Published:Updated:

என் ஊர் : பரப்பாடி

பாநல் ஆடி முதல் பரப்பாடி வரை!

##~##

ழுத்தாளர் மதுரா, தன் சொந்த ஊர் ஆன பரப்பாடி கிராமம் பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''திருநெல்வேலிச் சீமையில் தெற்குக் கரையோரமாக ஒதுங்கிக்கிடக்கிற அழகு சுமந்த கிராமம்தான் பரப்பாடி. மேற்கு எல்லையில் தூக்கணாங் குருவிக் கூடுகள் ஊஞ்சலாடும். பச்சைப்பசேல் ஓலை சுமந்த பனைமரங்கள் கரையோரம் காவல் நிற்கும். தண்ணீர்த் ததும்பிச் சிரிக்கும் பரப்பாடிகுளம். வடகிழக்குப் பருவக் காற்று தென்றலாக வருடும். நெல்லும் புல்லும் சுமந்த வயல்வெளியில் தண்ணீர் நிரம்பிய கிணறுகள், கவி பாடும் குயில்களைத் தாங்கிய பூவரசு மரங்கள், கொக்குகள் காத்து நிற்க.... கெளிற்று மீன்கள்  துள்ளி விளையாடும் இலங்குளம், தென்கரை எல்லையாக வளைந்து நெளிந்து தெளிந்த நீரோடையாக ஓடும் விஜயங் கால்வாய் தண்ணீர்.. இப்படி அழகு வளையத்துக்குள் இருக்கும் என் ஊரின் மத்தியில் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்கும் தேவாலயம்.

என் ஊர் : பரப்பாடி

'பரப்பாடி’ - இந்த ஐந்தெழுத்துக்குப் பின்னால் வரலாறு ஒளிந்திருக்கிறது. அன்று - பிற்காலப் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் பரப்பாடி, வீடுகள் எதுவும் இன்றி காடாகக் காட்சி அளித்தது. குலசேகரப் பாண்டியனின் வள்ளியூர் கோட்டையில் இருந்து அரசப் பிரதிநிதிகள் நம்பி ஆற்றங்கரையில் இருக்கும் சித்தூர் வழியே பரப்பாடி வந்து கிழக்குக் கடற்கரையில் இருக்கும் காயல் துறைமுகப் பட்டணத்துக்குச் சென்றிருக்கிறார்கள். காயல் துறைமுகம் செல்லும் வழிப்பாதையில் பரப்பாடி கிராமம் அமைந்து இருந்ததால் குறுநில மன்னர்கள், அரசப் பிரதிநிதிகள் ஓய்வெடுக்கும் தலமாக, தங்கும் படை வீடுகளாக அந்தப் பகுதி அமைந்து உள்ளது. மேலும் ஓய்வு எடுப்பவர்கள் பொழுது போக்குக்காக, 'பாநல்’ ஆடுவதை  வழக்கமாகவைத்துள்ளனர். பாநல் என்றால், சோழிகள். அதனால் இந்தக் கிராமம் 'பாநல் ஆடி’ என்று அழைக்கப்பட்டுப் பின் 'பரப்பாடி’ என்று உருமாறிற்று.

நெல்லும் கடலையும் பருத்தியும் விளைகிற பூமியில் வேப்பம் பழமும், கொடுக்காப் புளியும்தான் எனக்கும் என் தோழர்களுக்கும் இனிப்புப் பண்டம். பச்சரிசி மாங்காயைக் கல்லால் அடித்து, உலுக்கிப் பறித்த புளியங்காய்களை உப்பு தொட்டுக் கடித்து, காய்த்துக் கிடக்கும் முண்டங்கண்ணிப் பயிரைப் பிடுங்கி அறுத்து... கொட்டாரம் சம்பா நெல்மணிகளை உருவிக் கொரித்து, கொடுக்காப் புளியைக் கொத்தோடு அறுத்து.... இப்படியாக வயிறை நிரப்பிய நண்பர்கள் கூட்டத்தின் கொண்டாட்டங்கள் என இவையாவும் பத்திரமாக ஞாபகப் பெட்டியில் இருக்கிறது.

என் ஊர் : பரப்பாடி

கிராமத்துச் சிறுவர்களுக்குத் தேவாலய மைதானம் ரொம்பப் பிடிக்கும். பம்பரம், கோலி, கிளியான் தட்டு, கண்ணாமூச்சி, சடுகுடு எல்லாம் வேதக் கோயில் வளாகத்துக்குள்தான். மன அமைதி தேடி ஐந்து நிமிடம் கோயில் வளாக மணல் குவியலில் அமர்ந்தால், மீண்டும் மனது உற்சாகமாகிவிடும். எங்கள் வீட்டுக்கு முன் கோயில் பிச்சை நாடார் 'ஜக்கடா’ வண்டி நிற்கும், ஒற்றைக்கால் ஊன்றி அதில்தான் சாயங்கால நேரங்களில் நானும் என் நண்பர்களும் அமர்ந்து இருப்போம் தெருவைக் கவனித்தபடி. அப்போது நல்ல தண்ணீர் கிணறு இருந்தது... இன்றும் இருக்கிறது. ஊருக்கே குடி நீர் வழங்க இந்த ஒரு கிணறுதான் இருந்தது. மூன்றரை அடி அகலமும் இரண்டே முக்கால் அடி நீளமும் கற்கள் பதிக்கப்பட்டு இருக்கும்.

என் ஊர் : பரப்பாடி

தண்ணீர் எடுக்கவருவதில் தாவணிப் பெண்களே அதிகம். கிணற்றுக்குள் தண்ணீர் அலைமோதும். தொவ்வளத்தில் (கிணற்று கைப்பிடிச் சுவர்) தாவணிகள் அலைமோதும். இந்தத் தாவணிகள் மீது வாலிபர்களின் கண்களும் அலைமோதும். இப்படி கிராமத்துக் காதலையும் கண்டிருக்கிறேன். அதெல்லாம் நெஞ்சில் காதலையும் தோளில் கரும்பு வில்லையும் சுமந்து திரிந்த காலம்.

திராவிட மணியுடனும், தீப்பொறி ஆறுமுகத்துடனும் என் ஊரில் நான் ஏறிய மேடைதான் இன்று என்னை வைகோவுடன் கைகோக்கவைத்து இருக்கிறது. நான் பார்த்த  அம்மன் கோயில் வில்லிசைப் பாடல்களும், பாவைக் கூத்து நாடகங்களும் தான் என்னை முதல் முதலாகக் கதை எழுதத் தூண்டியது. நான் படித்த டி.டி.டி.ஏ. தூய யோவான் நடுநிலைப் பள்ளிதான் என்னை நாடகம் எழுதவைத்தது. பரப்பாடி அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்தபோது, 14-வது வயதில் மகமணி ஆசிரியரின் உற்சாகத் தால் 'பொன்மலர்’ என்ற கையெழுத்துப் பிரதி யைக் கொண்டுவந்தேன்.  

என் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பார்த்த ஊர், இந்த ஊர். ஓர் ஓரமாக இருந்தவனை அடையாளம் காட்டிய ஊர். இந்த ஊரைவிட்டு நான் எங்கு செல்வேன்!

ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி. இந்த மதுராவுக்கு பரப்பாடியே அயோத்தி!''

-இ.கார்த்திகேயன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு