Published:Updated:

வலையோசை : காலப்பறவை

வலையோசை : காலப்பறவை

வலையோசை : காலப்பறவை

னி, ஆடி மாதம் என்றாலே எங்கள் ஊரில் மழை கொட்டோ கொட்டெனக் கொட்டும். அந்த நாட்களில், விளையாடுவதற்குப் போக்கற்று ஏதேனும் ஒரு வீட்டுத் திண்ணையில் முடங்கிக் கிடப்போம். பொழுதே போகாத அந்தப் பால்ய நாட்கள் முழுவதும் எங்களைக் கட்டிப்போட்டது எங்கள் ஊர் கதைசொல்லிகளே.

வலையோசை : காலப்பறவை

மணி சித்தப்பா, ஜெயக்குமார் அண்ணன், ஜான் அண்ணன், சுந்தரம் அண்ணன், ஸ்டான்லி அண்ணன் என எங்கள் ஊரில் கதைசொல்லிகளுக்குப் பஞ்சமே இல்லை. அவர்கள் கதை சொல்லி முடிக்கும்போது, ஒரு புராணப் படத்தைப் பார்த்த திருப்தி உருவாகும். இரவு வழிமறிக்கும் யாக்கிகள், பழிவாங்கக் காத்து இருக்கும் சர்ப்பங்கள் போன்ற கதாபாத்திரங்களுடைய கதைகளை ஏறக்குறைய எல்லாக் கதைசொல்லிகளுமே சொல்லி இருப்பார்கள்.

சுந்தரம் அண்ணன் பெரும்பாலும் காட்டில் நடக்கும் கதைகளைச் சொல்வார். அதில் ஒன்று... காட்டில் ஒருவகை பறவை உண்டு. அந்தப் பறவை அந்தக் காட்டிலேயே உயரமான மரத்தில் வசிக்கும். காட்டில் அபூர்வமாகக் கிடைக்கும் ஒரு வேரைவைத்து கூடு தயாரிக்கும். அந்த வேரை எடுத்துக்கொண்டு பறந்து செல்லும்போது எந்த மிருகத்தையோ, மனிதனையோ கடந்து போனால் அந்த உயிர்களின் முதுகெலும்பு முறிந்து போகும். அந்த மரத்தில் இருந்து அந்த வேரின் நிழல் நம்மேல் படாமல் எடுத்துவந்து இரும்பின் மேல் தடவினால் தங்கமாகுமாம்.

அடுத்த ரெண்டு நாட்கள் கேட்கவே வேண்டாம், அந்தப் பறவையையும் வேரையும் கண்டுபிடிக்க மாட்டோமா... நிறைய மிட்டாய் வாங்கிச் சாப்பிடலாமே என ஏக்கத்தோடு அலைவோம். திகில் அடிக்கும் கதைகளைச் சொல்வதில் முதலிடம் மணி சித்தப்பாவுக்குத்தான். ஊரில் நமக்குத் தெரியாத ஒரு பெயரைச் சொல்லி அந்த நபர் பேய் அடித்துதான் இறந்தார் எனவும்... பேய் அடித்து முதுகில் ஐந்து விரல்களில் தடம் இருந்ததாகவும் சொல்வார்.

ஜான் அண்ணனும் இதே மாதிரி, ''12 மணிக்குப் பின்தான் பேய்கள் கல்லறையில் இருந்து எழுந்து உலாவும். பேய்களை நமது வெறும் கண்ணால் பார்க்க முடியாது. வீட்டு வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, நாய் போன்றவற்றால் அவைகளைப் பார்க்கமுடியும். நாய்கள் ஓலமிடுவது பேய்கள் நடமாட்டத்தைப் பார்த்துதான்!'' என்று சொல்வார். இந்தக் கதைகளைக் கேட்ட சில நாட்கள், இரவு தூக்கமே வராது. நாய்கள் குரைத்தாலே குலைநடுங்கும். இன்று நினைத்துப் பார்த்தாலும் என்னால் இதே அளவு லாகவத்துடன், நம்பும்படி அந்தக் கதைகளைச் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. அந்தப் பால்ய கதை நாட்களை நிரப்பிய அண்ணன்கள் பிழைப்புக்காகப் பல ஊர்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். ஊருக்குச் செல்லும்போது அபூர்வமாகத் தென்படும் அவர்கள், என்னைக் கண்டு சிநேகத்தோடு சிரித்து 'நல்லா இருக்கியா?'' என்று ஒரு சில கேள்விகள் கேட்டுவிட்டு நகர்ந்து போய்விடுகிறார்கள்.

அவர்கள் கடந்து போகும்போது எல்லாம் என்னுள் எழும் கேள்வி...

'எங்கே தொலைந்திருப்பார்கள் அவர்களுக்குள் இருந்த கதை சொல்லிகள்?'

கடல் மைந்தர்கள்!

வலையோசை : காலப்பறவை

ஆதி மனிதனின் கூட்டு வேட்டையை இன்றும் கடைப்பிடிப்பவர்கள் மீனவச் சமுதாய மக்கள். அவர்கள் செய்யும் மீன் பிடித் தொழிலாலேயே இன்றும் குழுவாக வாழும் மனப்பான்மை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக மதம் மாறியதில் இருந்து, ஏதேனும் போராட்டம் என்றால் அனைவரும் தம் தொழிலைவிட்டு ஒன்றுகூடுவதுவரை இன்றும் அது தொடர்கிறது. கல்வி கற்ற பிள்ளைகள் கடல் புறத்தில் இருந்து விலகி நகர்ப்புறத்தை நோக்கி நகர்வதும், அரசியல் சார்பில்லாத தலைவன் ஒருவன் உருவாகாமல் போனதும் மற்ற கிறிஸ்துவச் சமூகங்களை ஒப்பிடும்போது மிகப்பெரிய பின்னடைவை அவர்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.

ருடம் சரிவர ஞாபகம் இல்லை. ஆனால், எண்பதுகளின் பிற்பாதியில் தொலைக்காட்சி வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுக்கு அறிமுகமானது கிரிக்கெட். எங்களுக்கு கிரிக்கெட் குறித்து ஏதேனும் சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்வதும் சுனில் அண்ணன்தான். பௌலிங் போடும்போது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எதற்காகத் தங்கள் பேன்ட்டில் ஒரு வெள்ளைத் துணியை சொருகி வைத்திருக்கிறார்கள் என்ற எங்கள் கேள்விக்கு அவன் சொல்லும் பதில் ஏ ரகம்.

வலையோசை : காலப்பறவை

கிரிக்கெட்டின் பெரும்பாலான விதிமுறைகள் எங்களுக்குப் பரிச்சயமே கிடையாது. எங்களுக்குகென சில 'சிறப்பு விதிகளை’ உருவாக்கிக்கொண்டோம். இன்றும் அபத்தமான அவ்விதிகள் சிரிப்பூட்டுபவை.

ஒருநாள் விளையாடிக்கொண்டு இருக்கிறோம். வெற்றிபெற எங்களில் ஓரணிக்கு 12 ரன்கள் தேவை. ஜோஸ் அண்ணன் அடித்துவிட்ட பந்து, நல்லாம்பி பெரியப்பாவின் மாட்டுத் தொழுவம் அருகே இருந்த சாணத் தொட்டியில் விழுந்துவிட்டது. பந்தை எடுக்கும் முன் 12 ரன்களையும் ஓடியே எடுத்துவிட்டார்கள். இன்னொரு நாள்... கடைசி விக்கெட் வெற்றிபெற 20 ரன் எடுக்க வேண்டும். ஜான் அண்ணன் அடித்த பந்து, பக்கத்தில் இருந்த தென்னை மரத்தின் மட்டையில் சிக்கிக்கொண்டது. ஜோன்ஸ் உடனடியாக மரத்தில் ஏறி பந்தைத் தட்டிவிட்டு கீழே நின்றிருந்த லாரன்சை கேட்ச் பிடிக்கச் செய்தான். துரதிருஷ்டவசமாக ஜான் அண்ணன் அண்ட் கோவால் 15 ரன்களே எடுக்க முடிந்தது. 'இது கேட்ச் கிடையாது’ என ஒரு சாரார் வாதிட, 'கேட்ச்’ என மற்றொரு சாரார் மல்லுக்கட்ட, தகராறு முற்றி அடுத்த ஆட்டத்தில் இருந்து அந்தச் சிறப்பு விதிமுறை மாற்றப்பட்டது.

ஒருநாள் விளையாடிக்கொண்டு இருக்கிறோம். ஒரு அணிக்குக் கடைசி ஓவரில் வெற்றி பெற 32 ரன்கள் தேவை. மூன்றாம் பந்தை வீசிகொண்டு இருந்த ராஜா, ஆவேசமாகக் கையில் கம்புடன்(குச்சி) ஓடி வந்த அவன் தகப்பனாரைக் கண்டதும் பந்தைப் போட்டுவிட்டு ஓடியே போய்விட்டான். எங்களூர் சிறப்பு விதிமுறையின்படி வேறு யாரும் மிச்சம் பந்துகளை வீசக்கூடாது. ரன் எடுக்க வேண்டிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு