Published:Updated:

மௌன ஓவியங்கள்!

மௌன ஓவியங்கள்!

மௌன ஓவியங்கள்!

மௌன ஓவியங்கள்!

Published:Updated:
மௌன ஓவியங்கள்!

ங்களைப் பற்றியும் தங்களுடைய ஓவியங்கள் பற்றியும் இவர்கள் சைகைகள் மூலம் தகவல் சொல்வது, ஏதோ அபிநயம் பிடிப்பதுபோல் அத்தனை அழகு. ஐஸ்வர்யா, ஸ்வேதா, வித்யார்த்தி என்ற இந்த மூவரும் தாங்கள் வரைந்த ஓவியத்துக்காகத் தேசிய விருது பெற்றவர்கள். ஆனால், மூவரும் காது கேளாத, வாய்ப் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள். இவர்களை ஓவிய ஆசிரியர் ராம்சுரேஷின் ஓவியப் பள்ளியில் சந்தித்தேன்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அஞ்சு வருஷத்துக்கு முன்ன தன்னோட மாமா இறந்தப்ப, அவரோட போட்டோவைப் பார்த்து ஓவியமா வரைஞ்சு கொண்டுவந்து காட்டினா ஐஸ்வர்யா. எப்படி இவ்வளவு சீக்கிரம் வரைஞ்சானு எங்களுக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. நாலு வயசு இருக்கும்போது, குடும்பத்தோட நடராஜர் கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்ததும், மனசுல இருந்த அந்த நடராஜர் சிலையை வரைஞ்சு காமிச்சா. அப்ப இருந்து இவளை எங்க கடவுள் மாதிரிதான் பாக்குறோம்'' என உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார் ஐஸ்வர்யாவின் தந்தை சீனிவாசன். லிட்டில் ஃபிளவர் பள்ளி மாணவியான ஐஸ்வர்யா, ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்து இருக்கிறார். ''ஓவியம் வரையிற ஆர்வம் எப்படி வந்துச்சு?'' என்றதும், இரு கைகளை யும் ஒன்றன் மீது ஒன்று குவித்து, 'சின்ன வயசுல’ என சைகையால் உணர்த்தியவரின் உடல்மொழியை, அவருடைய தந்தை சீனிவாசன் மொழிபெயர்த்தார்.

''சின்ன வயசுல இருந்தே ஏதாவது வரைஞ்சிக்கிட்டே இருப்பேன். எங்க வீடு இருக்கிறது நங்கநல்லூர்ல. அங்க இருந்து தினமும் 18 கி.மீ. தூரம் டிராவல் பண்ணித்தான் ஸ்கூலுக்கு வரணும். அப்போ பார்க்கிற விஷூவல்களை வரைஞ்சேன். அப்படியே ஆர்வம் வந்துடுச்சு. என் ஓவிய ஆர்வத்தைப் பார்த்துட்டு ஃப்ரீடம் டிரஸ்ட்ங்கிற அமைப்பு நான் படிக்கிறதுக்கு உதவி பண்ணுச்சு. எங்க ஓவிய மாஸ்டர் ராம்சுரேஷ் சார் அந்த டிரஸ்ட் மூலமாத்தான் எங்களுக்கு அறிமுகம் ஆனார். மாஸ்டரின் அட்வைஸும் பயிற்சியும்தான் தேசிய அளவிலான ஓவியப் போட்டியில நான் விருது வாங்கக் காரணம்'' சொல்லும்போதே ஐஸ்வர்யாவின் முகத்தில் அவ்வளவு பிரகாசம்.

மௌன ஓவியங்கள்!

அடுத்தது ஸ்வேதா. அரசு கவின் கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி. இவருடைய அப்பா கணேசன் திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். ஸ்வேதா சொல்ல வந்ததை அவரின் அம்மா நமக்குச் சொல்கிறார். ''சின்ன வயசுல மத்தவங்க வரையுற ஓவியங்கள் மேலயே எனக்குப் பிடிச்ச மாதிரி ஓவர்ரைட் பண்ணுவேன். பென்சில், வாட்டர் கலர் டிராயிங்னு நிறைய வெரைட்டிகள் பண்ணுவேன். தேசிய விருது பெற்றது மட்டுமில்லாம, இன்னொரு பெருமையும் உண்டு. 2009 முதல் ஒவ்வொரு வருஷமும் டெல்லியில உள்ள 'மாற்றுத் திறனாளிகளின் குடும்பம்’கிற அமைப்பு நடத்துற ஓவியக் கண்காட்சியில என் ஓவியங்களும் விக்கிது.''

மௌன ஓவியங்கள்!

வித்யார்த்தியும் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவிதான். இவர் 2005-ல் தேசிய அளவில் நடைபெற்ற இதே ஓவியப் போட்டியில் வென்றவர். இவரின் அம்மா உமாமகேஸ்வரி, ''இவ என் வயிற்றில் எட்டு மாச குழந்தையா இருந்தப்பவே என் கணவர் இறந்துட்டார். அப்துல் கலாம் கையால அந்த விருதை வாங்கினப்ப என் கஷ்டம் எல்லாம் காணாமல் போனது மாதிரி இருந்தது. இதைத் தவிர 2007-ல் பிரிட்டன்ல நடந்த காமன்வெல்த் போட்டியில கலந்துக்கிட்டு ஆசியாவிலேயே முதல் இடம் வாங்கினா. 2008-ல் 'சிறந்த இளம் ஓவியர்’னு நம்ம தமிழ்நாடு அரசு விருது கொடுத்துச்சு. என் பொண்ணு 11-வது படிக்கிறப்ப அவ ஸ்கூல் டீச்சர், 'வித்யார்த்தியை வேற ஸ்கூல்ல சேர்த்துடுங்க. இவ இருந்தா ப்ளஸ் டூ-வுல 100 சதவிகிதம் எங்களால ரிசல்ட் காட்ட முடியாது’னு பிரச்னை பண்ணினாங்க. அதே ஸ்கூல்ல நல்ல மார்க் வாங்கி அந்த டீச்சர் முகத்துல என் பொண்ணு கரியப் பூசிட்டா'' என்று அவர் சிரித்தபோது, தம்ஸ்-அப் காட்டுகிறார் வித்யார்த்தி!  

சா.வடிவரசு
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism