ஓவியம் 110
##~##
''கலாசார நகரமான புதுச்சேரியில் அதன் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும், மக்களுக்கும், வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கும் உணர்த்தும் விதமாக, 110 ஓவியர்களுடன் ஓவிய முகாம் ஒன்றை புதுச்சேரி ஓவிய நுண்கலைக் குழு நடத்துகிறது'' என்று நமக்குத் தகவல் தெரிவித்திருந்தார் புதுவை ஓவியர் சின்னச்சாமி. அங்கே சென்றால் 80 வருடங்களுக்கு முன்பிருந்த புதுச்சேரியை அப்படியே தத்ரூபமாக வரைந்து கண் முன் நிறுத்தியிருந்தார்கள் ஓவியர்கள். 
ஓவியம் 110

வழக்கமாக நடக்கும் ஓவியக் கண்காட்சி போல இல்லாமல் சற்று வித்தியாசமாக, தொழில்முறை ஓவியர்களையும் பாரதியார் பல்கலைக் கூடத்தின் மாணவர்களையும் இணைத்து பாரம்பரியக் கட்டடங்களையும் கலாசார ஓவியங்களையும் அந்த இடத்திலேயே வரைந்து காட்சிக்கும் விற்பனைக் கும் வைத்திருந்தனர். புதுச்சேரி ஓவியர்களை மையமாகவைத்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர்களும் இதில் கலந்துகொண்டனர்.

'வழக்கமாக இதைப் போன்று நடக்கும் முகாம்களில் 10-க்கு உட்பட்ட ஓவியர்களின் ஓவியங்கள் மட்டுமேஇடம் பெறும். ஆனால் இங்கு சீனியர், ஜூனியர் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் பலதரப்பட்ட ஓவியர்களும் கலந்துகொண்டனர். இதன் மூலம் ஓவியர்கள் ஒவ்வொருவரும் அவர் களுக்குள் கலந்துரையாடி தொழில்நுட்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். இப்படியான முகாம்களின் மூலம் மக்கள் கலையை மக்களிடத்தில் நேரடியாகச் சென்று சேர்க்கும் இந்த முயற்சி, வரவேற்கத்தக்கது'' என்றார் பிரபல ஓவியர் விஸ்வம்.

இந்த ஓவியங்களில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான இடங்கள் முகாம் நடைபெற்றுக்கொண்டு இருந்த கடற்கரைச் சாலையிலேயே அமைந்து இருந்ததால், பொதுமக்கள் தற்போதைய இடத்தை நேரிலும் பழைய இடங்களை ஓவியங் களிலும் பிரமிப்புடன் பார்த்து ரசித்தனர். கைவினைக் கலைஞர்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக் களைக் கண்காட்சியாக வைத்து இருந் தனர்.

சென்னையில் இருந்து வந்திருந்த சினிமா ஆர்ட் டைரக்டரும் ஓவியருமான ஜே.கே., ''மேலை நாடுகளில் நடக்கும் இதைப்போன்ற ஓவியக் கண்காட்சிகளை ஆர்வமுடன் நுழைவுக் கட்டணம் செலுத்திப் பார்ப்பார்கள். அப்படியான ஆர்வமும் விழிப்பு உணர்வு நமக்கும் வரவேண்டும்'' என்றார்.

''டிஜிட்டல் புரட்சி வந்த பிறகு பெரும்பாலான ஓவியர்கள் பொருளாதாரரீதியாகக் கடுமையான பாதிப்பில் இருந்தனர். இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் மூலம் அவர்கள் தங்கள் படைப்புகளை விற்பனை செய்யவும், புதிய வாய்ப்புகளைப் பெறவும் முடியும்.

ஓவியம் 110

'தானே’ புயலுக்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவது கணிசமாகக் குறைந்து இருக்கிறது. எந்தப் புயல் வந்தாலும் எங்கள் புதுச்சேரியின் அழகும் கலையும் கலையாது என்பதை அவர்களுக்கு உணர்த்தி, அவர்களைக் கவர்வதும் இந்த முகாமின் நோக்கம்'' என்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நுண்கலைக் குழு காப்பாளருமான ஓவியர் மாலதி!

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு