Published:Updated:

தூரிகைதான் என் ஆயுதம்!

தூரிகைதான் என் ஆயுதம்!

##~##

மூக, அரசியல் பிரச்னைகளை பட்டென்று முகத்தில் அறையும் விதமாக விரிகிறது முகிலனின் ஓவியங்கள். சராசரி மனிதனின் இயலாமையை, கோபத்தை, இந்திய விவசாயிகளின் வேதனையை, சாதி தீண்டாமையை, மதவெறிகளின் கோரமுகத்தை அதன் குரூரத்தோடு நமக்குள் உறையவைக்கிறது இவருடைய சித்திரங்கள். ஒரு மாலை நேரத்தில் முகிலனை அவ ருடைய இல்லத்தில் சந்தித்தேன்...

 ''இந்தச் சமூகத்தின் மீது நான் வைக்கும் விமர்சனம்தான் என் ஓவியம். வெறும் ரசனை சார்ந்தது மட்டுமல்ல; எந்த ஒரு கலைப் படைப்புமே அதைச் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நம்புகிறேன். அதனால் சமூகம் என்னுடைய ஓவியங்களில் பிரதிபலிக்கிறது. அடிப்படையில் ஒவ்வொரு கலைஞனும், தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதிதானே? நானும் ஓவியங்களின் வழியாக ஒடுக்கப்படும் மக்களின் சார்பாகப் பேசுகிறேன். அவ்வளவுதான்!'' என்கிறார்.  

தூரிகைதான் என் ஆயுதம்!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகிலனின் ஓவியங்கள், பல்வேறு இடதுசாரி அரசியல் இதழ்களையும் வெளியீடுகளையும் அலங்கரிப்பது மட்டுமில்லாமல்; தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வீதி ஓவியமாகவும் வைக்கப்பட்டு இருக்கிறது. ''இந்த ஓவியங்கள், நான் சார்ந்த அரசியலின் கருத்துக்களை பிரதிபலித்தாலும், அவற்றை வெறும் பிரசாரம் என்று நீங்கள் ஒதுக்கிவிட முடியாது. ஓவிய நெறிகளில் அழகியலையும் நான் புறக்கணிக்கவில்லை. ஒரு விவசாயியின் வயிற்றில் இருந்து செந்நிறத் திரவமாகத் திரளும் கோக் பாட்டில், சிங்கள தேசிய சின்னமான சிங்கம் ஏந்தி இருக்கும் வாளில் குத்தப்பட்டு இருக்கும் ஈழத் தமிழர்களின் மண்டை ஓடு போன்ற சித்திரிப்புகளைக்கொண்ட ஓவியங்கள், பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சென்னை கவின்கலை கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போதே, தொடங்கிய அரசியல் ஆர்வமும் அதன் மூலம் கிடைத்த அனுபவங்களும்தான் என்னுடைய ஓவியங்களின் உள்ளடக்கத்தை மாற்றியது. இல்லையேல் நானும் மற்றவர்களைப் போல இயற்கை ஓவியங்கள் வரைந்துகொண்டு இருந்திருப்பேன். ஓவிய உள்ளடக்கத்தின் பார்வையை மாற்றியது கல்லூரிக் காலங்கள்தான். ஒரு கிராமத்தை ஓவியத்துக்குள் கொண்டுவருதல் என்பது மாட்டு வண்டி, தலையில் கலையம் சுமந்த பெண்கள், மருதாணி விரல்கள் என்பது மட்டுமல்ல; கிராமங்களின் சமூகப் பிரச்னைகளை சொல்வதும்கூட.  

சாதியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், இரட்டை குவளை முறையும், திண்ணியம் சம்பவங்களும் என்னை வெகுவாகப் பாதித்து உள்ளன. கிராமம் என்றால் எனக்கு அவைகள்தான் கண்ணுக்குத் தெரிகிறது. காடுகளும் மலைகளும் நதிகளும் ஓவியங்களுக்கு அழகுகூட்டுபவைதான். ஆனால், பாஸ்கோ ஆலைக்காக மலைகளை தாரைவார்ப்பதை, பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்காக நீர் நிலைகளைக் கையளிப்பதை என் ஓவியங்கள் வேறு கோணத்தில் பிரதிபலிக்கின்றன'' என்கிறார்.

தூரிகைதான் என் ஆயுதம்!

போபால் விஷவாயு படுகொலைகள், கோக் எதிர்ப்புப் போராட்டங்கள், பசுமை வேட்டை என்கிற பெயரில் மலைவாழ் மக்கள் மீது நடத்தப்படும் அரச அடக்குமுறைகள், ஈழப் போராட்டம், சமச்சீர் கல்வி, சாதிய ஒடுக்குமுறை போராட்டங்கள் என எல்லா களங்களிலும் இவருடைய ஓவியங்கள் இடம்பெற்று வருகின்றன.

''எனக்குக் கிடைத்த ஆயுதமாகத்தான் நான் தூரிகையைப் பார்க்கிறேன். வணிகரீதியாக இதுவரை என்னுடைய ஓவியங்களை விற்பனை செய்தது இல்லை. எவரும் வாங்கியதும் இல்லை. மலம் வாளி சுமக்கும் ஓவியத்தை எந்த வரவேற்பறையில் வைப்பீர்கள்? ஆனால், அதுதான்  என்னுடைய ஓவியங்களின் தனித் தன்மையாக இருக்கிறது. சில நேரங்களில் நான் எதை வரைய வேண்டும் என்பதைவிட, எதை வரையக்கூடாது என்பதில்தான் தெளிவாக இருக்கிறேன்.'' உறுதியாகச் சொல்கிறார் முகிலன்.

- நீரை மகேந்திரன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு