Published:Updated:

இலவசப் பள்ளி...எல்லோருக்கும் கல்வி !

மகத்தான கனவு காணும் மணிகண்டன்படங்கள்: ரா.ராபின் மார்லர்

##~##

டியூஷனில் காசு கறப்பதற்காக வகுப்பறைகளில் ஒழுங்காகச் சொல்லித் தராமல் இருப்பது, டியூஷனுக்கு வராத மாணவர்களை வகுப்பறைகளில் மோசமாக நடத்துவது, பள்ளிக் கட்டணமே கட்ட முடியாமல் திண்டாடும் நிலையில் டியூஷன் கட்டணமும் கட்ட முடியாமல் திணறுவது என்று ஏழை மாணவர்களுக்கு 'டியூஷன்’ என்ற வார்த்தையே எப்போதும் கசப்பான கனவுதான். ஆனால், திருவண்ணாமலை எல்லையில் உள்ள மூங்கில்துறைபட்டு கிராமத்துக்கு அருகில் உள்ள அகரம் என்ற கிராமத்தில் நிலைமையே தலைகீழ். 'இங்கு மணிகண்டன் என்ற பி.எட். மாணவர், 120 மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் சொல்லித் தருகிறார்!’ என்று நம் வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் பதிந்திருந்தார் வாசகர் முத்துராஜ்.  

இலவசப் பள்ளி...எல்லோருக்கும் கல்வி !

''எங்க டியூஷன் திறந்த வெளியிலதான் சார். தெரு விளக்குலதான் பெரிய பெரிய அறிவாளிகள் எல்லாம் படிச்சுப் பெரிய ஆளானாங்கனு படிச்சிருக்கீங்கள்ல. எங்க பசங்களும் தெரு விளக்குலதான் படிக்கிறாங்க. அதுவும் கரன்ட் போயிடுச்சுன்னா இங்க் பாட்டில்ல மண்ணெண்ணெய் ஊத்தி விளக்கு ஏத்துவோம். மழைக் காலம் வந்தா கோயிலுக்குள்ள போயிடுவோம். அங்கேயும் மாடுகள் வந்துடும். பசங்களோட சேர்ந்து அதுகளும் பாடம் கத்துக்க வேண்டியதுதான்'' என்று சிரிக்கிறார் மணிகண்டன். ''எட்டாவது படிக்கும்போது இருந்தே எனக்குத் தெரிஞ்ச பசங்களுக்கு இலவசமா டியூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். இதுக்கு என்னை ஊக்குவிச்சது எங்க சரஸ்வதி டீச்சர்தான். அதனால இந்தத் திறந்தவெளி டியூஷன் சென்டர் பெயரே 'சரஸ்வதி கல்வி மையம்’னுதான் வெச்சிருக்கேன். முதன்முதலா எங்கிட்ட டியூஷன் வந்தது வெறும் எட்டு மாணவர்கள்தான். இப்போ 120 மாணவர்கள். ரொம்பப் பெருமையா இருக்குது. இந்தக் கல்வி மையத்தைப் பெரிசா பள்ளிக்கூடமா மாத்தணும். அதுவும் இலவசக் கல்விதான் கொடுக்கணும்கிறது என்னோட கனவு சார்.

இலவசப் பள்ளி...எல்லோருக்கும் கல்வி !

இதற்குக் காரணம் நான் மட்டும் இல்லை, 10-ம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை உள்ள மாணவர்களுக்கு டியூஷன் சொல்லித் தரும் என் நண்பன்வருணும்தான். அவன் இப்போ சென்னையில் எம்.எஸ்சி. மேத்ஸ் படிக்கிறான். லீவு வந்துட்டா ஊருக்கு வந்து தன்னால் முடிந்த அளவு சொல்லிக்கொடுப்பான். நான் பி.ஏ. ஆங்கிலம் படிச்சிருந்தாலும் கணக்கு மேல ஆர்வம் அதிகம். அதனால நானும் கணக்கு டியூஷன் எடுக்கிறேன்.

இலவசப் பள்ளி...எல்லோருக்கும் கல்வி !

எங்களிடம் டியூஷன் படிச்ச அம்முங்கிற பொண்ணு இப்போ நர்சிங் படிக்கிறாங்க. அம்முவின் தம்பிகள் இப்போ எங்ககிட்டதான் டியூஷன் படிக்கிறாங்க. இப்படி அடுத்தடுத்த தலைமுறையை உருவாக்குறது சந்தோஷமான விஷயம்தானே சார்?

இலவசப் பள்ளி...எல்லோருக்கும் கல்வி !

திருமலைவாசன், கோபி, பாலு... இவங்கல்லாம் என்னோட முதல் பேட்ச் மாணவர்கள். இப்போ ப்ளஸ் டூ படிக்கிற அவங்க எஸ்.எஸ்.எல்.சி-யில் 425-க்கு மேல் மார்க் வாங்கினாங்க. இப்போ என்கிட்டே படிக்கிற குமார், சாதாரணமா 490 மார்க் எடுக்கிறான். எப்படியும் அவனை இந்த வருஷம் ஸ்டேட் ஃபர்ஸ்ட் கொண்டுவரணும். அது எனக்கு இப்போதைய கனவு. ஒரு பெரிய பள்ளிக்கூடம், அதுல இலவசக் கல்வி இது என்னோட எப்போதைக்குமான கனவு!'' என்கிறார் மணிகண்டன்.

கனவு மெய்ப்படட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு