புதுவையில் இயங்கும் பல உள்ளூர்த் தொலைக்காட்சிகளில், 'படத்துக்கு நடுவில் விளம்பரம் ஓடுகிறதா, விளம்பரங்களுக்கு நடுவில் படம் ஓடுகிறதா’ என்பதே தெரியாத அளவுக்குத் தொலைக்காட்சி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த விளம்பரங்கள் எல்லாமே வியாபார நோக்கம்கொண்டவை. ஆனால், இதற்கு இடையிலும் சில தொலைக்காட்சிகளில் மக்கள் விழிப்பு உணர்வு விளம்ப ரங்கள் ஒளிபரப்பாகின்றன. 'பெரிய அளவு லாபம் எதுவும் தேவை இல்லை. தேவையான கருத்துக்கள் மக்களைச் சென்று சேர்ந்தால் போதும்’ என்று இத்தகையவிளம்பரப் படங்களை இயக்கிக்கொண்டு இருக்கிறார் புதுவையைச் சேர்ந்த அருமைதாசன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
அவரைப் பார்க்கலாம் என்று நேரில் சென்றால்... கையில் ஒரு கேமராவுடனும் நடிகர்கள் இருவருடனும் ஷூட்டிங் நடப்பதற்கான அறிகுறியே இல்லாமல் மக்களுக்கே தெரியாமல் எளிமையாகப் படங்களை இயக்கிக்கொண்டு இருந்தார் அருமைதாசன்.
''ஆரம்பத்தில் நானே 'ரெயின்போ டி.வி.’ என்ற பெயரில் ஒரு தனியார் தொலைக்காட்சியை நடத்திவந்தேன். நான் 'நாம் தமிழர் கட்சி’யில் இருக்கிறேன். அரசியல் சார்ந்து செயல்படுவதால், என் சமூகப் பார்வையை ஊடகத்தின் வழியாகக்கொண்டுசெல்லலாம் என்று நினைத்தேன். அதற்காகத்தான் இத்தகைய விழிப்பு உணர்வு விளம்பரப் படங்களை எடுக்க ஆரம்பித்தேன். விபத்துத் தடுப்பு, சாலை விதிகளை மதித்தல், ஆதரவற்ற முதியவர்கள், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, தண்ணீர் சிக்கனம், மது ஒழிப்பு இவைதான்என் படங்களின் மையக் கருக்கள். எல்லாப் படங்களும் அதிகபட்சம் ஒரு நிமிடம் ஓடக்கூடியவை. ரெயின்போ தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு இடையில் இத்தகைய விழிப்பு உணர்வு விளம்பரப் படங்களை ஒளிபரப்பிவந்தோம்.
காலப்போக்கில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் காரணமாக என் நிறுவனத்தை மூடி விட்டேன். அப்போதுதான் ஏ.ஜே.கே. டி.வி- என்ற உள்ளூர் சேனலில் இத்தகைய படங்களை எடுத்துத்தரும்படி என்னிடம் கேட்டுக்கொண் டார்கள். நான் சொல்ல நினைக்கும் கருத்துக்கள் மக்களிடம் சென்றால்போதும், அது யார் மூலம் சென்றால் என்ன? என்பதால் ஒப்புக்கொண்டு படங்களை இயக்கினேன். அதன் பிறகு ரீனா டி.வி., ஏ.ஜே.கே. கோல்டு, ஜி-டி.வி., ஜெய் கிருஷ்ணா என்று பல சேனல்களில் வாய்ப்புவந்தது.

நாங்கள் படம் எடுக்க ஒன்றும் பெரிதாகச் செலவு செய்ய மாட்டோம். அதிகபட்சம் 800 ரூபாய் இருந்தால்போதும். எங்களிடம் கேமரா இருக்கிறது. என்னுடைய நண்பர்கள்தான் நடி கர்கள். கற்பனையை மட்டுமே மூலதனமாக வைத்து படங்களை இயக்கிவருகிறோம். சில சமயம் நாங்கள் எடுத்த பல படங்களை அரசி யல் காரணங்களால் தொலைக்காட்சிகள் ஒளி பரப்ப மறுக்கும். ஆனால், அதைப் பற்றிஎல்லாம் பெரிதாகக் கவலைப்படவில்லை. சமீபத்தில் நான் இயக்கிய குழந்தைத் தொழிலாளர் பற்றிய படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு கடையில் வேலை செய்த சிறுவனை அவனுடைய முதலாளியே தன் சொந்த செலவில் படிக்கவைப்பதைத் தெரிந்து நெகிழ்ந்துபோனேன். இது கலைக்கும் கருத்துக்கும் கிடைத்த வெற்றிதானே?'' என்கிறார் அருமைதாசன்.

- ஆ.நந்தகுமார்