Published:Updated:

காரல்மார்க்ஸ்தான் ஹீரோ!

காரல்மார்க்ஸ்தான் ஹீரோ!

##~##

''நின்னு நிதானமா யோசிச்சு ஒரு வேலையைச் செஞ்சாக் கல்லைக்கூட சிற்பமாக்கலாம், ஊர் வணங்கும் தெய்வமாக்கலாம். ஒரு வேலையைத் தொடங்குறதுக்கு முன்னாடி அதைப் பற்றிய தெளிவான திட்டத்தை மனசுக்குள் போட்டுவெச்சுக்கிட்டுதான் தொடங்கணும். திட்டம் தெளிவானதும் வேலை சுளுவா முடிஞ்சுடும். இந்தக் கொள்கையைத்தான் நான் சினிமாவுக்கும் பயன்படுத்துறேன். இதுவரைக்கும் நான் எடுத்த 17 படங்களோட வெற்றிக்கு அதுதான் காரணம்'' என்கிறார் இயக்குநர் வி. சேகர்.

 'ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்; பொண்டாட்டி சொன்னாக் கேட்டுக்கணும்’, 'விரலுக்கேத்த வீக்கம்’ மாதிரியான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படங்களைக் கொடுத்த சேகர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'சரவண பொய்கை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது படப்பிடிப்பு.

காரல்மார்க்ஸ்தான் ஹீரோ!

இதைப் பற்றிப் பேசிய இயக்குநர், ''எனக்கு லேடீஸ் சென்டிமென்ட்தான் வரும்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா, அதையும் தாண்டி இப்ப உள்ள யூத் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி என்னால படம் எடுக்க முடியும்கிறதை 'சரவண பொய்கை’ பார்த்துத் தெரிஞ்சுக்குவீங்க. எம்.ஜி.ஆர். எப்படி சரித்திரப் படங்களாக்கொடுத்து திடீர்னு 'எங்க வீட்டு பிள்ளை’ மாதிரி கலர்ஃபுல் படங்களைக்கொடுத்தாரோ, அதேமாதிரிதான் நானும். என்னோட ஐடியாக்களை இப்ப உள்ள டிரெண்டுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டேன்.

காரல்மார்க்ஸ்தான் ஹீரோ!

17 படங்கள் கொடுத்துட்டு, கொஞ்ச நாள் சீரியல் பக்கம் ஒதுங்கி இருந்தேன். அங்கேயும் சம்பாதிச்சேன். இருந்தாலும் சீரியல்கள் நிறைய பெருகிப் போச்சு. அதனால திரும்ப சினிமாவுக்கே வந்துட்டேன். நான் எந்தப் படத்தை இயக்கினாலும் பழநியில தங்கி, கதை ரெடி பண்ணிட்டுப்போவேன். அந்த அளவுக்குப் பழநி எனக்கு அதிர்ஷ்டமான ஊர். இந்தப் படத்தை நாலு வருஷமா மனசுக்குள்ள அசை போட்டு, அசை போட்டு மெருகேத்தியிருக்கேன். பழநி அடிவாரத்துல இருக்கிற 'சரவண பொய்கை’யில வாழ்கிற ரெண்டு நண்பர்களைப் பற்றிய கதை இது. காதல், காமெடினு கலந்துகட்டி அடிக்கப் போறேன். வழக்கமா என் படத்துல காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அது இந்தப் படத்திலும் இருக்கு. விவேக், கருணாஸ், எம்.எஸ். பாஸ்கர், ஆர்த்தினு காமெடி ஆர்டிஸ்ட் நிறையப் பேர் நடிக்கிறாங்க.

காரல்மார்க்ஸ்னு ஒரு புதுமுகத்தை ஹீரோவா அறிமுகப்படுத்துறேன். 'போடிநாயக்கனூர் கணேசன்’ படத்துல நடிச்ச அருந்ததி ஹீரோயின். அந்தக் காலத்துல ஒவ்வொரு கம்பெனியும் கதை இலாகானு ஒண்ணு வெச்சிருந்தாங்க. இப்ப அதெல்லாம் இல்லை. நேரடியா ஸ்பாட்டுக்குப் போய் வசனம் எழுதுறாங்க. இன்னிக்கு பெரும்பாலான படங்கள் தோல்வி அடையறதுக்கு அதுதான் முக்கியக் காரணம். டிக்கெட் விலை ஏறிப்போய்க்கிடக்கிற நிலையில, படம் நல்லாயில்லைனா காசுகொடுத்து டிக்கெட் வாங்கினவன் மண்ணை வாரித் தூத்திட்டுப் போயிடுவான். அதனால தான் நான் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்'' என்றவரிடம் ''ஹீரோவை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?'' என்றோம். ''என்னைப் பார்த்தீங்கள்ல.. என் மகன் என்னை மாதிரிதானே இருப்பான்!'' என்றார் சிரித்துக்கொண்டே.

வர்றாரப்பா வாரிசு!

- ஆர்.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு