Election bannerElection banner
Published:Updated:

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள விடுதிதான்!

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள விடுதிதான்!

##~##

ட்டடைகள் நிறைந்த கட்டடம் குப்பையான வளாகம், கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்... - அரசு மாணவர் விடுதி என்றதும் நம் கண்முன் விரியும் காட்சிகள் பொதுவாக இப்படித்தான் இருக்கும். இதற்கு நேர்மாறாக, சொந்த வீட்டையே மிஞ்சும் வகையில் சுத்தம், பசுமையான வளாகம், ஒழுக்கமான மாணவர்கள், கண்ணியமான ஊழியர்கள் என்று வியக்கவைக்கிறது ஓர் அரசு மாணவர் விடுதி.

 மதுரை மாவட்டம், கருப்பாயூரணி அருகே இளமனூரில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் மாணவர் விடுதிதான் அது. சுத்தமான சீருடையுடன் ஐ.டி. கார்டு அணிந்துதான் இங்கு இருக்கும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். தங்கள் விடுதியைத் திறம்பட நிர்வகிக்கும் பொறுப்பையும் இந்த மாணவர்களே ஏற்றிருக்கிறார்கள். திங்கள் முதல் ஞாயிறு வரை அரசு கொடுத்த மெனுவின்படி உணவு சுத்தமாகவும் சுவையாகவும் வழங்கப்படுகிறதா என்பதை உணவுக் குழு மாணவர்கள் கண்காணிக்கிறார்கள். காலை 5 மணிக்கு எல்லோரையும் எழுப்பி படிக்கவைக்க வேண்டியது கல்விக் குழுவைச் சேர்ந்த எட்டுப் பேரின் பொறுப்பு. ஆர்.ஓ. சிஸ்டம் மூலம் சுத்தமான குடிநீர் கிடைப்பதையும், குளியல் அறையில் தண்ணீர் வீணாகாமல் இருப்பதையும் குடிநீர்க் குழு கண்காணிக்கிறது. இதைத் தவிர விளையாட்டுக் குழு, இறை வழிபாட்டுக் குழு, தோட்டக் கலைக் குழு என்று அந்தந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களைக்கொண்ட மாணவர் குழுக்கள் செயல்படுகின்றன.

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள விடுதிதான்!

விடுதி வளாகத்தை மரம், செடி, கொடிகள், காய்கறிகள் நிறைந்த அழகிய தோட்டமாக மாற்றிவிட்ட தோட்டக் கலைக் குழுவினர், தற்போது இளமனூர் கிராமத்தையே பசுமைக் கிராமமாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மாணவர்களுடைய ஆர்வத்தைக் கண்டு, அதற்கான மரக்கன்றுகளை இலவசமாக வழங்க முன்வந்திருக்கிறது மதுரை மாவட்ட வனத் துறை!

இந்த நல்ல விஷயங்களை எல்லாம் வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் விடுதிக் காப்பாளர் மகேந்திரபாபுவைப் பாராட்டி விருது வழங்கியிருக்கிறார் கலெக்டர் சகாயம். விடுதிக் காப்பாளர் மகேந்திரபாபுவிடம் பேசினேன்.

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள விடுதிதான்!

'டீச்சரா இருந்த எனக்கு ஹாஸ்டல் வார்டனா பதவி உயர்வு கிடைச்சப்ப, 'அந்த வேலையே வேணாம். பேர் கெட்டுடும். அதனால, டீச்சராவே இருந்துடு’னு அப்பாவும் அம்மாவும் சொன்னாங்க. ஆசிரியராக இருந்தால் பத்தோடு பதினொண்ணா இருக்கணும். ஆனா வார்டனா இருந்தா, நிறைய நல்ல விஷயங்கள் பண்ண முடியும்னு தோணுச்சு. முதல்ல மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் சுத்தத்தையும்

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள விடுதிதான்!

கற்றுக்கொடுத்தேன். அடுத்து அவங்களை அவர்களே நிர்வாகம் பண்ற திறமையையும் தலைமைப் பண்பையும் வளர்க்க முயற்சி செஞ்சேன். தலைவர்களுடைய பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடி, 'ஒரு விழா ஒரு மரம்’ங்கிற திட்டத்தைக் கொண்டுவந்தேன். அதைப் போல பிறந்த நாள் அன்னைக்கு, ஒவ்வொரு மாணவரும், ஒரு மரக்கன்று நடணும் அல்லது ஒரு புத்தகத்தை ஹாஸ்டலுக்குக் கொடுக்கணும்னு சொன்னேன். இப்போ ஹாஸ்டல்ல மட்டும் 340 மரம், செடி, கொடிகள் இருக்குது. விழாவுக்கு வரும் விருந்தினர்கள் தந்த புத்தகங்களும் மாணவர்கள் கொடுத்த புத்தகங்களும் சேர்ந்து இப்போது விடுதிக்குள் ஒரு நூலகமே உருவாகிடுச்சு. மதுரை மாவட்டத்துலயே நூலகம் உள்ள அரசுப் பள்ளி மாணவர் விடுதி இது ஒண்ணுதான். இப்போது பசுமை கிராமம் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். அதிலும் வெற்றி பெறுவோம்னு நம்பிக்கை இருக்கு'' என்கிறார் நெகிழ்ச்சியோடு!

- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு