Published:Updated:

இவரைப் பற்றி... கே.கிருஷ்ணா ராவ்

இவரைப் பற்றி... கே.கிருஷ்ணா ராவ்

இவரைப் பற்றி... கே.கிருஷ்ணா ராவ்

இவரைப் பற்றி... கே.கிருஷ்ணா ராவ்

Published:Updated:
##~##

ம்புச் செட்டித் தெருவில் அமைந்து இருந்த வெங்கடராமய்யர் ஹோட்டலின் முன்னால், நடைபாதையில், குளிரால் நடுங்கியவண்ணம் உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்திருந்தார் ஓர் ஏழை இளைஞர். நள்ளிரவு வேளை. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் சாலையில் போவோர் வருவோரும் 'சளசள’வென்று ஏதோ பேசிக்கொண்டே சென்றனர். ஆனால், அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அந்த இளைஞருக்குத் தெரியாது. காரணம், அவர்கள் பேசிக்கொண்ட தமிழ் பாஷை, அவருக்குப் புரியாத பாஷை. பகல் எல்லாம் நல்ல வேலை. அதனால், அசதி மிகுந்து அயர்ந்துவிட்டார் அவர்.

 ஆனால், மறுநாள் காலை வழக்கப்படி புன்முறுவல் பூத்த முகத்துடன் சாப்பிட வந்தவர்களுக்குச் சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருந்தார் அந்த இளைஞர். வயிறார உணவு படைப்பதிலே, அதைக் காண்பதிலே அந்த இளைஞருக்கு எப்போதுமே திருப்திதான். அன்று முதல் இன்று வரை, ஆயிரக்கணக்கானவர்கள் வயிறாரத் திருப்தியுடன் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் அவர். ஆனால், ஒரு வித்தியாசம்... அன்று அவர் ஒரு தொழிலாளியாக இருந்தார்; இன்று ஒரு முதலாளியாக இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்தான், உட்லண்ட்ஸ் ஹோட்டல் ஸ்தாபகர் கிருஷ்ணா ராவ்.

இவரைப் பற்றி... கே.கிருஷ்ணா ராவ்

கிட்டத்தட்ட நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், கன்னட நாட்டைவிட்டு வெளியேறி, பிழைப்புக்காகத் தமிழகத்தைச் சரணடைந்தவர் கிருஷ்ணா ராவ்.

''பாஷைகூடத் தெரியாமல் பட்டணத்துக்குப் பிழைக்க வந்தேன் நான். அந்தக் காலத்தில் இப்போது இருப்பதுபோல் தர்மம் கிடையாது. இன்று சாப்பாட்டுக்கு இல்லையென்று யாராவது சொன்னால், உடனே ஏதாவது தானம் கொடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்று அப்படி அல்ல. வெள்ளைக்கார ஆட்சி. பணக்காரர்கள், ஏழைகளின் கண்களில்கூடத் தென்பட மாட்டார்களே. எப்படியோ சென்னைக்கு வந்து ஒருவர் வீட்டில் ஐந்து ரூபாய் சம்பளத்துக்குச் சமையல் வேலை செய்து காலம் தள்ளினேன். பிறகு, வெங்கடராமய்யர் ஹோட்டலில் வேலை. பன்னிரண்டு ரூபாய் சம்பளம். அந்தக் காலத்துப் பட்டணம் இப்ப மாதிரி இல்லை. நாலரை லட்சம்தான் ஜனம். அப்பத்தான், ஆசாரப்பன் தெருவிலே ஒரு சின்ன ஹோட்டலைத் துணிந்து வாடகைக்கு எடுத்தேன். என்ன பெரிய ஹோட்டல்? பொங்கல், புளியோதரை எல்லாம் போடற ஹோட்டல்தான். நான்தான் முதலாளி, சர்வர், சரக்கு மாஸ்டர் எல்லாம். மடியில் பணத்தை வாங்கிப் போட்டுக்குவேன். மாதம் ஐம்பது ரூபாயாக, எழுநூறு ரூபாய் கட்டணும். கட்டத் தவறினா, ஹோட்டலும் கிடையாது, கட்டின பணமும்போச்சு. ஏதோ ஆண்டவன் புண்ணியத்துல அந்த வியாபாரம் விருத்தி ஆச்சு!'' என்று தனது ஆரம்பக் கதையை விளக்கினார் கிருஷ்ணா ராவ்.

சென்னை மவுன்ட் ரோடில் 1926-ல் உடுப்பி ஹோட்டல் ஒன்றைத் தொடங்கினார் கிருஷ்ணா ராவ். மாதம் நூற்று அறுபது ரூபாய் வாடகை. அதில் நல்ல வியாபாரம். அதன் பிறகு, ராயப்பேட்டையில் ஐந்நூறு ரூபாய் வாடகையில் 1938-ல், உட்லண்ட்ஸ் ஹோட்டலைத் தொடங்கினார். '' 'உட்லண்ட்ஸ்’ என்று ஏன் பெயர் வைத்தீர்கள்?'' என்று கேட்டதற்கு, ''அந்தக் கட்டடத்தின் பெயர் அதுவாக இருந்தது. அதையே வைத்துவிட்டேன். அவ்வளவுதான்!'' என்றார்.

இவரைப் பற்றி... கே.கிருஷ்ணா ராவ்

அயராது உழைத்து, தமது ஹோட்டலைப் பெரிதாக்கி, ராயப்பேட்டை இடத்தின் அக்ரிமென்ட் முடிந்த பின்னர், மயிலாப்பூர் எட்வர்ட் எலியட்ஸ் சாலையில் உட்லண்ட்ஸைத் தொடங்கினார். இதைத் தவிர, பெங்களூரில் 'உட்லண்ட்ஸ்’ ஹோட்டல் சிறப்பாக இயங்குகிறது.

இன்று சென்னையில் பல நல்ல ஹோட்டல்கள் வளர்ந்துவிட்டன. அவற்றை நிறுவியுள்ளவர்களில் ஏறத்தாழ அறுபது பேர்கள், கிருஷ்ணா ராவிடம் பணிபுரிந்தவர்கள்தான். தனியாக ஹோட்டல் நடத்த விரும்புபவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்து, ஆசி கூறி அனுப்பிவைப்பார் இவர்.

ந்நிய நாடுகளில் ஹோட்டல்கள் எப்படி இயங்குகின்றன என்று அறிய ஆவல்கொண்ட கிருஷ்ணா ராவ், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுற்றுப்பயணம் புறப்பட்டார். அவர் பயணம் செய்த நாடுகள் லண்டன், ஜெர்மனி, பாரிஸ், ரோம், நியூயார்க். அந்த விஜயத்தின் பலன்தான், இன்று சென்னை மக்கள் அனுபவிக்கும் 'டிரைவ் இன் ஹோட்டல்’!

உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பலவித சௌகரி யங்கள் செய்துகொடுத்திருக்கிறார் இவர். 'வீட்டில் இருந்து தள்ளி இன்னொரு வீடு’ (A HOME AWAY FROM HOME) என்ற முறையில், இங்கு தங்குபவர்களுக்குச் சிறந்த கவனிப்பு இருக்கிறது. ''நீங்கள் ரொம்பவும் ஆசாரசீலரா? தினமும் பூஜை செய்யாமல் சாப்பிட மாட்டீர்களா? உட்லண்ட்ஸில் தங்கினால், அந்தக் கவலையே வேண்டாம். அழகான, தெய்வ மணம் கமழும் பூஜை அறை இருக்கிறது இங்கே!'' என்கிறார் இவர். நவீன வசதிகளுடன், புராதனப் பழக்கவழக்கங்களையும் விட்டுவிடாமல் இந்த ஹோட்டலில் பாதுகாத்துவருகிறார் கிருஷ்ணா ராவ்.

பொது வாழ்க்கையில் அதிகமாக ஈடுபட மாட்டார் கிருஷ்ணா ராவ். இன்று வியாபாரப் பொறுப்புக்களை எல்லாம் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டார். ஆனாலும், ஏதேனும் முக்கியமான 'பார்ட்டி’ நடக்கிறது என்றால், அவரை அங்கே தவறாமல் காணலாம்.

''1926-ல் இருந்து நான் கதர்தான் போட்டுக்கொண்டு இருக்கிறேன். ஆனால், எந்தக் கட்சி யிலும் சேராதவன் நான். காங்கிரஸுக்கு என்ன வேலை செய்ய வேண்டுமோ, அதை வெளியில் இருந்து செய்துகொண்டு இருக்கிறேன்!'' என் கிறார்.

முன்னூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்துவரும் இந்தத் தொழில் அதிபர், சென்னையில் உள்ள கர்நாடக சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இவரை யாரேனும் சந்திக்கச் சென்றால், தமது ஹோட்டலின் நவீன காட்டேஜ்களையும் புதிதாக எழும்பிவரும் கட்டடங்களையும் காட்டுவ துடன், மிகச் சுத்தமாகவும் சுகாதார முறையிலும் வைக்கப்பட்டு இருக்கும் சமையல் அறையையும் காட்டத் தவற மாட்டார். அது சுத்தமாக இருப்பதில் அவர் பெருமைப்படுகிறார். நியாயமான பெருமைதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism