Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

வாவ்! எதை எழுதுவது, எதை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைப்பது என்ற பதைபதைப்புடன் இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

 இந்த வாரத்தின் பிரதானமாக அலசப்படப்போவது கூகுள்.

எங்களுக்குச் சொந்தமான ஜாவா மென்பொருளை எங்கள் அனுமதியின்றி, ஆரக்கிள் (www.oracle.com) திருட்டுத்தனமாக ஆண்ட்ராயிட் அலை இயங்குபொருளில் பயன்படுத்துகிறது. இதற்குச் சன்மானமாகப் பல நூறு மில்லியன் டாலர்களைக் கொடுக்க வேண்டும் என்று கூகுள் வழக்குத் தொடர்ந்தபோது, பலரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், டெக் நிறுவனங்கள் அவ்வப்போது ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடுத்துக்கொள்வது அத்தனை விசேஷமான செய்தி அல்ல. ஒரு காலத்தில் ஆப்பிளும் மைக்ரோசாஃப்ட்டும், எலியும் பூனையுமாக ஒன்றின் மீது மற்றொன்று வழக்கு தொடர்ந்துகொண்டு இருந்தன. பின்னாளில், அதே ஆப்பிள் நிறுவனத்தில் மைக்ரோசாஃப்ட் முதலீடு செய்த விநோதமும் நடந்தது. ஆக, டெக் உலகில் இதெல்லாம் சாதாரணமப்பா!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

ஆனால், கூகுள் கேஸ் கொஞ்சம் சீரியஸ் ஆகும்போல இருக்கிறது.

ஆண்ட்ராயிட் இன்று பிரபலமான அலை இயங்குபொருள். இது பிரபலமாகக் காரணம், இது ஓப்பன் சோர்ஸ் எனப்படும் உரிமத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், ஆண்ட்ராயிட் இயங்கு மென்பொருள் இலவசம். இதை இலவசமாகக் கொடுப்பது கூகுள். இது இலவசம் என்ற காரணத்தினால்தான், பல்வேறு அலைபேசி சாதனத் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ராயிடைத் தங்களது அலைபேசியில் உள்ளடக் கினார்கள்.

இங்கே ஒரு சீன் கட்...

சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. பெருங்கணினி நிறுவனமாக இருந்து வந்த சன் ஒரு காலகட்டத்தில், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஐ.பி.எம். நிறுவனங்களை எதிர்த்து தனியாக இண்டஸ்ட்ரியில் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாட, அதை வளைத்துப் போட்டுக்கொண்டது ஆரக்கிள். சன் நிறுவனம் பெருங்கணினிகளையும் அவற்றை இயக்கும் சோலாரிஸ் என்று அழைக்கப்பட்ட யூனிக்ஸ் இயங்குபொருளையும் பிரதானமாக வாழ்வாதாரமாகக்கொண்டு இருந்தது. இவற்றை விற்பதில் தடுமாற்றம் ஏற்பட்டபோது, பு

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

த்திசாலித்தனமான முடிவு ஒன்றை எடுத்தது. மென்பொருட்களை உருவாக்கும் நிரலாக்க மொழி ஒன்றை உருவாக்கினால், அதை மென்பொறியாளர்கள் பயன்படுத்தத் தொடங்குவார்கள்; அதிகம் பேர் பயன்படுத்திப் பிரபலமானால், நிறுவனங்கள் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கும். நிறுவனங்களில் எழுதப்படும் மென்பொருட்களை இயக்கப் பெருங்கணினிகள் தேவைப்படும்; அதை நாமே சப்ளை செய்யலாம் என்பது சன் நிறுவனத்தின் தொலை நோக்குத் திட்டம். சன் இப்படிக் கண்டறிந்த நிரலாக்க மொழி... ஜாவா!

ஆரம்பத்தில் சன்னின் இந்தத் திட்டம் வெற்றிகரமாகப் போய்க்கொண்டு இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் வாழ்வா, சாவா என்ற நிலைக்கு வந்ததும், நிறுவனம் திவாலாவதைத் தவிர்த்து ஆரக்கிளிடம் சரணாகதி அடைந்தது. ஜாவா நிரலாக்க மொழியை யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள சன் அனுமதித்தாலும், அந்த மொழியின் குறிப்பிட்ட சில இயக்குக் கூறுகளுக்கும் வழிமுறைகளுக்கும் காப்புரிமம் (Patent) பெற்று வைத்திருந்தது. ஆரக்கிள், சன்னை வாங்கியபோது, இந்தக் காப்புரிமங்களும் ஆரக்கிள் வசம் வந்துவிட்டன.

மீண்டும் சீன் கட்... பேக் டு கூகுள்.

ஐ-பாட், ஐ-போன் என ஐ.டி. உலகத்தையே அதகளம் செய்துவரும் ஆப்பிளைப் பார்த்துக் கலக்கத்தில் இருந்த கூகுள், அதற்குப் போட்டியாக என்ன செய்து பயனீட்டாளர்களைத் தங்களது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவைக்கலாம் என்பதை அலசிப் பார்த்ததில் ஒன்று தெளிவாகப் புரிந்தது. ஆப்பிளுக்கே சொந்தமான அலை இயங்குபொருள் இருப்பது அந்த நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமாக இருப்பதை கூகுள் உணர்ந்தது. அதோடு, கூகுள் மென்பொருள் தயாரிப்பதில் கொண்டிருந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, ஆப்பிளின் அலை இயங்குபொருளுக்குப் போட்டியாக ஆண்ட்ராயிடை வெளியிட்டது. இதை இலவசமாகக் கொடுக்க, அலைபேசி சாதனத் தயாரிப்பாளர்கள் ஆளாளுக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆண்ட்ராயிட் இயங்குபொருளாக இருந்தால், கூகுளின் ஜி-மெயில் போன்ற சேவைகளை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்பதால், ஒருவிதத்தில் கூகுளின் திட்டம் நன்றாக நிறைவேறிய படி இருக்கிறது என்று சொல்ல முடியும். (இப்படிப் பல்வேறு விதமான தயாரிப்பாளர்கள், ஆண்ட்ராயிடைத் தங்களுக்கு வசதியான விதத்தில் மாற்றிக்கொண்டதால் ஏற்பட்டு இருக்கும் சிக்கல்களும், ஆப்பிளை இந்த விளையாட்டில் வெல்ல முடியாமல், ஆப்பிளைப் போலவே அலைபேசி சாதனத் தயாரிப்பு செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மோட்டரோலாவை வாங்கிய தும் எந்த விதத்தில் கூகுளுக்குப் பயன் அளிக்கப்போகின்றன என்பது இன்னொரு வாரத்தில் விரிவாக அலச வேண்டிய விஷயம்).

ஆனால், ஆரக்கிள் இதை வேறு விதமாகப் பார்க்கிறது. தங்களிடம் இருக்கும் ஜாவா சார்பில் இருக்கும் காப்புரிமம் பெறப்பட்ட விஷயங்களை ஆண்ட்ராயிடில் தெரிந்தே பயன்படுத்தி இருக்கிறது கூகுள் என்கிறது ஆரக்கிள். 'இதெல்லாம் சும்மா பொய். வழக்கையே ரத்துசெய்யுங்கள் யுவர் ஆனர்' என்று வாதாடிய கூகுளின் வாதங்கள் சான்ஃபிரான்சிஸ்கோ வழக்கு மன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. கடந்த வாரம், 'கூகுள் தெரிந்தே ஆரக்கிள் காப்புரிமம் பெற்ற விஷயங்களைப் பயன்படுத்தி இருப்பதை நம்ப முடிகிறது' என்று நீதிமன்றம் சொல்ல, இந்த வழக்கு இப்போது அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கிறது. இந்தக் கட்டத்தில் கூகுளுக்கு எதிரான தீர்ப்பு வந்தால், அது மிகப் பெரிய தாக்கத்தை டெக் உலகில் ஏற்படுத்தும்.

எப்படி? பார்க்கலாம் அடுத்த வாரம்.

LOG OFF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு