Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

சின்னப்பாண்டியும் எமிலியும் இஷிமுராவும் கண்ணைவிட்டு மறையிற வரைக்கும் அவுக போறதையே பாத்துக்கிட்டிருந்த கருத்த மாயி கண்ணு ரெண்டையும் அழுத்தித் தொடச்சுக்கிட்டாரு.

 'அதுக பொழப் பத் தேடி அதுக போகுதுக; நம்ம பொழப்ப நம்ம பாப்பம்.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாய்க்காச் செதுக்க மம்பட்டி எடுத்துட்டாரு.

''பழைய கஞ்சியில மோர் ஊத்திப் புளிக் கத்திரிக்கா போட்டுக் கொடுத்துவிட்டாப் பத்தாதா?''- கெணத்தோர வேப்பங்குட்டிகிட்டச் சொல்லிட்டு,வரப்பு வழி நடந்து போறா சிட்டம்மா.

பிள்ளைக்குப் பண்டுதம் பாக்கப் பெரிய குளம் தருமாஸ்பத்திரிக்குப் போயிட்டாக சொள்ளையனும் ரோசாமணியும்.

காயுது கத்திரித் தோட்டம். எம்புட்டுத் தண்ணிவிடறமோ, அம்புட்டுக் காய்க்கும் கத்திரி ஒண்ணுமட்டும். நட்ட தடம் மாறு முன்ன நட்ட செடி காய்க்கும்கிறது கத்திரிக்குத்தான் பொருந்தும். நாப்பத்தஞ்சாவது நாள்ல பூவும் பிஞ்சும் எறங்கி, 'என்னைப் பார்; என் அழகைப் பார்’னு எந்திரிச்சு நிக்குது கத்திரி. இப்ப விடணும் இன்னொரு தண்ணி.

மூன்றாம் உலகப் போர்

தாடி மீசை முளைச்சுக்கெடக்கு வாய்க்கா வரப்பெல்லாம். அருகும் கோரையும் வல்லாரையும் சாரணத்தியும், நீ என்ன பண்ணுனாலும் வருவோமில்லன்னு எகத் தாளம் பேசி நிக்குதுக.

'நான் முன்னுக்க வெட்டிக்கிட்டே போக, நீங்க பின்னுக்கு முளைச்சுக்கிட்டே வந்தா நான் என்ன பண்ணுவேன்?’ களைகளோட பேசிக்கிட்டே எடுத்துட்டாரு மம்பட்டிய. இருபத்தி நாலு வயசு இளந்தாரி மாதிரி சரக்சரக்குன்னு செதுக்கிக்கிட்டே போறாரு கருத்தமாயி.

பொருந்தாமப் புடிபோட்ட மம்பட்டி ஒரு கல்லுல பட்டு கடக்குன்னு கழண்டு காலப் போட்டுத்தள்ளிருச்சு.

''யாத்தே'' புடிய எறிஞ்சிட்டு வரப்புல உக்காந்துபோனாரு.

கட்டை விரல ஒட்டி எடது கால் பள்ளத்துல விழுந்திருச்சு வெட்டுக் காயம். வெள்ளெலும்பு தெரியுது; சதசதன்னு ரத்தமா ஒழுகுது; உசுரு போகுது வலி.

'என்ன பண்றது இப்ப?’ - சுத்திமுத்தியும் பாத்தாரு. வரப்புல ஒரு ஓரமாத் தள்ளி முளைச்சிருந்துச்சு க(¬)ரப்பான் குழை. அத எக்கிப் புடுங்குனாரு; கசகசன்னு கசக்கிச் சாறு புழிஞ்சாரு. அத மம்பட்டி மேல விட்டு ஒரு கல்லெடுத்துக் கடகடன்னு கடஞ்சாரு. கடையக் கடைய மசமசன்னு வண்டி மைப் பதத்துக்கு அதுல கூடி வருது ஒரு களிம்பு. அதக் காயத்துல அப்புனாரு. பழைய சும்மாட்டுத் துணிய ஒரு ஓரம் கிழிச்சுக் கட்டிட்டாரு காயத்து மேல. ரத்தம் நிக்கிற மாதிரி இருக்கு; வலி நிக்கல.

மம்பட்டியப் பூட்டிவிட்ட குறை வேலையச் செய்யலாமுன்னு பாத்தா, 'விண்ணு விண்’ ணுன்னு தெறிக்குது நரம்பு; கட்டுக்கு மேல வேற கசியுது ரத்தம்.

ச்சீ... இதுக்குக் கைப்பண்டுதம் ஆகாது; பெரிய வைத்தியம் பாக்கணும். வாய்க்கால்லயே மம்பட்டியப் போட்டுட்டு விந்திவிந்தி நடந்து வீடு போயிச் சேந்துட்டாரு. சட்டை வேட்டி மாத்துனாரு. அங்கேயும் இங்கேயும் தேடி ஆசுபத்திரிக்குத் துட்டுச் சேத்தாரு. வீட்டைவிட்டு வெளியேற - ஓடி வந்தானய்யா அடுத்த தோட்டத்துக்கார உளியன்.

''கருத்தமாயண்ணே... என்னமோ நடக்கப்போகுது உன் தோட்டத்துல. ரெண்டு மூணு வண்டிக வந்து எறங்கி உன் கட்டாப்பை இடிக்குது. வெறி நாயி மாதிரி வேசங்கட்டி நிக்கிறாய்ங்க அஞ்சாறு ஆளுக. இன்ன நேரமின்னு இல்ல நிலத்துக்குள்ள இறங்கறது. போண்ணே... போயி உன் பூமியக் காப்பாத்து.''

மூன்றாம் உலகப் போர்

கட்டுப்போட்ட காயத்து வலி இப்ப எங்க போச்சுன்னே தெரியல. விந்திவிந்தி நடந்து வந்த ஆளு இப்ப வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடுறாரு. நேராப் போனா நேரமாகுமின்னு தெரிஞ்சு தட்டக்குன்னான் தோட்டத்து வரப்பு வழி விழுந்து குறுக்கு வழியில போறாரு.

போயிப் பாத்தா -

அப்பன் சீனிச்சாமி காலத்துல போட்ட கட்டாப்பு வேலிய இடிச்சு எறிஞ்சுக்கிட்டு இருக்கு ஜேசிபி வண்டி.

கட்டாப்புல நின்னு காவல் காத்த கள்ளி, கொடுக்காப்புளி, வேலிகாத்தான், காட்டாமணக்கு, செங்கிலுவை, அரசங்குட்டி, வேப்பங்குட்டி, ஊணாங்கொடி, கோவங்கொடி, மிதுக்கங்கொடி எல்லாத்தையும் இன்னைக்குத் தின்னு தீக்காம விட மாட்டேன்னு அஞ்சாறு யானைக சேந்த மாதிரி வருது வண்டி எந்திரத் துதிக்கைய நீட்டி நீட்டி.

வேலிய அழிச்சுக் கத்திரித் தோட்டத்துக்குள்ள இறங்க வண்டிய மறிச்சுட்டாரு கருத்தமாயி.

''ஏலேய் வண்டி ஓட்டுறவனே... எந்தக் காட்டு நாயிடா நீயி? நிறுத்துடா வண்டிய.''

கருத்தமாயி கத்துனது காதுல விழுகல வண்டிச் சத்தத்துல. கத்திரிச் செடிகளை நசுக்கி நாலாவிதம் பண்ணிக் கோவக்காரன் சண்டைக்கு வர்ற மாதிரி வருது முரட்டு வண்டி. மூஞ்சி உரசற தூரத்துல முன்னால வந்து நின்னு நிறுத்திப்புட்டாரு வண்டிய. வண்டி ஓட்டுறவனை அடையாளம் தெரிஞ்சுபோச்சு அவருக்கு.

''ஏலேய்! பேய்ச்சாமி மகன் செயராமுதான நீயி? கட்டாப்பப் பேத்துக் கத்திரித் தோட்டத்த அழிக்கிறீகளே... என் தோட்டமுடா இது. எவனக் கேட்டு இறக்குனீக வண்டிய? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப்போயிருமுடா. ஒழுங் காப் போயிருங்க.''

வண்டிய நிறுத்திட்டான் செயராமு.

''பெருசு! நான் கூலிக்காரன்; எனக்கொண்ணும் தெரியாது. உங்க கட்டாப்புல இருந்து நாப்பது ஏக்கரை மில்லுக்காரங்க வாங்கிட்டாகளாம். வண்டியவிட்டு அடிச்சு உள்ள நிலத்தையெல்லாம் ஒண்ணு சேக்கச் சொல்லியிருக்காக. உங்க சண்டை சத்தத்த அங்க போயி வச்சுக்குங்க; என்னிய வேலை செய்யவிடுங்க.''

''ஏண்டா... வீட்டுக்குள்ள புகுந்து என் பொண்டாட்டி கையப் புடிச்சு இழுப்ப. கேட்டா, கோர்ட்டுல போயிப் பாத்துக்கன்னு சொல்லுவியாடா? நோலி மகனே! கொன்டேபுடுவேன்; திரும்பிப் போடா.''

''ஏ பெருசு! என்ன வாய் வார்த்தையெல்லாம் தடிக்குது? நீதான் ரோசக்கார வம்சமா? நாங்க என்ன சொரணை கெட்டா திரியிறோம்? உன் மகன் முத்துமணிதான் இப்ப மில்லுக்குச் சட்டாம்பிள்ள. நோலி மகனேன்னு அவனைக் கேளு. என்னிய ஏன் வையிற?''

மகனை அப்பனுக்குக் காட்டிக்கொடுக்கவும் வந்து எறங்கிட்டான் முத்துமணி.

''ஏலேய் செயராமு! என்னடா சம்பந்தம் இல்லாத ஆளுகூடப் பேசிக்கிட்டிருக்க... வேலையப் பாருடா.'' கட்டாப்புல இருந்து சத்தம் போட்டுக்கிட்டே நசுங்கி நாராக்கிடக்கிற கத்திரிச் செடிக மேல நடந்து வாரான் முத்துமணி.

''சம்பந்தம் இல்லாதவனா? நானா? உன் பெறவிக்கே சம்பந்தப்பட்டவன்டா நானு. உங்க பயலுகள ஒழுங்கா வெளியேறச் சொல்லு. பஞ்சாயத்துக்குக் கட்டுப்படு. என் உசுருள்ள வரைக்கும் இது என் நிலம்.''

''எவஞ் சொன்னான்? இது உன் நிலம் இல்ல. என் நிலம். இந்த நிலத்தை மட்டும் இல்ல. கெடாவீரன், ஒத்த வீட்டு மூளி, பரமனாண்டி, உளியன், பொன்னுசாமி எல்லார் நெலத்தையும் ஒண்ணு சேத்து ஒப்புரவு செய்யப்போறேன். அதுக்கு இந்த நெலம்தான் ஒரே பாதை. வாக்குவாதம் பண்ணாம வழிய விடு.''

''வேணாமுடா மகனே - வேரைப் பகைச்ச பயிரும் ஊரைப் பகைச்ச உயிரும் வீடு சேர முடியாதுடா. வம்பு வேணாம். வெளியேறிக்க.''

''ஊரே என்னியப் பகைச்சிருக்க. இனிமே இந்த ஊரை நான் பகைக்கணு மாக்கும்? உன் கதை முடிஞ்சிருச்சு. ஒழுங்கா உன் தட்டுமுட்டுச் சாமானை எடுத்து வெளியேறிக்க.''

''வெளியேற மாட்டன்டா. என்னிய இந்த மண்ணுலயே புதைச்சுட்டு இந்த நெலத்த நீ எடுத்துக்கடா'' - ரெண்டு கையையும் விரிச்சு நெஞ்சைத் தூக்கி நிமித்திக்காட்டி வண்டிக்கு முன்னால நின்னுட்டாரு கருத்தமாயி.

கெழவன் கிறுக்கேறிப் போயி நிக்கிறான்னு தெரிஞ்சுபோச்சு முத்துமணிக்கு.

''ஏ கெழவா... வெலகிக்க'' - உருட்டல் மிரட்டலை ஆரம்பிச்சுட்டான் முத்துமணி.

''ஏலேய்... உனக்கா நான் பெறந்தேன்? எனக்குத்தாண்டா நீ பெறந்த. பயந்துருவனா? ஒண்ணு வண்டிய எடுத்துட்டுப்போ; இல்ல, என் மேல ஏத்திட்டுப் போ.''

''ஏத்த மாட்டேன்னு நெனச்சுட்டியா?''- துணிஞ்சுட்டான் முத்துமணி.

''ஏத்திப்பாரு...''

வண்டிக்கு முன்னால் வாய்க்கால்ல காலை நீட்டிப் படுத்துட்டாரு கருத்தமாயி. இத எதிர்பாக்கல; திடுக்குன்னு ஆகிப் போச்சு முத்துமணிக்கு. உடனே சுதாரிச் சுட்டான்.

''செத்த ரத்தம் ஓடற ஒனக்கே இம்புட்டு வீம்பு இருந்தா, பச்சை ரத்தம் ஓடற எனக்கு எம்புட்டுத் திமிரு இருக்கும்? காமிக்கிறேன் கெழவா... காமிக்கிறேன்!''

விறுவிறு விறுன்னு நடந்து வண்டிக்காரன்கிட்ட வந்தான்.

''ஏத்துறா செயராமு கெழவன் மேல...''

அவன் முழிச்சான்; பயமா இருக்குன்னு ஒரு பார்வை பாத்தான்.

''எது நடந்தாலும் நான் பொறுப்பு. நீ ஏத்துறா...''

''எப்படிண்ணே? ஆயிரமிருந்தாலும் அப்பன் இல்லையா?''

''அப்பனுக்கு ஆயிரம் ரூவா எச்சா வாங்கிக்க. ஏத்துடா...''

''யண்ணே... கூலிக்கு உழுகத்தான கூப்பிட்டீக. கூலிக்குக் கொலை பண்ண ணும்னா அதுக்கு வேற ஆளப் பாரு.''

சட்டுன்னு எறங்கிப் பதிலை எதிர்பாக்காம அவன் பாட்டுக்குப் போயிட்டான் செயராமு. சாராயம் குடிச்ச சண்டைச் சேவல் மாதிரி கிறுக்கு ஏறுது முத்துமணிக்கு.

ஏத்துரா ஏத்துன்னு படுத்துக்கெடக் கான் அப்பன்.

தெரிஞ்சதப் பாருன்னு ஓடிப்போயிட்டான் டிரைவரு.

நடுக்காட்டுல நிக்கிறான் முத்துமணி.

இந்த வம்பு நமக்கெதுக்குன்னு அழிஞ்ச கட்டாப்புக்கு வெளிய ஒதுங்கி நிக்கிறாக மில்லு ஆளுக. அன்னைக்குச் சந்தை; பெரும்பாலான ஆளுக ஊருல இல்ல.

'

மூன்றாம் உலகப் போர்

என்னடா பண்றது? முன்வச்ச காலைப் பின்னுக்கு வச்சாக் குதிகாலை வெட்டிப்புடுவானே மில்லுக்காரன்’ அஞ்சே விநாடியில ஆயிரம் விசயம் யோசிச்ச முத்துமணி, படக்குன்னு அவனே ஏறி ஒக்காந்துட்டான் வண்டியில.

படுத்தது படுத்தபடிக்கே இதை எல்லாம் பாத்துக்கிட்டேயிருக்காரு கருத்த மாயி.

வண்டி ஓடி வந்த பாதையெல்லாம் தரைமட்டமாகிக் கெடக்கு கத்திரிச் செடி.

ஆத்து மணல்ல பொதைச்ச பொணம், வெள்ளம் வந்ததும் கை காலை மட்டும் வெளிய காமிக்கிற மாதிரி மண்ணுக்குள்ள புதைஞ்சும் கொப்பும் குழையும் மட்டும் நீட்டிக்கெடக்குதுக கத்திரிச் செடிக.

படுத்துக்கெடந்த வாய்க்கால்ல பழைய சோளத்தட்டை மோட்டு ஒண்ணு குத்தி வலிக்கறப்பத்தான் கருத்தமாயிக்குத் தெரியுது கட்டுப் போட்ட காலுக்குள்ள ஒரு காயம் இருக்கிற சங்கதி. ஆனது ஆகட்டும்; அவன் இப்ப எடுத்துட்டான் வண்டிய.

''ஏத்துனாலும் ஏத்திருவானோ? ஏத்தட்டும். எமன் கையில சாகிறதுக்கு மகன் கையில சாவோம். எடுக்கிறான் வண்டிய; எடுத்துட்டான். என்னது இது? பதறுது ஒடம்பு. ச்சீ... இந்த ஒடம்புங்கிற கழுதைக்கு இன்னும் உசுரு ஆசை போகலையோ? என்ன பண்றது? இந்த ஒடம்பு உசுரை நம்பி இருக்கு; உசுரு ஒடம்பை நம்பி இருக்கு. ஒண்ணைவிட்டு ஒண்ணு போனா உதறத் தான் செய்யும் கழுதை. ஒரு வகையில் என் ஆசைய நெறவேத்திவைக்கிறான் நான் பெத்து வளத்த பெரியவன். செத்தா சொந்த வீட்டுல சாகணும் - இல்ல, சொந்த நெலத்துல சாகணுமுன்னு நெனச்சேன். நெறைவேத்தப்போறான் என் புண்ணிய புத்திரன். பயலுக் குச் செலவு மிச்சம்; இடுகாடு வரைக் கும் தூக்கிட்டுப் போக வேண்டியதில்ல. இந்த வாய்க்காப் பள்ளத்துலயே புதைச் சிட்டுப் போயிரலாம். சத்தம் கூடுது வண்டிக்கு. ஏத்தப் போறான் எம் மேல. கண்ணை மூடி மூச்சைக் கட்டிக்கிட்டா பயம் எங்கிட்டுருந்து வரும் பயம்? வாடா... எங்கப்பன் சீனிச்சாமிகூடச் சேத்துர்றா.'' கண்ண இறுக்க மூடி 'தம்’ கட்டிப் படுத்துட்டாரு. ஆனா, சட்டுன்னு தேஞ்சுபோச்சு வண்டிச் சத்தம். என்னடா... என்னாச்சு? பய பயந்துட்டானா?

கண்ணு முழிச்சுப் பாத்தாரு கருத்தமாயி. அவரு காலை உரசாமத் தனக்குன்னு ஒரு வழி உண்டாக்கி முன்னப் போகுது வண்டி கிணத்து மேட்டுக்கு.

விசுக்குன்னு எந்திரிச்சாரு.

முத்துமணி என்ன முடிவெடுத்துப் போறான்னு குறுகுறுன்னு பாத்தாரு. 'யாத்தே... இவன் குடியக் கெடுக்கப்போறாண்டா சாமி.’ எந்த மரங்களத் தெய்வமா கும்பிடறாரோ அந்த மரங்கள வேரோட சாய்க்கணும்கிற ஒரே நோக்கத்துல கொலகாரப் பய வண்டி ஓட்டிப் போறான்னு புரிஞ்சுபோச்சு அவருக்கு.

''ஏலே முத்துமணி! வேணாமுடா. அதுக நம்ம குலசாமிக.''

விந்திவிந்தி நடந்த காலுக்கு எங்கிட்டு இருந்துதான் அந்த வேகம் வந்துச்சோ தெரியல. கத்திரிச்செடியில விழுந்து உசுரைக் கையில புடிச்சு ஓடுறாரு.

இந்தா இந்தான்னு நெருங்கிட்டான். வாய்க்கா மேடு கடந்தாப் போதும்; வேரோட எட்டி இடிச்சிரலாம் மரங்கள.

''ஏலே பாவிப்பயலே! நிறுத்துடா. தெய்வங்களக் கொல்லாதடா.''

அவன் நிறுத்தல; எந்திர யானையைக் கொண்டுபோறான் மரங்கள ஒட்டி.

'யாத்தே... யப்பே... நான் போறதுக்குள்ள இடிச்சிருவான் போலயிருக்கே ஈனப்பய மகன்.’

பாத்திக்குப் பாத்தி தவ்வி ஓடுறாரு மனுசன்.

வாய்க்கா மேடு தாண்டிட்டா மரம் அடிவாங்கிரும்னு நெனைக்கிறப்ப வண்டி நின்டுபோச்சு வாய்க்காமேட்டுலயே. சத்தமும் கேக்கல; வண்டியும் நகரல.

என்னமோ ஒரு கூத்தாகி நின்டுபோச்சு எந்திர யானை. நின்டுபோன வண்டிய ஓங்கி ஒரு எத்து எத்திட்டு வண்டிய விட்டுக் குதிச்சுட்டான் முத்துமணி. வண்டிக்குள்ள முள்ளு வெட்டக்கிடந்த வெட்டருவாள எடுத்து எறங்கிட்டான்.

''இந்தச் சனியனுங்கள வெட்டி எறியாம எங்கிட்டுருந்து வழி உண்டாக்கறது?''

முதல்ல தாத்தன் மரத்தை வெட்ட நோங்கிட்டான்; அருவாளையும் ஓங்கிட்டான்.

பளிச்சுன்னு தவ்விப் பின்னங்கையில மரத்தக் கட்டி நெஞ்சைக் காட்டி நின்னுட் டாரு கருத்தமாயி.

தகப்பன் மரத்தோட; மகன் அருவாளோட.

''வேணாம்; ஒதுங்கிக்க; வெட்டப்போறேன் மரத்தை...''

''ஏலே முத்துமணி... வெறி புடிச்சு அலையாதடா. நம்ம வம்சத்த வெட்டாதடா... குலசாமியக் கொல்லாதடா...''

''குலமாவது சாமியாவது? என்னியப் பொழைக்கவிடாத குலம் எதுக்கு? சாமி எதுக்கு? இதுகள வெட்டிப் பாதை உண்டாக்கி அடுத்த நிலத்துக்குப் போகணும் வழி விடு.''

''சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நிக்கி றன்டா. அப்பனுக்குக் கோவம் வராதுன்னு நெனச்சிராத.''

''ஏய்! உன் கோவம் என் ரோமத்தைப் புடுங்கிருமாக்கும். வெலகிக்க; இல்ல, உன்னையும் சேத்து வெட்டுவேன்.''

''வெட்டு பாப்போம்...''

விழுந்துருச்சு ஒரு வெட்டு சீனிச்சாமி மரத்து மேல.

''ஏலேய் முத்துமணி...''

குரல் மாறிப்போச்சு கருத்தமாயிக்கு. உடுக்கு அடி மாதிரி கேக்குது அவர் பேசுற சத்தம்.

நிதானத்துல இல்ல முத்துமணி; மிருகம் ஏறி நிக்குது அவன் கண்ணுல; அருவாப்பிடி இறுகுது; ஆத்தா மரத்துல விழுகப்போகுது அடுத்த வெட்டுன்னு தெரிஞ்சதும் மளார்னு தவ்வி ஆத்தா மரத்தை அணச்சுப் புடிச்சாரு கருத்தமாயி.

முத்துமணி அருவா இறங்கவும் தண்ணிப் பாம்பு மாதிரி தலைய விசுக்குன்னு உள்ள இழுத்துக்கிட்டாரு. இல்லேன்னா, மரத்துல விழுந்த வெட்டு அவரு உச்சந்தலையில் விழுந்து பூசாரி தேங்கா உடைச்ச மாதிரி ரெண்டு துண்டாப் பொளந்திருக்கும் கபாலம்.

''வேணாமுடா மகனே... நானும் மனுசன்தான்டா.''

ஆத்தா மரத்த அவரு காத்து நிக்க... தங்கச்சி மரத்துல விழுகுது ஒரு வெட்டு.

படக்குன்னு தவ்வி இப்பத் தங்கச்சி மரம் காத்து நிக்கிறாரு கருத்தமாயி.

''வேணாமுடா... நானும் ஒரு காலத்துல அருவா வீசுனவன்தாண்டா.''

இப்ப இஷிமுரா அவுக அப்பன் மசாமி மரத்து மேல எறங்கப்போகுது அருவா.

''கொலகாரப் பாவி...''

விழுந்த அருவாள எறங்க விடாமப் புடிச்சாரு எடது கையால.

ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் மத்தியில இருந்த சவ்வுல விழுந்து, மணிக்கட்டு வரைக்கும் ஆழமா எறங்கி ரெண்டா வகுந்துருச்சு அருவா.

காயப்போட்ட துணிய உருவியெடுத்த பெறகு கொடியில தொங்குமா இல்லையா 'கிளிப்’பு... அப்பிடித் துண்டாத் தொங்குது கட்டை வெரலு. ஒத்தை நூலுல ஊசலாடற சிலந்திப் பூச்சி மாதிரி ஒத்தைச் சவ்வுல தொங்குது அந்த ஒத்தை வெரலு.

அடுத்த வெட்டு விழப்போகுது இஷிமுரா அவுக ஆத்தா மரத்துல. இப்ப அந்த மரத்தக் காத்து நிக்கிறாரு கருத்தமாயி.

அவன் பெறந்தன்னைக்கிருந்து கருத்தமாயி இதுவரைக்கும் கேக்காத ஒரு குரல்ல முத்துமணி பேசறான்:

'ஒன்னிய வெட்டிட்டு மரத்த வெட்டவா? இல்ல, மரத்த வெட்டிட்டு ஒன்னிய வெட்டவா?''

''ஏலேய் மகனே... எனக்குள்ள கெடந்த சிங்கம் புலிய எழுப்பிட்டியேடா.''

நாலு எட்டு பின்னுக்கப் போயி அப்பன வெட்ட ஓ...டி... வந்தான் முத்துமணி.

மளார்னு பத்தடி பின்னுக்குத் தவ்வி ஓடி அப்பன் மரத்துக்குக் கீழ புலி பூமியத் தோண்டற மாதிரி வலது கால்ல மண்ணப் பறிச்சாரு கருத்தமாயி. முப்பத்தேழு வருசத்துக்கு முன்ன கவட்டைக்காலன வெட்டிட்டு பூமிக்கடியில புதைச்சு வச்ச வீச்சருவா வாரேன் வாரேன்னு வருது வெளிய. வெடைச்சுக் கிடந்த அருவாப்புடி மட்டும் தெரியுது கண்ணுக்கு. புடி நுனியில கால்பெருவிரல வச்சு சைஸா அமுக்கி ஒரு உந்து உந்தவும் வந்து விழுந்துருச்சு அருவா வலது கையிக்கு.

அவர் தோள்பட்டையக் குறிவச்சு வாரான் முத்துமணி.

இந்தா... இந்தா... எறங்கப்போகுது அருவா.

தலைக்கு மேல வந்த அருவாளத் தோதுபாத்துத் தடுத்துத் தட்டிவிட்டுப் போட்டாரு ஒரு போடு வெட்டவந்தவன் கழுத்துல.

தோலக் கிழிச்சு, சதையில எறங்கி, ரத்த நாளம் கடந்து, சவ்வப் பொளந்து, கழுத்தெலும்ப ஒடச்சு உள்ள புகுந்து, முதுகுத்தண்டு நரம்ப அறுத்து, உசுர வாங்கித் தலையத் தொங்கவிட்டு சங்குக் குழியில நின்னுபோச்சு அருவா.

முப்பத்தேழு வருசத் துருவை முத்துமணி ரத்தத்துல கழுவணுமுன்னு கெட்ட வரம் கேட்டு வந்திருக்கு அந்த அருவா.

ரொம்பத் துடிக்கல ஒடம்பு; பொட்டுன்னு போயிருச்சு உசுரு.

வேரறுத்த மரம் மாதிரி மகன் பொணத்துல விழுந்து கருத்தமாயி கதறுன கதறலக் கேட்டு, ஒரு பத்து மைல் சுத்தளவுக்கு ஏழெட்டு நாளா இரை எடுத்திருக்க முடியாது எந்தப் பறவையும்; தண்ணி குடிச்சிருக்க முடியாது எந்த ஆடு மாடும்.

''அய்யா... இன்ஸ்பெக்டரு அய்யா... எம் பேரு கருத்தமாயி. எம் மகன வெட்டிக் கொன்டுபுட்டேன். அதுக்கு நாந்தான் சாட்சி. எந்தக் கோர்ட்டுலயும் இதத்தான் சொல் லுவேன். இந்தாங்க அருவா; எழுதுங்க கேச.''

தேவதானப்பட்டி போலீஸுல சரண்டராகி உண்மையச் சொல்லிப்புட்டு ஒரு ஓரமா உக்காந்து, அந்த தொங்குற கட்டை வெரல வெளிய விடாம உள்ளங்கைக்குள்ள வச்சு அழுத்தி அமுக்கிக்கிட்டாரு.

சந்தைக்குப் போன சனமெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வந்து கூடிக் குமிஞ்சுபோச்சு.

கூட்டத்தை வெலக்கித் தலவிரி கோலமா அழுது வாரா சிட்டம்மா.

''அய்யா... என் ஆம்பள... என்னய்யா பண்ணிப்புட்ட? என் புள்ளையையும் கொன்னு என் பொழப்பையும் கொன்னு திருப்பி செயிலுக்குப் போறியா சாமி? எப்பிடிப் பொழப்பேன் நீயில்லாம? எம் மேலயும் ஒரு அருவா வீசிட்டுப் போயிட் டீன்னா, என் சென்மம், சிரமம் ரெண்டும் சேந்து அடங்கிருமில்ல. இந்தப் பொச கெட்ட சிறுக்கிய ஒத்தையில விட்டுட்டுப் போறியா ராசா?''

அவ கத்தி அழுது கதறக் கதற... கருத்தமாயி அழுகுறாரு;

வேடிக்கை பாத்த ஊர்ச் சனம் அழுகுது;

ஒண்ணு ரெண்டு போலீஸ்காரகளும் அழுகுறாக.

ரத்தம் ஒறஞ்சுபோச்சு; கண்ணீர் கொட்டுது கருத்தமாயிக்கு.

''பேசிட்டியா தாயி? பேசிட்டியா? பேசிட்டயில்ல? பேசாமப் போனாலும் பாசக்காரிடி நீயி. உம் மேல உசுரையே வச்சிருக்கேன்டி. இது போதும் தாயி. இனி எனக்குத் தூக்குச் சொன்னாலும் துன்ப மில்ல. இப்பவும் சொல்றேன் - உனக்கு நான் ஒரு நாளும் துரோகம் பண்ணுனது இல்ல. சத்தியம் பண்ணட்டுமா?''

படக்குன்னு குனிஞ்சு உள்ளங்கையில ஒளிச்சுவச்ச கட்ட விரல வெளிய எடுத்தாரு. ''யாத்தேன்னு'' அலறுனா சிட்டம்மா. தொங்குன சவ்வப் பல்லுல கடிச்சுத் துண்டா எடுத்தாரு கட்டைவிரல. அத ரத்தத்துல அமுக்கி ஏட்டு மேசை மேல இருந்த ஒரு வெள்ளைத் தாள்ல உருட்டுனாரு. பதிஞ்சுருச்சு ரேகை. அந்த வெள்ளைத் தாள்ல கட்டை விரல மடிச்சாரு. விரல சிட்டம்மா கையில கொடுத்துட்டுச் சொல்றாரு:

''இந்த ரேகை சத்தியமா உனக்குத் துரோகம் பண்ணல சிட்டம்மா.''

அவ மளார்னு அவரு மடியில விழுந்தா.

உடம்பு குலுங்கிக் குலுங்கி உசுரு சிதறுது.

ரொம்ப நேரமா எந்திரிக்கல அவ.

எந்திரிச்சுப் பாத்தா -

அவரு வேட்டியெல்லாம் கண்ணீரு;

அவ மூஞ்சியெல்லாம் ரத்தம்.

த்துப் பன்னண்டு நாளைக்கு அப்புறம்தான் தோட்டத்துக்குப் போறான் சின்னப்பாண்டி. கிணத்து மேட்டுல நின்னு வானத்தையும் பூமியையும் மாறிமாறிப் பாக்குறான். இப்பிடி ஒரு சம்பவம் நடந்ததா பூமிக்கோ வானத்துக்கோ ஒரு தகவலும் இல்ல. அதுகதுக வேலைகள அதுகதுக செஞ்சிக்கிட்டிருக்குக எப்பவும்போல.

இட வலமாவே சுத்துது இப்பவும் பூமி. தெக்க வடக்க மாறி மாறி அடிக்குது காத்து. அந்த தெய்வ மரங்கள்ல எப்பவும்போல சண்டையும் சரசமும் பண்ணிக் கூத்தடிக்குதுக காக்கா குருவிக. பூமிய எப்பத் தொடணும் எப்ப விலகணும்னு தொழில் மாறாமச் செய்யுதுக இருட்டும் வெளிச்சமும்.

வாய்க்கா வழியா நடந்துபோனான் சின்னப்பாண்டி. புடிய விட்டுத் தனியாக்கெடந்துச்சு அப்பன் கடைசியா வெட்டுன மம்பட்டி. குனிஞ்சு எடுத்தான். மம்பட்டி புடிய ஒண்ணு சேத்தான். சட்டையைக் கழத்தி வச்சான்; வேட்டிய மடிச்சுக் கட்டுனான். அப்பன் விட்ட இடத்துல இருந்து வாய்க்காச் செதுக்க ஆரம்பிச்சான்.

- ஓய்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism