Published:Updated:

கடல் தெரியும் மேடு...

விவேகானந்தர் வணங்கிய விநாயகர்!

கடல் தெரியும் மேடு...

''அம்மா கையைப் பிடிச்சிக்கிட்டு ஊருக்கு மேற்கே மேட்டுல ஏறி நடந்து போகும்போது மல்லாங்கொட்டை, கிழங்குனு அங்க இருக்கிற கொல்லையில பறிச்சித் தின்னுக்கிட்டே சவுக்குத்தோப்பின் ஒத்தவழிப் பாதையில ஆரோவில்லுக்குப் போயிடுவோம். கிழக்கே கீழே இறங்கி பச்சைப்பசேல்னு இருக்கிற வயல்காட்டு வரப்புல நடந்து டவுனுக்குப் போவோம். லீவுல வயல்காட்டுல நண்டு பிடிக்கப் போனா எக்கச்சக்கமாக் கிடைக்கும். முந்திரிக் காடுகளுக்குப் போய் முந்திரி பறிச்சுத் தின்போம். மல்லாட்டை உடைச்சுக்கொடுப்போம். அதெல்லாம் சின்ன வயசு கனவாப்போச்சு; இப்ப காணாமயும் போச்சு'' என்றபடி பாக்கமுடையான் பட்டு பற்றிப் பேசத் தொடங்கினார் புகைப்படக் கலைஞரும் கவிஞருமான புதுவை இளவேனில்.

கடல் தெரியும் மேடு...
##~##

'பாக்கமுடையான்பட்டு’ - ஊர்பெயருக்கான காரணத்தைக் கேட்டதும், ''ஆமாங்க, நானும் தெரிஞ்சிக்கணும்'' என்றபடி தன் தமிழாசிரியர் திருமாவளவனிடம் அலைபேசியில் தொடர்புகொண்டு, ''ஆமாம் ஐயா, சொல்லுங்க ஐயா, சரி ஐயா'' என்றவர் நம்மிடம் திரும்பினார்.

'' 'பாக’ என்றால் பார்வதிதேவியைக் குறிப்பதாகவும் பார்வதி தேவியைப் பாகமாகக்கொண்ட சிவபெருமான் பெயரிலான ஊராகவும், 'நத்தமுடையார்’ எனும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வாழ்ந்த ஊராகவும் இது வழிவழியாகச் சொல்லப்பட்டுவருகிறது. நான் படிச்ச நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளிதான் கவிதை எழுதுவது உள்பட என்  பல திறமைகளை வளர்த்தது'' என்றவர் ஏர்போர்ட் பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார்.

''இந்த மேட்டில் இருந்து பார்த்தால் புதுவை கடல் தெரியும். ஆனால், இப்போ கட்டடங்கள் பெருகியதால் அந்த அழகியல் காட்சியைக் காணமுடியாது. இதன் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு வந்து விவேகானந்தர் விநாயகரை  வணங்கிச் சென்றதாகக் கூறுவார்கள். சிறிய கோயிலாக இருந்தபோது அதற்கு ஒத்தையடிப் பாதைதான் இருந்தது. இப்போது கோயிலுக்கு வசதிகள் நிறைந்து 'செல்வ விநாயகர்’ ஆகிவிட்டார்.

நான்கு குளங்கள், ஆறு ஊருணிகள் எங்கள் ஊரைச் சுற்றி இருந்தன. நீர்வளத்துக்கும் பசுமைக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. வயற்காட்டை நம்பி குடியானவர்கள் சமூகமும் வாழ்ந்துவந்தார்கள். இப்போது குளங்களும் ஊருணிகளும் கட்டடங்களாக மாறிவிட்டன.

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில், வீடுகளில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டினாலும் அபராதம் விதித்ததாக என் தாத்தா சொல்லி இருக்கிறார். ஆனால், இன்று இயற்கையை மனிதர்கள் ஒருபுறம் அழிக்க, 'தானே’ அழித்ததில் புதுச்சேரியில் மட்டும் ஒன்றேகால் லட்சம் மரங்கள் அழிந்துவிட்டன.

கடல் தெரியும் மேடு...

எங்களின் பேச்சுவழக்கத்தில் இருந்த  மிசே (சார்), சப்பாத்து (செருப்பு), ஒபித்தல்( மருத்துவமனை) பொஸியம் (டானிக்) என்று பிரெஞ்சு வார்த்தைகள் இன்று மெள்ள வெளியேறிவிட்டன. ரிக்ஷாக்கள் இன்னும் இருந்தாலும் பிரெஞ்சுப் பேசும் ரிக்ஷாக்காரர்கள் குறைந்துவிட்டார்கள்.

'பாக்குமுடையான்பட்டு என்னும் கிராமம் இன்று நகரமாகி இருக்கிறது. 'இந்த நகரமயமாக்கல் வளர்ச்சி அல்ல’ என்னும் எச்சரிக்கை எப்போதும் என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது!''

கடல் தெரியும் மேடு...

சந்திப்பு: மு.செய்யது முகம்மது ஆசாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு