Published:Updated:

என் ஊர் : சேலம்

தலைக்கு மேல் தடதடத்த ரயில்!

##~##

தாஜ்நூர். 'வம்சம்’, 'எத்தன்’, 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ திரைப்படங்களின் இசை அமைப்பாளர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் நீண்டகாலம் பணிபுரிந்தவர், தன்னுடைய சொந்த ஊரான சேலம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

 ''நாங்க நாராயண நகர், ராமசாமி தெருவுல குடி இருந்தோம். வீட்டுல நான் கடைக் குட்டி. அதனால ரொம்பச் செல்லம். அப்பா என்னை சைக்கிளில் உட்காரவெச்சிக்கிட்டு சுத்தினப்பதான் சேலம் எனக்கு அறிமுகம். இங்க ஓடுற திருமணிமுத்தாறு என் சின்ன வயசுல சுத்தமாத்தான் இருந்துச்சு. இந்த ஆறு சேலத்தில் உற்பத்தி ஆகி, பரமத்தி வேலூர் பக்கத்துல இருக்கிற நஞ்சை இடையாறு கிராமத்தில் காவிரியுடன் சங்கமம் ஆகுது.

என் ஊர் : சேலம்

இதன் கரையோரம் சுகவனேஸ்வரர் கோயில், கரபுரநாதர் கோயில், விரட்டீஸ்வரர் கோயில், பீமேஸ்வரர் கோயில், திருவேணீஸ்வரர் கோயில்னு அஞ்சு சிவன் கோயில்கள் இருக்கு. 20 வருஷத் துக்கு முன்னாடி திருமணிமுத்தாறு தண்ணியைக்கொண்டுதான் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வாங்க. ஆனா, இந்த அருமையான ஆறு இன்னைக்கு, கிட்ட நெருங்க முடியாத அளவுக் குச் சாக்கடையா மாறிடுச்சு.

சேலம் நகரின் சிறப்பு, அதைச் சுற்றி இருக்கிற மலைகள். சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, வத்தல மலை, நாமகிரி மலை, குமரகிரி குன்று, கந்தகிரி குன்றுனு மலைகள் இயற்கை அரணாகச் சேலத்தைச் சுற்றி இருக்கு. நகரை ஒட்டியே ஏற்காடு மலை இருக்கு. ஏற்காடு வருஷம் முழுவதும் ரொம்பவும் குளிராம, ரொம்பவும் வெயில் அடிக்காம சுகமான தட்பவெப்ப நிலை நிலவுகிற ஏரியா.

சன்னியாசிகுண்டு பகுதியில் பீருல்ஹாதி பாபா தர்கா இருக்கு. எல்லா சமுதாயத்தினரும் இங்க வந்து வேண்டிக்கிட்டுப் போவாங்க. ரொம்ப அமைதியான இடம் அது. நான் மரவனேரியில் இருக்கிற பாரதி வித்யாலயா பள்ளியில் படிச்சேன். பள்ளிக்கூடம் போகிற வழியில் இருக்கிற டவுன் ரயில் நிலையத்தையும் அணைமேட்டையும் மறக்கவே முடியாது. பாலுமகேந்திரா சார் படத்துல காட்டுற ரயில் நிலையம் மாதிரி அந்த ரயில் நிலையம் மரங்கள் அடர்ந்து அவ்வளவு அழகாகவும் அமைதியாகவும் இருக்கும். இந்த ரயில் நிலையத்துக்குப் பக்கத்துல அணைமேடுனு ஒரு நீர்நிலை இருக்கு. இதை ஓட்டி தென்னந்தோப்பு, ஆலமரம், புளிய மரம்னு பரபரப்பான நகரத்துக்கு உள்ளே ஒரு காடு மாதிரி இருக்கும். இப்பவும் அந்தப் பகுதி பெருசா எந்த மாற்றமும் இல்லாம அழகாவே இருக்குது.

என் ஊர் : சேலம்

அதுக்குப் பக்கத்துல திருமணிமுத்தாறுக்கு மேல ரெண்டு தென்னை மர உசரத்துல ஒரு ரயில் பாலம் இருக்கும். ரெண்டு பக்கமும் எந்தக் கைப்பிடிமானமும் இல்லாம வெறும் தண்டவாளத்துக்கு நடுவுல இரும்புத் தகடு போட்டு இருப்பாங்க. அதுல நடந்து கடக்கிறது ரொம்ப த்ரில்லிங்கான விஷயம். நாங்க அதுல நடந்துபோய்ப் பாலத்துக்கு நடுவுல கீழ்நோக்கி இறங்குற படிக்கட்டுல இறங்கி உட்கார்ந்துக்குவோம். அப்ப தலைக்கு மேல ரயில் பயங்கர சத்தத்தோட தடதடத்துக் கடக்கும்போது கிடைக்கும் பயம் கலந்த பரவசம் இருக்கே... இப்ப நினைச்சாலும் உடம்பு புல்லரிக்குது. அந்தத் தண்டவாள பாலத்தை இப்ப விரிவாக்கம் செஞ்சுட்டாங்க.

என் ஊர் : சேலம்

அஸ்தம்பட்டியில் மாணிக்கம் மெஸ்னு ஒரு கடை இருக்கு. காலையில 8 மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி 11 மணி வரைக்கும் சுடச்சுட புரோட்டா கிடைக்கும். அந்தக் கடையோட ஸ்பெஷல், அங்க கொடுக்கிற திக்கான சால்னா. ரொம்பச் சுவையான அந்த சால்னாவுக்காகவே கடையில கூட்டம் வரிசை கட்டி நிக்கும்!

90-கள்ல இசைத் துறையில கம்ப்யூட்டர் செல்வாக்குச் செலுத்திய காலகட்டம். அப்ப ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட வேலைக்குச் சேர்ந்துட்டேன். அவர் என்னை சிங்கப்பூருக்குப் பயிற்சிக்காக அனுப்பினார். அதுக்குப் பிறகு அவர்கிட்ட 15 வருடங்கள் வேலை பார்த்தேன். அப்புறம்தான் தனியாகப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பிச்சு, சென்னையில் செட்டில் ஆகிட்டேன். ஆனாலும், ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு காரணத்தை வெச்சிக்கிட்டு என்னால சேலம் வராம இருக்க முடியாது!''

சந்திப்பு: வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு