Published:Updated:

வலையோசை - எஸ்.கே.பி.கருணா

வலையோசை - எஸ்.கே.பி.கருணா

வலையோசை - எஸ்.கே.பி.கருணா

 ரஜினி பிரிவு, கமல் பிரிவு!

வலையோசை - எஸ்.கே.பி.கருணா
##~##

தமிழ்நாட்டின் எல்லா பள்ளி மாணவர்களைப் போல நாங்களும் பெரும் சினிமா மோகம்கொண்டு அலைந்துகொண்டு இருந்த காலம் அது. எல்லா கமல் படங்களையும் வெளியான நாளன்றே பார்த்துவிடவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நண்பர்கள் குழுவின் வாழ்நாள் லட்சியம். எல்லாப் பள்ளிகளிலும் 'அ’ பிரிவு, 'ஆ’ பிரிவு என்று இருப்பதைப்போல, எங்கள் வகுப்பில் கமல் பிரிவு, ரஜினி பிரிவு என்று இருந்தது. அப்போது எல்லாம், ஒரே நாளில்தான் கமல் படமும் ரஜினி படமும் வெளிவரும். பெரும்பாலும் கமல் படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும், ரஜினி படங்கள்தான் தவறாமல் நூறு நாட்களுக்கு மேல் ஓடும். முதல் நாளன்றே, எங்களுக்கு எந்தப் படம் எத்தனை நாட்கள் ஓடும் என்று கணிக்கக் கூடிய ஆற்றல் இருந்தமையால் படங்கள் வெளிவந்த மறு நாள் அன்று தொங்கிப் போன முகத்துடன் வகுப்புக்குள் நுழைவோம். ரஜினி ரசிகர்கள் அன்று முழுவதும் உற்சாகமாகப் பேசிக்கொண்டு இருப்பார்கள். நாங்கள் மட்டும் 'ஏன் இந்த கமல், ஓடுகின்ற படங்களில் நடிக்காமல், வெறும் நல்ல படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டு இருக்கிறார்?’ என்று டீக் கடைகளில், பிஸ்கெட் சாப்பிட்டுக்கொண்டே ஆவேசமாக விவாதித்துக்கொண்டு இருப்போம்!

       பிரகாஷ்ராஜ் குடித்த சிகரெட்!

வலையோசை - எஸ்.கே.பி.கருணா

1996-ம் ஆண்டின் ஏதோ ஒருநாள் இரவு, பாரதிராஜா என்னை அவருடன் ஒரு விருந்துக்கு அழைத்துச் சென்றார். அது, நடிகர் பிரகாஷ்ராஜின் வீடு. பிரகாஷ்ராஜ் எங்கள் அனைவரையும் வரவேற்று, உற்சாகமாகக் கையில் மதுக் கோப்பையுடனும் சிகரெட்டுடனும் உலவிக்கொண்டு இருந்தார். ஓர் அறையில் பாரதிராஜா ஏதோ தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார். நானும், மனோபாலாவும் அறையைவிட்டு வெளியே வந்தபோது, பிரகாஷ்ராஜ் தன் கைக்குழந்தையைத் தூக்கிவைத்துக்கொண்டு யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தார்.

அவர் கையில் சிகரெட்டுடன், குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தது எனக்குப் பெரும் உறுத்தலாக இருந்தது. எனக்கோ பிரகாஷ்ராஜ் அப்போதுதான் அறிமுகம். எனவே, நேராக பாரதிராஜாவிடம் சென்று ஒரு சிறுவனைப் போல முறையிட்டேன். என்னுடன், ஒரு புயலைப் போல வெளியே வந்த பாரதிராஜா, பிரகாஷ்ராஜை அழைத்து, ''ஒன்று சிகரெட் பிடி அல்லது குழந்தையைத் தூக்கு. இரண்டையும் ஒன்றாக நாங்கள் சினிமாவில் கூட காட்ட மாட்டோம்'' என்று சற்றே கோபமாகச் சொன்னார். பதறிப் போன பிரகாஷ்ராஜ், தன் மனைவியிடம் குழந்தையைக் கொடுத்தவர், நாங்கள் உணவருந்தி முடித்து வெளியே செல்லும்வரை புகை பிடிக்கவில்லை!

'இவன் நோற்றான் கொல் எனுஞ் சொல்’!

நான் பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டு இருந்த சமயம். திருவண்ணாமலையில் இருந்து ஆறு மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து, பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம் சென்று வேறு ஒரு பஸ் பிடித்து மேலும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து என்னுடைய கல்லூரியைச் சென்றடைய வேண்டும். அன்று இரவு நடுங்கும் குளிரில் அதற்கான பஸ் வரிசையில் நின்றுகொண்டு இருந்தேன். என்னுடன், உடன் படித்த அஸ்ஸாம் பையன் அருகில் காத்திருந்தான். ஒரு மணிக்கு ஒருமுறை ஒரு பஸ் என்று அறிவித்து இருந்தாலும், கூட்டம் இரண்டு பஸ் அளவுக்கு வந்தவுடன்தான் டிக்கெட் கொடுப்பார்கள். வண்டியில் ஏறி அமர்ந்த உடனேயே அனைவரும் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள். கடும் குளிரில், வேறு என்னதான் செய்வது?

வலையோசை - எஸ்.கே.பி.கருணா

நானும், அவனும் அருகருகே அமர்ந்துகொண்டோம். பஸ் புறப்படும் போது நிற்க இடமின்றி நிரம்பி வழிந்தது. என் அருகில், அனைவராலும் தள்ளப்பட்டு இரண்டு பெண்கள் வந்து நின்றனர். அநேகமாக அவர்கள் தாயும் மகளும். மகள் நிறைமாத கர்ப்பிணி. அதற்கான சகல முகவேதனைகளுடன் அவர்கள் என் அருகே நின்று கொண்டு இருந்தனர். இதுவெல்லாம் அந்த ஊர்ப் பயணிகளை சங்கடப்படுத்தாது. அவர்கள் வழக்கம்போலத் தூங்க ஆரம்பித்தனர். எழுந்து இடம் கொடுத்தால் ஒரு மணி நேரம் நின்று கிடைத்த இடம் போய், மேலும் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டுமே?

வலையோசை - எஸ்.கே.பி.கருணா

தன்னிச்சையாக நான் எழுந்து அவர்களில் ஒருவரை என் இடத்தில் அமரச் சொன்னேன். அவர்கள் நம்ப முடியாத ஆச்சர்யத்தோடு, ஒருவரை ஒருவர் அந்த இடத்தில் உட்காரச் சொல்லி கன்னடத்தில் சொல்லிக்கொண்டு இருந்தனர். முதலில் அந்தப் பெண்தான் அமர்ந்தார். இதைப் பார்த்த என் நண்பன் சற்று சங்கடத்துடன் எழுந்து அந்தத் தாய்க்கும் இடம் கொடுத்தான். இதையெல்லாம் அந்த பஸ்ஸில் யாரும் கவனிக்கவில்லை. இருவரும் அந்த இருக்கையில் அமர்ந்த பின் அந்தத் தாய் அவர் பெண்ணிடம் சொன்ன வார்த்தை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. கிராமத்து கன்னடத்தில் அவர் சொன்னது, ''நல்ல குடும்பத்துப் பையன் போல. நல்ல மகனா வளர்த்து இருக்காங்க.'' எங்கோ 250 கி.மீ. தொலைவில் இருந்த என்னுடைய அப்பா அம்மாவுக்கு அந்தக் கிராமத்து மனிதர்களிடம் நற்சான்று பெற்றுக்கொடுத்தேன், அதுவும் தன்னிச்சையாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு