Published:Updated:

என் ஊர் : கழுகுமலை

சூரர்களுக்குள் புகுந்து பேயாட்டம் போட்டவர்கள்!

##~##

தான் பிறந்து வளர்ந்த அழகிய கிராமமான கழுகு மலை குறித்து தன்னுடைய நெஞ்சில் பசுமையாக இருக்கும் நினைவுகளை... நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்  எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்.

''தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது வரலாற்றுச் சிறப்பு மிக்க கழுகு மலை. அக்ரஹாரத்தின் மையத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிரே பிரமாண்டமாக உயர்ந்திருந்த மலை, பல அற்புதங்களை தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. மலையைக் குடைந்து உருவாக்கி இருக்கும் கழுகாசலமூர்த்தி என்ற முருகன் கோயில் ரொம்பவும் பிரபலம். தேவரின் தயாரிப்பில் உருவான 'துணைவன்’ என்ற பக்திப் படத்தின் பாடல் காட்சியில், 'கழுகு

என் ஊர் : கழுகுமலை

மலையில் வாழும் வேலய்யா...’ என்று ஏவி.எம்.ராஜன் பாடும் வரியில் கண்சிமிட்டும் நேரத்தில் அந்தக் கோயில் வந்துபோகும்.

இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம், ரொம்பவும் விசேஷமானது. ஆறு வகையான சூரர்களின் உருவச் சிலைகள் பார்க்கவே பிரமிப்பூட்டும். கனத்த சூரர்களைத் தூக்கி ஆடுவதற்கு என்றே பலசாலி வீரர்கள் பலர் உண்டு. பெரியண்ணத் தேவர் போன்றவர்களுக்கு மட்டுமே அந்தச் சூரர்களுக்குள் புகுந்து பேயாட்டம் போட்டு முருகக் கடவுளைச் சண்டைக்கு இழுக்கும் வல்லமை இருந்தது.

மலையின் பின்புறம் அமைந்து இருக்கும் ஆம்பூரணி (ஆம்பல் ஊரணி என்பது மருவி இப்படி ஆகிவிட்டது!) குளத்தில் இளம் வயதில் என்னுடைய இரு சகோதரிகளுடன் கரம்கோத்து நடந்து சென்றதும், ஆம்பூரணி குளத்தில் மீன்கள் காலைக் கவ்வ குளித்துக் கும்மாளமிட்டதும் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

குளித்து முடித்த பின்னர் வெட்டுவான் கோயில் பக்கம் போவோம். வெட்டுவான் கோயிலின் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் தாமரைப் பூவைப் பார்க்கும்போது எல்லாம் என்னுடைய அண்ணன் குமரகுருபரனின் நினைவுவரும். அவர் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும்போது இந்தத் தாமரைப் பூவில் அமர்ந்து லயித்துப் படித்து ஸ்டேட் ரேங்க் வாங்கினார். நானும் அதே போல முயற்சித்தேன். ம்ஹும்... படித்த பள்ளியில் மட்டுமே முதலாவதாக வர முடிந்தது!

கழுகு மலையின் மலை, பல தலைமுறை கடந்த பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டது. மலை உச்சிக்குச் செல்லும் வழியில் பஞ்சுப் பொதி அடுக்குப் பாறை, சோற்று உருண்டைப் பாறை என ஒவ்வொரு பாறைக்கும் கூட தனித் தனிக் கதைகள் இருக்கத்தான் செய்கின்றன. மேலே சமணர் பள்ளியறை ஒன்று உண்டு. சமண மதத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர்களின் உருவச் சிலைகள் ஏராளமாக இங்கு இருக்கின்றன.

என் ஊர் : கழுகுமலை

சமண மதத் துறவிகள் இந்த மலைப் பகுதியில் வசித்து இருக்கிறார்கள். பகல் நேரத்தில் மலை அடிவாரத்தில் வசித்த பொது மக்களின் குழந்தைகளை மலைப் பகுதிக்கு அழைத்துவந்து கல்வி அறிவு புகட்டி இருக்கிறார்கள்.

முருகன் கோயிலின் பக்கவாட்டில் இருக்கும் மிகப் பெரிய தெப்பக் குளம் வசீகரமானது. ஊர் மக்களின் தாகம் தீர்த்தது இது. மழைக் காலத்தில், வெளியில் இருந்து வரும் தண்ணீர், பசு சிலையின் வாயில் இருந்து தெப்பக் குளத்துக்குள் கொட்டுவதைப் பார்ப்பதே தனி அழகு. நிரம்பி வழியும் தெப்பக் குளத்தையும் பார்த்து இருக்கிறேன். குடி நீருக்கே வழி இல்லாமல் காய்ந்து வறண்ட குளத்தையும் பார்த்து இருக்கிறேன். ஒரு குடம் தண்ணீருக்காக வரிசையில் கால்கடுக்க மணிக்கணக்கில் காத்து நின்ற கொடூரமான நாட்கள் அவை.

பன்னிரண்டு வருடங்கள் மட்டுமே நான் கழுகு மலையில் வசித்து இருந்தாலும் என்னுடைய படைப்புகளின் ஊற்றுக் கண் இங்கே இருப்பதாகவே உணர்கிறேன். இங்கு நடக்கும் சூரசம்ஹாரத்தை அடிப்படையாகக்கொண்டு நான் எழுதிய சிறுகதையைப் படித்துவிட்டு எழுத்தாளர் வண்ணதாசன் பாராட்டியபோது, ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அது என் ஊருக்கே கிடைத்த பெருமை!''

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு