ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அழுகை, ஒப்பாரி என்று எல்லா உணர்ச்சிகளும் கலந்து நடந்து முடிந்து இருக்கிறது அந்தத் திருவிழா. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் என்ற சிறிய கிராமத்தின் பெயர், 20 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம்வாசிகளே அறியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், இப்போது உலகமே அறிந்த பெயர் 'கூவாகம்’. அங்கு நடந்த கொண்டாட்டத்தின் சில துளிகள் இங்கே...

##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஏப்ரல் 30, காலை 11 மணிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் குத்துவிளக்கு ஏற்ற, வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களுமான அமுதமொழி, ஷாகின், விஜயநர்சினி ஆகிய நடுவர்களின் முன்னிலையில் ஆடல், பாடலுடன் அரங்கேறியது 'மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி!
முதலில் மேடை ஏறிய வாணியம்பாடியைச் சேர்ந்த ஷகிலா என்ற திருநங்கை, மாடர்ன் உடையில் ஆடிப் பாட உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.!
மூன்றாவதாக ஆடிய, கேரளாவைச் சேர்ந்த சுசீலா என்ற திருநங்கை, 'கலாசலா... கலசலா’ பாடலுக்கு ஆட, கூட்டம் முழுக்கக் கலகலாதான்!

நாகர்கோயில் திருநங்கை நிஷா, 'மச்சானப் பாத்தீங்களா’ பாடலுக்கு ஆடினார். பரதநாட்டியப் பாணியில் கை அசைவு, கண் அசைவிலேயே இவர் நடனம் அமைந்து இருந்ததற்குக் கூடுதல் வரவேற்பு!
முதன்முதலாக ஆட்டத்துக்குப் பண மழையைப் பெற்றது, தஞ்சாவூர் சொர்ணாதான். 'சிங்கி... சிங்கி...’ என்ற பாடலுக்கு அவர் ஆடும்போது விழுப்புரம் திருநங்கை லைலா 10 ரூபாய் நோட்டுகளைப் பண மழையாக அள்ளி வீசினார்!
நடனம் ஆடுவதற்குக் கூட்டம் அள்ளியதால் ஒரு கட்டத்தில் பாடலை இடையிலேயே நிறுத்தி அடுத்தடுத்த ஆட்டக்காரர்களை அவசர அவசரமாக அழைத்து ஆடவைத்தனர்!
மேடையில் ஒருவர் ஆடும்போது, அவர்களின் ஆதரவாளர்கள் மண்டபத்துக்குள் அதற்கு இணையாக ஆட்டம் போட... 'மானாட.. மண்டபம் ஆட’தான்!
அழகிப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்தார் திருநங்கை ஹரிணி. இரண்டாம் இடம் தீபிகாவுக்கு. மூன்றாம் இடம் சாயாசிங்குக்கு. முதல் இடம் பிடித்த அழகிக்கு மற்ற இரண்டு அழகிகளும் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை இரண்டாவது, மூன்றாவது வந்த அழகிகள் ஹரிணிக்கு முத்தம் கொடுக்க ரொம்பவே வெட்கப்பட்டனர்.
இதுவரை நடந்த கூவாகம் அழகிப் போட்டிகளில் பொது மக்களும் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், இந்த முறை திரு நங்கைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மட்டுமே அனுமதி!

பொதுவாகத் திருநங்கைகளுக்கு ஆண்மை கலந்த பெண் குரல்தான் இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த பிரியதர்ஷினி என்ற திருநங்கைக்கு அச்சு அசல் பெண்குரலாகவே இருந்தது ஆச்சர்ய நிஜம்!

- அற்புதராஜ்
படங்கள்: எஸ்.தேவராஜன்