Published:Updated:

விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

Published:Updated:
விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

டந்த 33 ஆண்டுகளாக விவசாயிகளுக்காவே தன் வாழ்நாட்களை அர்பணித்தவர்  'தமிழக விவசாயிகள் சங்க’த்தின் தலைவராக இருக்கும் எஸ்.ஏ.சின்னசாமி. தன்னுடைய சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், சீராம்பட்டிப் பற்றி இங்கே பகிர்ந்துக்கொள்கிறார்...

விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''தருமபுரியில் இன்னைக்கும் பல கிராமங்கள்ல காலை உணவு களியும் கூழும்தான். ஊர் எல்லாம் ஆரியம், சாமை, வரகு விளைஞ்சு நிக்கும். மதியம் சாமை சோறு அல்லது அரிசிச் சோறு. 'மத்திய’ நேரத்தில் 'அன்னம்’ சாப்பிடுறதாலதான் 'மத்தியானம்’னு வார்த்தையே உருவாச்சு. களி அல்லது கொள்ளு, தட்டைப்பயறு, அவரைக்கொட்டை, நரிப்பயறு... இதுங்கதான் ராத்திரிச் சாப்பாடு. ராத்திரிச் சாப்பிடுற நேரத்தை, 'களி நேரம்’னு சொல்வாங்க.  பாரம்பரிய தானியமான வரகு பல நூறு வருஷம் கெடாமா இருக்கும். அதுக்கு இடியைத் தாங்கும் வல்லமையும் உண்டு. அதனாலதான் கோயில் கோபுரக் கலசங்களில் வரகை அதிகமாக் கொட்டுவாங்க. அப்படிப்பட்ட அற்புதமான தானியத்தை இப்ப நாம தொலைச்சுட்டோம்.

சுமார் 70-களில் தொடங்கி 80-களின் இறுதி வரைக்கும் எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்கிற நாயக்கன்கொட்டாயில் நக்சல் சிந்தனை வேர் ஊன்றி இருந்துச்சு. அங்கு இருந்த பாமர மக்களை சாதியின் பெயராலும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளாலும் வலியோர்கள் கொடுமைப்படுத்தியதுதான் புரட்சி சிந்தனைக்குக் காரணம்.  மக்களுக்காகப் போராடி போலீஸாரால் கொல்லப்பட்ட அப்பு, பாலனுக்கு நாயக்கன் கொட்டாயில்தான் சிலைவெச்சாங்க.

விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

சீராம்பட்டியில் விவசாயம் ஓரளவு தழைச்சோங்கி இருந்ததால, நக்சல் சிந்தனை மக்களிடம் வரலை. தவிர, தருமபுரியின் மற்ற கிராமங்களை ஒப்பிடும்போது எங்கள் ஊரில் படிச்சவங்க எண்ணிக்கை அதிகம். 1964-ம் வருஷம் காமராஜர் எங்க ஊருக்கு வந்து இருந்தார். அப்ப என்சோட்டுப் பசங்க எல்லாம் விளையாடிக்கிட்டு இருந்தோம். எங்ககிட்ட வந்தவர், 'இதுல எத்தனைப் பேரு பள்ளிக்கூடம் போறீங்க?’னு கேட்டார். பள்ளிக்கூடம் போகாத சிலருக்கு அறிவுரைக் கூறி, உள்ளூர்க்காரங்களை கூப்பிட்டு, 'இவங்களை பள்ளிக்கூடத்துல சேர்த்துட்டு மறக்காம எனக்குத் தகவல் கொடுங்க’னு சொல்லிட்டு கிளம்பினார்.

நான் கிருஷ்ணாபுரத்துல ஆரம்பப் பள்ளியில் படிச்சேன். அங்க ஆசிரியர்களா இருந்த பட்டாபிராமன் - தனலட்சுமி ரெண்டு பேரும் தம்பதிகள். பள்ளிக்கூடத்துல பாடம் எடுக்கிறதோட சுற்றுவட்டார கிராமங்கள்ல போய் நல்லது கெட்டதுகள்ல கலந்துக்குவாங்க. எங்கெல்லாம் குழந்தைங்க பள்ளிக்கூடத்துக்குப் போகலையோ அவங்க பெற்றோர்கிட்ட அன்பாப் பேசி, குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு வரவெச்சுடுவாங்க.

எங்க ஊர்ல 'ஊர்ச் சோறு’னு ஒரு வழக்கம் இருந்தது. விசேஷ வீட்டில் விருந்தாளிகள் சாப்பிட்டுக் கிளம்பும்போது, கையோட அடுத்த வேளைக்கும் சாப்பாடு வாங்கிட்டுப் போகணும். எங்க ஊர் மண்டு மாரியம்மன் திருவிழாவை 12 கிராமங்கள் இணைஞ்சு நடத்துவாங்க. சுமார் 20 ஆயிரம் பேர் கூடி கரகம், காவடி, மாவிளக்கு, அலகுனு அசத்துவாங்க. இப்ப நிறையப் பேர் பிழைப்புத் தேடி வெளியூர்ப் போயிட்டதால அந்த விழாவை தொடர்ச்சியா நடத்த முடியலை. 25 வருஷத்துக்கு முன்னாடி தருமபுரியில குடி நீருக்கு அல்லாடுவோம். 10 பைசாவுக்கு ஏதாவது பொருள் வாங்கினாத்தான் கடைக்காரங்க குடிக்கத் தண்ணீரே கொடுப்பாங்க. சின்னாற்று தண்ணீர் தருமபுரிக்கு வந்த பிறகுதான் தொண்டையை நனைக்க முடிஞ்சுது. 1970-களுக்குப் பிறகு வந்த பசுமைப் புரட்சி எங்க ஊரையும் மாத்திடுச்சு. கிணறுகள் அதிகமாகத் தோண்டி, ரசாயன உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சல் பார்க்க... ஒரு கட்டத்துல மண் மலடாகிருச்சு. இந்த நிலையை மாத்துறதுக்குத்தான் என்னைப் போன்றவங்க போராடிக்கிட்டு இருக்கோம். நான் வேற எந்த வேலைக்குப் போய் இருந்தாலும் ஏதாவது ஒரு நகரத்துல சிறைபட்டு இருப்பேன். ஆனா, விவசாயத்தைப் பார்க்கிறதால என் மண்ணிலேயே இருக்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சு இருக்கு!''

விசேஷ வீட்டில் ’ஊர்ச் சோறு’ பார்சல்!

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism