Published:Updated:

காட்டை விட்டு பிரிய மாட்டேன்!

காட்டை விட்டு பிரிய மாட்டேன்!

##~##

'டிரைவர் அங்கிள், காரை நிறுத்துங்க...’ - அந்தக் குட்டிப் பாப்பா பதறியதும் கார் நின்றது. என்ன? ஏது? என்றுகூடச் சொல்லாமல் காரில் இருந்து இறங்கி ஓடிப்போய் ரோட்டில் அடிபட்டு ரத்தம் சொட்டிய நிலையில் கிடந்த ஒரு குட்டி நாயைத் தூக்கி வந்தாள் வஞ்சுளவள்ளி. கார் நேராக வஞ்சுளவள்ளியின் அப்பா நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றது. பதறிப்போன வஞ்சுளவள்ளியின் அப்பா, 'நாய்க்கு இங்க சிகிச்சை கொடுக்க முடியாது’ என்று சொல்லி, உதவியாளர் ஒருவருடன் நாயைக் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

 நாய், பூனை, குதிரை, பாம்பு என எந்த உயிரினம் அடிபட்டுக்கிடந்தாலும் வஞ்சுளவள்ளிக்குப் பொறுக்காது. அந்த வஞ்சுளவள்ளிதான் இந்த ஆண்டு இந்திய வனவியல் பணிக்கான ஐ.எஃப்.எஸ்.

காட்டை விட்டு பிரிய மாட்டேன்!

தேர்வில் தமிழக அளவில் மூன்றாம் இடத்தையும் இந்திய அளவில் 17-வது இடத்தையும் பிடித்து தேர்வு பெற்றுள்ளார்.

சேலம் சங்கர் நகரில் இருக்கும் அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அழைப்பு மணியை அழுத்தியதும் ஓடிவந்து உற்றுப் பார்த்தது, வாட்டசாட்டமான நாய் ஒன்று. ''பயப்படாம வாங்க. பீமா ஒண்ணும் செய்ய மாட்டான். ஆனா, கிளம்பும்போது மட்டும் உங்க கேமரா பையை அவன்கிட்ட திறந்து காட்டிட்டுப் போங்க. இல்லைனா விடவே மாட்டான்...'' என்று பீமாவுக்கு இன்ட்ரோ கொடுத்துவிட்டு பேசத் தொடங்கினார்.

''காடுகள், உயிரினங்கள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாம்புல இருந்து பல்லி வரைக்கும் சின்ன வயசுலயே பிடிச்சு செல்லம் கெஞ்சுவேனாம். எங்க அம்மா சொல்லி இருக்காங்க. பள்ளிக்கூடம் படிக்கிறப்ப என் வீட்டுல அஞ்சாறு நாய், ஏழெட்டுப் பூனை, வயசான குதிரை எல்லாம் இருக்கும். அவை எல்லாம் ரோட்டுல அடிபட்டு உயிருக்குப் போராடிக்கிட்டுக்கிடந்த ஜீவனுங்க. அதுங்களை கால்நடை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய் சிகிச்சைக்கொடுத்து, எங்க வீட்டுல கொஞ்ச நாள் பராமரிப்பேன். என்னோட வாழ்நாள் லட்சியம் காடுகளையும் கானுயிர்களையும் பாதுகாக்கணும்கிறதுதான். நான் ப்ளஸ் ஒன் படிக்கும்போது 'வைல்ட் சேவியர் கிளப்’ என்ற அமைப்பை உருவாக்கி, முதல் முறையாக விலங்குகளுக்கான கலை நிகழ்ச்சியை நடத்தினேன்.

என் அப்பா, அம்மாவுக்கு நான் டாக்டருக்குப் படிக்கணும்னு ஆசை. எனக்கு வனவியல் படிக்க ஆசை. அவங்ககிட்ட என்னோட ஆசையைப் பொறுமையா எடுத்துச் சொல்லி சம்மதிக்கவெச்சு, கோவையில் பி.எஸ்சி. வனவியல் படிக்கச் சேர்ந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் காடுகளைப் பற்றி நிறைய கத்துக்கிட்டேன். காட்டுக்கு உள்ளே ஆறு மாதம் தங்கி, பறவைகளின் ஓசையைவெச்சு அது என்ன பறவைனு கண்டுபிடிக்கிறது, காட்டில் ஒரு விலங்கு  நம்மைக் கடக்கும்போதோ அல்லது நம்மளைத் தாக்க வரும்போதோ எப்படித் தற்காத்துக்கிறது, காட்டில் உள்ள நீர் நிலைகளை எப்படிக் கடக்கிறது, செங்குத்தான மலை முகடுகளில் ஏறி, இறங்குறது, பாம்புகளைப் பிடிக்கிறதுனு நிறையக் கத்துக்கிட்டேன்.

காட்டை விட்டு பிரிய மாட்டேன்!

த்ரில்லிங் கலந்த சுகமான படிப்பு இது. எல்லோரும் வகுப்பு அறையில புத்தகத்தைவெச்சு படிச்சிக்கிட்டு இருந்தப்ப, நான் காட்டைப் படிச்சேன். நான் படிச்சேன்ங்கிறதைவிட காடு எனக்குக் கத்துக்கொடுத்ததுங்கிறதுதான் உண்மை. பி.எஸ்சி. முடிச்சதும் ஐ.எஃப்.எஸ். எழுதினேன். முதல் முயற்சியிலேயே பாஸ் பண்ணிட்டேன்ங்கிறது ரொம்பவும் மகிழ்ச்சியான விஷயம்.

காட்டை விட்டு பிரிய மாட்டேன்!

ஐ.எஃப்.எஸ். பாஸ் பண்ணிட்டாலும் மேட்டுப்பாளையத்தில் எம்.எஸ்சி. வன உயிரியல் பாதுகாப்புப் பற்றிய படிப்பை படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். வன உயிரினங்கள் பற்றி நிறைய ஆய்வுகளும் செய்யறேன். வன அதிகாரியாகப் பணியாற்றி எனக்கு சம்பாதிக்கணும்கிற ஆசை எல்லாம் இல்லை. எனக்குப் பிடிச்ச காடுகளோடேயே வேலை பார்த்து, காட்டைப் பாதுகாக்கக் கடவுள் எனக்குக் கொடுத்த வாய்ப்பு இது. இனி வாழ்நாள் முழுக்கக் காட்டைவிட்டு நான் பிரிய மாட்டேன்!'' - வஞ்சுளவள்ளியிடம் உற்சாகமாகவருகின்றன வார்த்தைகள்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு