Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

500 ரூபாய் நோட்டில் 13-வது வார்டு கவுன்சிலர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

கு.சித்தேஸ், காஞ்சிபுரம்.

 உயிர் என்பது பூமியில் தற்செயலாகத் தோன்றியது என்று சொல்கிறார்கள். இயற்கையின் வேதியியல் மாற்றத்தால் உருவானது என்றும் சொல்கிறார்கள். நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?

இரண்டும் உண்மை. இயற்கையாக ஏற்பட்ட வேதியியல் மாற்றங்களின்போது, தற்செயலாகத் தோன்றியதுதான் உயிர்.

மு.விஜி, சென்னை-74

ஒரு கோடி என்பது எப்போது சிறிய தொகையாகத் தெரியும்?

அரசியல் தலைவரான பிறகு.

டேஸ்டி.ம.நிக்சன், சென்னை-75.

ஹாய் மதன் கேள்வி - பதில்

பொதுவாக, பெண்கள் கைகளையும் முதுகையும் அதிகம் மூடிக்கொள்ளாதது ஏன்? (நான் குஷ்புவை யும் நமீதாவையும் கூறவில்லை!)

குறிப்பு: இந்தக் கேள்விக்கு உங்களைவிட வேறு யாராலும் சிறந்த பதிலைத் தர முடியாது என்பது என் பணிவான கருத்து.

இதானே வேணாம்! லட்சக்கணக்கான ஆண்டுகளாக, மனிதன் உடை இல்லாமல் பிறந்த மேனியோடுதான் வளைய வந்தான். 5,000 ஆண்டுகளாகத்தான் உடை அணி கிறோம்! (செக்ஸ் உறுப்புகளை மட்டும்மூடிக் கொள்வது அதற்கு முன்பே வந்துவிட்டது. கோவணம்தான் முதல் உடை!) உடை அணிய மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு. அதை சி.எம்.டி. என்கிறார்கள் (Comfort, Modesty and Display). பிரபல மனித இயல் ஆய்வாளர் டெஸ்மாண்ட் மாரீஸ் இதுபற்றி (என்னைவிடப் பல மடங்கு) விவரமாகவும் சுவையாகவும் 'பீப்பிள் வாட்சிங்’ (People Watching) என் கிற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். இன்று உடை விஷயத்தில் மூன்றாவதான டிஸ்ப்ளே அதிகமாகத் தலைதூக்கி நிற்கிறது. ஒரு பெண் அப்படி உடை அணிவதை 'ஆணுக் கான இன்விடேஷன்’ என்று தப்பாகப் புரிந்து கொள்ளக் கூடாது. 'நான் அழகு, என் முதுகு அழகு, என் கைகள் அழகு... ரசித்துவிட்டுப் போ. அதற்காக என்னை நீ நெருங்க முடி யாது’ என்கிற அறிக்கை அதில் இருக்கிறது.

கு.அருணாசலம், தென்காசி.

இப்போதைய நடிகைகளுக்கு அரசியல் களத்தில் நிரந்தர இடம் கிடைக்க மாட்டேன்கிறதே?

அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடி யாது. குஷ்புவுக்கு அந்த நிரந்தர இடம் கிடைத்து இருப்பதாகச் சொல்கிறார்களே. கட்சிக்கு உள்ளே நிகழும் சில சச்சரவுகளை எல்லாம்கூட அவர் சமரசம் செய்துவைப்பதாக விகடனிலேயே கட்டுரை வந்திருந்ததே. நாளைக்கு ஸ்டாலின் - அழகிரி மோதல் அதிகமாகி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த, நடுநிலைமையோடு குஷ்புவைத் தலைவராக்கும் யோசனைகூட வரலாம். ஜனநாயகத்தில் என்ன தப்பு?!

மு.சாந்தினி, தேனி.

இந்திய ரூபாயில் காந்தி தாத்தாவை மட்டும் காலங்காலமாக அச்சிடுகிறார்கள். வேறு சிறந்த தலைவர்களையும் அவ்வப்போது அச்சிடலாமே?

நீங்க வேற... கம்முனு இருங்க! 'நல்ல ஐடியாதான்’னு சொல்லி ஆரம்பிப்பாங்க... அப்புறம் ஒவ்வொரு கட்சியும் 'என்னா? நம்ம தலைவரு படம் போட மாட்டியா?’ என்று கேட்க ஆரம்பித்து, கடைசியில் லோக்கல் கவுன்சிலர்கூட 'நம்ம படம் கொஞ்சம் கவனிங்கம்மா’ என்கிற அளவுக்குப் போய்விடும்.

என்.பாலகிருஷ்ணன், மதுரை-1.

'பிரதமர் பதவி மீது நான் ஆசைப்படவில்லை. அது என் விருப்பமும் இல்லை’ என்கிறாரே ராகுல் காந்தி?

ஹாய் மதன் கேள்வி - பதில்

'அது மட்டும் அல்ல, பிரதமர் பதவியை எப்போது எனக்குத் தந்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று அவரை சத்தியம் செய்யச் சொல்லுங்களேன், பார்ப் போம். காங்கிரஸ் மீண்டும் மத்தியில்பெரும் பான்மை பலத்தோடு ஆட்சியடைந்தால், 99.9 சதவிகிதம் ராகுல்தான் பிரதமர். ஆகவே,

ஹாய் மதன் கேள்வி - பதில்

அவர் அப்படிச் சொல்லலாம். என்னை எடுத்துக்கொள்ளுங்கள்... நிச்சயம் எனக்குப் பிரதமர் பதவி கிடைக்காது. ஆகவே, நானும் அப்படிச் சொல்லலாம்!

கே.கோபு, பட்டுக்கோட்டை.

நான் விவரம் தெரிந்த வயதில் இருந்து நகம் கடிக்கிறேன். வயது இப்போது 33. ஆனால், இப்போது அந்தப் பழக்கம் திடீரென நின்றுவிட்டது. ஏன்? ஏதேனும் உளவியல் காரணம் இருக்குமா மதன்ஜி?

கடிப்பதற்குத்தான் உளவியல் காரணம் தேட வேண்டும். விட்டுவிட்டதற்கு எதுக்கு?! ஒரு மாதிரி வாழ்க்கையில் பதற்றம் எல்லாம் குறைந்து சற்று பக்குவம் அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இப்படியே தொடர என் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு