Published:Updated:

ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீதி கிடைக்கவேண்டும்: கி.சாமி

சென்னை, மே.8: ஸ்பெக்ட்ரம் வழக்கில் அனைவருக்கும் சமமாக நீதி கிடைக்கவேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி நேற்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது கனிமொழியை காப்பாற்றக்கூடிய அடிப்படை வாதங்களை முன்வைத்ததை நாம் குறைசொல்ல முடியாது. தலித் கதிரவன் என்று புகழப்பட்ட ராசாவை தனிமைப்படுத்தி அவர் மீது ஒட்டுமொத்த பழியையும் சுமத்தியது கண்டனத்திற்குரியது.

தி.மு.க. சார்பில் கனிமொழிக்காக களமிறங்கிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கனிமொழி நிரபராதி. அவர் ஏதுமறியாதவர். அவர் பெயரில் 20 சதவிகிதம் பங்குகள் உள்ளதே தவிர அவருக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் முழுக்க முழுக்க தவறிழைத்திருப்பது ஆ.ராசா மட்டும் தான் என்று ஒட்டு மொத்தமாக குற்றம்சாட்டி உள்ளார். இது கண்டிக்கத்தக்கதும் அவமானகரமானதும் ஆகும்.

அன்று ராசாவைப் பாதுகாப்பதுபோல் காட்டிக்கொள்வதற்காகவும், தி.மு.க.வின் மீது பழிவந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ராசாவிற்கு தலித் என்ற முகத்திரையை போர்த்தினார்கள். ஆனால் அந்த முகத்திரை இன்று ஒட்டுமொத்தமாக கிழிந்து போயிருக்கிறது. கனிமொழிக்காக வழக்கறிஞர் வாதாடிய விதம் இதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. எந்தக் கட்டத்திலும் இந்த விவகாரத்தில் கனிமொழி அப்ரூவர் ஆவதை ஏற்க முடியாது.

ராசாவை தனிமைப்படுத்திவிட்டு, அப்ரூவர் ஆவதையும் ஏற்க முடியாது. ராசா தலித் என்ற ஒரே காரணத்திற்காக ஒதுக்கிதள்ளி, தனிமைப்படுத்தப்பட்டு, குற்றவாளி என்று முத்திரை குத்தப்படுவாரேயானால் தமிழகம் முழுதும் உள்ள 2 கோடி தாழ்த்தப்பட்டோர் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க உள்ள 30 கோடி தாழ்த்தப்பட்டோரையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்.

ராசாவை ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பது எங்கள் நோக்கம் அல்ல. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கனிமொழி உள்பட அனைவருக்கும் ஒரே சமமாக நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.