Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : இயக்குநர் பிரபு சாலமன்படம் : பொன். காசிராஜன்

பிரீமியம் ஸ்டோரி

பிரபலங்கள்  விகடனுடனான  தங்களின்  இறுக்கத்தை, நெருக்கத்தை,  விருப்பத்தைப்  பகிர்ந்துகொள்ளும்   பக்கம்!

##~##

''வணக்கம்! என் சொந்த ஊர், தஞ்சை மாவட் டம் திருக்காட்டுப்பள்ளி. நெய்வேலி என்.எல்.சி-யில் அப்பாவுக்கு வேலை என்பதால், அங்கேதான் பள்ளிப் படிப்பு. அந்தச் சமயங்களில் வாசிப்பு என்றால், அது பள்ளிப் பாடப் புத்தகங்கள் மட்டும்தான். அப்போது நெய்வேலி மிகச் சிறிய டவுன் என்பதால், விகடன் அவ்வளவு சீக்கிரம் கையில் சிக்காது. ஆனாலும், போராடி எங்காவது விகடனைப் பிடித்து படித்துவிடுவேன்.அதுமட்டுமல்ல, பழைய விகடனில் வந்த  'துப்பறியும் சாம்பு’ தொடரில் இருந்து ஓவியங் களை வெட்டி ஒட்டி, ஒரு சினிமாவைப் போல் ஓட்டிப்பார்த்தது சந்தோஷமான தருணங்கள்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில்தான், விகடன் எனக்கு நெருக்கமானது. ஒரு வாரம்கூடத் தவறவிடாமல் படிக்கும் அளவுக்குத் தீவிரமான வாசகன் ஆனேன். ஒரு பக்கம்விட்டு ஒரு பக்கம் வரும் நகைச்சுவைத் துணுக்குகள்; மனக்கண்ணில் காட்சிகளாக விரியவைக்கும் சினிமா செய்திகள் என விகடனின் அந்த ஃபார்மெட், ஒரு திரைக்கதைபோல அவ்வளவு அழகாக இருக்கும்.

விகடனை வாசிப்பதற்கே ஒவ்வொருவரும் தன்னளவில் தனி ஷெட்யூல் போட்டுக்கொள்வார்களோ என்று தோன்றும்.  அட்டை டு அட்டை விகடனில் உள்ள ஜோக்ஸ், பிட்ஸ் முதலில் படித்து ரசிப்பது,

நானும் விகடனும்!

அடுத்து சினிமா செய்திகள், கேள்வி-பதில் பகுதிகள், கட்டுரைகள். பிறகு, சாவகாசமாக சிறுகதைகள்... இதுதான் விகடனைப்படிக்க நான் வகுத்துள்ள ஃபார்மெட். நகைச்சுவை தான் விகடனின் முகம். நகைச்சுவைத் துணுக்குகள், அதற்கு உண்டான கார்ட்டூன் கள்,  கட்டுரைகள், பேட்டிகள் என விகட னின் எல்லாப் பக்கங்களிலும் மெல்லிய நகைச்சுவை இழையோடுவதுதான் அதன் ஸ்பெஷல்.

டிகிரி முடித்துவிட்டு, உதவி இயக்குநர்ஆகும் எண்ணத்தில் சென்னை வந்து சுற்றிய அந்த ஆறு மாதங்களில் நான் மனதளவில் சிரித்தது என்பது, விகடனைப் படிக்கும்போது மட்டும்தான். அந்த அளவுக்குப்  போராட்டமான காலகட்டம். சின்ன கேப் விட்டு மீண்டும் முயற்சிப்போம் என சினிமா முயற்சிக்கு பிரேக் விட்டு, வேறு வேலை தேடினேன். கிடைத்தது. ஆனால் இங்கு இல்லை; உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள தாதரி என்ற குக்கிராமத்தில். அங்குள்ள தெர்மல் பிளான்ட் ஒன்றில் சூப்பர்வைசர் பணி.

சென்னையில் இருந்து ரயிலில் கிளம்பினேன். ரயில் ஒவ்வொரு மாநிலத்தையும் தாண்டும்போதும் அந்த கம்பெனியில் சேர ஆங்காங்கே கூட்டம் ஏறியது. இப்படி என்னைச் சுற்றி மலையாளிகள், வட இந்தியர்கள். மருந்துக்குக்கூட ஒரு தமிழ் முகம் இல்லை. காசியாபாத் ரயில் நிலையத்தில் இறங்கியதும் ஒரு கடையில் தொங்கிய ஆனந்த விகடனைப் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே ஓடிப்போய் விகடன் வாங்கினேன். தாதரி செல்வதற்குள் அட்டை டு அட்டை அதைப் படித்து முடித்துவிட்டேன்.

அடுத்து வந்த ஒவ்வொரு வாரமும் பேப்பரில் 'ஆனந்த விகடன்’ எனத் தெளிவாக எழுதிக்கொடுத்து, 'விகடன் வாங்கி வாருங்கள்’ என அட்டெண்டரை அனுப்பிவைப்பேன். 'முன்பதிவு பண்ணித்தான் வாங்கணுமாம்; வந்தது எல்லாம் வித்துடுச்சாம்; இந்த வாரம் இன்னும் வரலியாம்’ என நான் அங்கு தங்கியிருந்த ஆறு மாதங்களும் 'விகடன் இல்லை’ என்பதையே வெவ்வேறு தொனிகளில் வந்து சொல்லி எரிச்சல் ஏற்படுத்தினார்கள். அந்தச் சமயங்களில் கட்டுரை, கதைகள் தாண்டி விளம்பரங்கள், பின் அட்டையில் உள்ள ரெஜிஸ்டர் நம்பர் என நான் அங்கு தங்கிஇருந்த நாட்கள் முழுக்கவே, ஏற்கெனவே காசியாபாத் ரயில் நிலையத்தில் வாங்கிய அந்தப் பழைய விகடனே எனக்குத் துணை. சொன்னால் நம்புவது கடினம், அந்தப் புத்தகத்தில் அட்டை டு அட்டை அனைத்தும் எனக்கு மனப்பாடம்.

பிறகு மீண்டும் சென்னை. மீண்டும் சினிமா. என் முதல் படம் 'கிங்’குக்கு நான் முதலில் வைத்த தலைப்பே 'விகடன்’தான். மக்கள் பிரச்னை, போர் எனப் பதற்றமான அரசவை நாட்களில் உள்ளே புகுந்து அந்தச் சூழலை எளிதாக்குவதில் விகடகவி களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்படிப் பட்டவன்தான் என் ஹீரோ என்பதாலும், நான் விகடன் வாசகன் என்பதாலும், விக்ரம் நடித்த என் முதல் படத்துக்கு முதலில் 'விகடன்’ என்றே பெயர் வைத்தேன். பிறகுதான் அந்தப் படம் 'கிங்’ என மாறியது.

'கிங்’ படப்பிடிப்பு குஷால்தாஸ் கார்டனில் நடந்துகொண்டு இருந்தபோது விகடன் நிருபர் வந்து என்னைப் பேட்டி எடுத்தது இன்றும் நினைவில் உள்ளது. 'கிங்’ க்ளைமேக்ஸில் சுமித்ரா மேடம், விகடன் பவள விழா இதழைக் கையில் பிடித்தபடி ஜோக்ஸ் படித்துச் சிரிப்பதாகவும் அதில் இருந்து லீட் எடுத்து விக்ரம் காமெடி பண்ணுவதாகவும் அந்தக் காட்சி செல்லும். அதாவது, தன் வாழ்வின் இறுதி நாட்களில் உள்ள ஒருவன் மற்றவர்களை எப்படித் தன் நகைச்சுவையால் மகிழ்விக்கிறான் என்பதை உணர்த்தவே அந்தக் காட்சி. சிறப்பாக விமர்சனம் செய்திருந்தது விகடன்.

'கொக்கி’, 'லீ’, 'மைனா’ என என் அடுத்தடுத்த படங்களிலும் நிறைகுறைகளை ஏற்றுக்கொள்வதுபோல் அழகாக சுட்டிக்காட்டியிருந்தனர். இதில் 'கொக்கி’ விமர்சனத்தில் 'கமர்ஷியல் டாக்குமென்ட்டரி’ என முடித்து இருந்தனர். அந்த வார்த்தைப் பிரயோகம் எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் எங்கிருந்து பிடிக்கிறார்கள் எனத் தோன்றியது.

நான் பெற்ற முதல் விருதும் விகடன் தந்ததே. 2010-ம் ஆண்டுக்கான விகடன் விருதுகளில் 'மைனா’வுக்காக மிகச் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அந்த விருதின் வீச்சை ஆரம்பத்தில் நான் பெரிதாக அறியவில்லை. இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டதும், தெரிந்தவர் கள், தெரியாதவர்கள் என எத்தனையோ பேர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினர்.

புகழ் என்ற என் கல்லூரி நண்பரின் அண்ணன் என்னைத் தொலைபேசியில் அழைத்து, 'தம்பி, இது தேசிய விருதைவிட பெருசுப்பா. தேசிய விருதைக்கூட குடியரசுத் தலைவர் உன் கையில மட்டும்தான் கொடுப்பாங்க. ஆனால், உன்னோட இந்த விருதை ஊர்ல உலகத்துல எல்லார் கையில யும் விகடன் கொண்டுபோய்ச் சேர்த்துடும்ன்னார். 'அட, ஆமாம்’னு தோணுச்சு. அப்படி சந்தோஷத்துடன் தொடங்கிய 2010-ன் எல்லா நாட்களும் பிறகு மகிழ்ச்சியாகவே கழிந்தன.

விகடன் வடிவமைப்பில் சிறிய புத்தகமாக இருந்து பிறகு பெரிதானபோது, என் போன்ற வாசகர்களுக்குச் சின்ன வருத்தம். பிறகு, 'ஆமாம். ஒரே தியேட்டர்தான்... ஆனால் ஸ்க்ரீன் மாறுவது இல்லையா’ எனப் புரிந்துகொண்டேன். அடுத்தடுத்த வாரத்திலேயே 'நீங்க எதிர்பார்த்த ஃபீல் எல்லாமே இதுலயும் இருக்கு’ எனப் புரியவைத்தனர். இப்போது விகடனில் நான் வெகுவாக ரசிக்கும் பகுதி 'பொக்கிஷம்’. இதில் இடம்பெறும் சினிமா முன்னோடிகளின் பழைய புகைப்படங்கள் ஆச்சர்யம் ப்ளஸ் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தரும்.

விகடனின் மீதான நம்பகத்தன்மைக்கு சமூகத்தின் மீதான அதன் அக்கறையும் ஒரு காரணம். 'தானே புயல் அடிச்சு ஓய்ஞ்சிடுச்சு...’னு கடலூர், புதுவைவாசிகளே கம்மென்று இருக்க, 'இது எங்களின் கடமை’ என்று களம் இறங்கி ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் செய்கிறார்கள். நகைச்சுவை, விகடனின் முகம் என்றால்; இந்த அக்கறைதான் விகடனின் மனம். இன்று எத்தனையோ இதழ்கள் வந்தாலும் விகடன் தனித்து நிற்பதற்கு இந்த அக்கறையும் அது எடுத்துக்கொள்ளும் மெனக்கெடலுமே காரணம். இது ஒரு கம்ப்ளீட் இதழ்.

விகடன் விமர்சனத்துக்கும் அது படத்துக்குத் தரும் மதிப்பெண்களுக்கும் எதிர்பார்த்து சினிமா உலகமே காத்திருக்கிறது; அந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு தியேட்டர் செல்லும் ரசிகர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால், ஏன் எந்தப் படத்துக்கும் 80 மதிப்பெண் எல்லாம் தர மறுக்கிறார்கள் என்பது மட்டும் எனக்குப் பிடிபடவில்லை. இதை உரிமையோடு பகிர்ந்துகொள்கிறேன்.

'காஸ்ட்வே’. இது டாம் ஹாங்க்ஸ் நடித்த படம். நடுக் கடலில் திக்குத் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் ஹீரோ கரைக்கு எப்படிச் செல்வது என்பது தெரியாமல் பயணத்திலேயே இருப்பான். தீவுகளில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு படகுகள் செய்தபடி ஆறு ஆண்டுகளாகக் கரையைத் தேடி அலைவான். அப்படிப்பட்டவனுக்கு அவன் வைத்திருக்கும் பந்துதான் உற்ற நண்பன். அதை ஓர் உயிராகக் கருதி, அதற்கு கண், மூக்கு, காது வரைந்து அதனிடம் தன் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்வான். எனக்கு ஆனந்த விகடன்தான் அந்தப் பந்து!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு