குநர் ஏமராஜன்’ என்ற டைட்டிலுடன் படம் வெளிவருவதற்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார் இவர்.  

 இதோ அந்த அப்பாவி இளைஞர் பேசுகிறார். 'சினிமாப் பார்த்துப் பார்த்து நாமும் படம் காட்டணும்கிற வெறியோட வளர்ந்தேண்ணே. ஏழு, எட்டு படிக்கும்போதே ஆபரேட்டர் ரூமுக்குப் போய், 'எப்படி படம் ஓடுது’னு வேடிக்கை பார்ப்பேன். 'தம்பி பேசாம இந்த வேலைக்கு வந்துடுறியா’னு ஆபரேட்டரு கேட்டார். மறுநாளே உதவி ஆப்பரேட்டரா சேர்ந்துட்டேன். ஒருநாள் முதல்வர் மாதிரி, ஒருநாள் ஆபரேட்டரா 'தர்மதுரை’ படத்தை ஓட்டினேன். ராத்திரி அப்பா அடிச்ச அடியில, ஆபரேட்டர் வேலைக்கு

யார் பேசுறது... புரட்சிப் பூக்களா?

முழுக்குப் போட்டுட்டேன். மறுநாள் ராத்திரி தூங்கினப்ப ஒரு கனவு. 'நானே ஒரு படம் எடுத்து தியேட்டர்ல ஓட்டுறேன். அந்தப் படத்தை என் அப்பா கைதட்டி ரசிக்கிறார்!’. கனவை நனவாக்க சென்னைக்குக் கிளம்பினேன். 1992-ல் 'கேப்டன் பிரபாகரன்-2’னு ஒரு கதை எழுதி விஜயகாந்த்தைப் பார்க்கப் போனேன். ஆனா, நாலு வருஷம் கழிச்சுதான் அவரைச் சந்திக்க முடிஞ்சுது. 'உங்களைவெச்சு படம் எடுக்கணும்’னு சொன்னதை அவர் தப்பாப் புரிஞ்சிக்கிட்டார். ஒண்ணா நின்னு ஒரு படம் (போட்டோ) எடுத்துக்கிட்டு அனுப்பிட்டார்.

சென்னையில மேன்ஷனில் தங்கியிருந்தேன். நண்பர்கள் பிடிச்ச சிகரெட்டால எனக்கு ஆஸ் துமா வந்துடுச்சு. கிளம்பி ஊருக்கு வந்துட்டேன். ஊருக்கு வந்த பிறகும் முயற்சியைக் கைவிடலை. 'கதை சொல்றேன்’ என்று நடிகர்களின் ஆபீஸுக்கு போன் போட்டால், யாரும் மதிக்கவே இல்லை. அதுக்கு ஒரு ஐடியா கண்டுபிடிச்சேன். என்னோட மங்காபுரம் வீட்டு அட்ரஸ்லேயே 'புரட்சிப் பூக்கள் மூவிஸ்’னு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அந்தப் பெயரை தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பதிவுசெஞ்சேன். அப்புறம், அதே நடிகர்களின் அலுவலகத்துக்கு போன் பண்ணி, 'நான் புரட்சிப் பூக்கள் மூவிஸ்ல இருந்து தயாரிப்பாளர் பேசுறேன். ஒரு கதை இருக்கு. சார் கால்ஷீட் கிடைக்குமா?’னு கேட்க ஆரம்பிச்சேன். ரொம்ப மரியாதையாப் பதில் சொன்னாங்க.

யார் பேசுறது... புரட்சிப் பூக்களா?

2004-ல் விஜயகாந்த் ஆபீஸுக்குக் கூப்பிட்டாங்க. கேப்டன் பிரபாகரன்-2 கதையைச் சொல்ல ஆரம்பிச்சேன். மூணு சீன் கூட முழுசா சொல்லி முடிக்கலைண்ணே. 'இன்னாப்பா கதை சொல்ற நீ?’னு திட்டி அனுப்பிட்டாங்க. கொஞ்ச நாள்ல, 'புரட்சிப் பூக்கள்’ங்கிறது லெட்டர் பேடு கம்பெனிங்கிற உண்மையும் உடைபட்டுப் போச்சு. யாருக்கு போன் செய்தாலும், 'யாரு புரட்சிப் பூக்களா?’னு கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

யார் பேசுறது... புரட்சிப் பூக்களா?

விஜயகாந்த் அரசியல் பக்கம் போய்ட்டதால, விஜய் சார் பக்கம் திரும்பினேன். அழுத்தமான காதலை மையமாகக்கொண்ட கதையை அவருக்காகவே தயார் செய்தேன். படத்தோட பேரு 'காதலின் மறுபக்கம்’ சப்-டைட்டில்: கி.பி.1970 முதல் 2050 வரை. அதில் தாத்தா, அப்பா, மகன்னு விஜய்க்கு மூணு கேரக்டர்கள். அதுபற்றி எஸ்.ஏ.சந்திரசேகரன் சார்கிட்ட பல தடவை பேசியும், அவர் கதை கேட்க ரெடியா இல்லை. 'நல்ல கதையை விஜய் மிஸ் பண்ணுறாரே’ங்கிற வருத்தத்துல கைக்காசு செலவு பண்ணி அந்தப் படத்துக்கு நானே விளம்பரம் செஞ்சேன். ராஜபாளையத்தில் 'வில்லு’ படம் ஓடினப்ப, விஜய்யின் அடுத்த படம், 'காதலின் மறுபக்கம்'னு மிகப் பெரிய ஃப்ளெக்ஸ்வெச்சேன். ரசிகர்கள் மத்தியில் அதுக்கு நல்ல வரவேற்பு. ஆனா, அந்த விளம்பரம் விஜய்யின் கவனத்துக்குப் போகலைனு நினைக்கிறேன். போயிருந்தா இந்நேரம் நான் டைரக்டர் ஆகியிருக்கணுமே?' என்று வேதனையாகச் சிரிக்கிறார் ஏமராஜன்!

-கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு