Published:Updated:

யாரா இருந்தாலும் வெளக்குமாறால அடிப்போம்!

யாரா இருந்தாலும் வெளக்குமாறால அடிப்போம்!

##~##

'விநோதங்கள் நிறைந்தது இந்த உலகம்!’ என்பதை நிரூபிப்பது போலத்தான் இருந்தது அந்தச் சம்பவம். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவப் பட்டியில் நடக்கும் ஊர்த் திருவிழாவில் விளக்கமாறுகொண்டு ஊர் மக்கள் தங்களுக்குள் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் அடித்துக்கொண்டால்கூடப் பரவாயில்லை, வேடிக்கை பார்ப்பவர்கள், அந்தக் கிராமத்துக்குப் புதிதாக வருபவர்கள் என யாராக இருந்தாலும் விளக்கமாறு பூஜை கிடைக்கிறது.

 அடி என்றால் சாதாரண அடி கிடையாது. சகதியில் முக்கி துரத்தித் துரத்தி வெறிகொண்டு அடிக்கிறார்கள். நாலு அடி கொடுத்த பிறகே நம்மிடம் பேசவே ஆரம்பித்தார்கள்.

யாரா இருந்தாலும் வெளக்குமாறால அடிப்போம்!

ஊர்ப் பெரியவரான பெருமாள், ''முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் தீச் சட்டி, மா விளக்கு, முளைப்பாரி மாதிரி இதுவும் ஒரு வேண்டுதல்தான். ஆரம்பகாலம் தொட்டே விளக்கமாறில் அடிக்கும் விளையாட்டு நடந்துக்கிட்டு இருக்கு. மாமன் - மச்சான் உறவுமுறை நீடித்து நிலைச்சு நிற்கவும், செழிச்சு சீரா இருக்கவும் பழைய வெளக்கமாறைவெச்சு அடிச்சுக்குவோம். இதுக்கு என்ன அர்த்தம்னா 'எல்லோரும் ஒண்ணுதான்.. பெரிய ஆளு, சின்ன ஆளுனு பாகுபாடு கிடையாது’ங்கிறதுதான். அடிக்கும்போது,  'அடியே மாப்ள நீ எம் பொண்ணைக் கட்டிக்கிட்டாலும், உன்னை நான் வெளக்கமாத்தால அடிப்பேன் மாப்ள. அந்த உரிமை எனக்கு உண்டு!’னு சொல்வாங்க'' என்கிறார்.

யாரா இருந்தாலும் வெளக்குமாறால அடிப்போம்!

அழகு மலை என்ற ஊர் முக்கியஸ்தரோ ''சேத்தாளி வேஷம் போட்டுக்கிட்டுக் கோயிலுக்கு வர்றப்ப, ஊர் மந்தையில கூட்டம் அதிகமா இருக்கும். அப்போ கூட்டத்தைச் சமாளிக்க முடியாது. ஆத்தாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தத் 'தள்ளிப்போ... தள்ளிப்போ’னு கூட்டத்தைக் கட்டுப்படுத்த வெளக்கமாறால் அடிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. பின்னாடி அதுவே தனித் திருவிழாவா மாறிடுச்சு!'' என்றவர், ''எங்களுக்குத் தெரிஞ்சு மாமன் - மச்சான் ரெண்டுபேருக்குள்ளயும் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் இருக்க, விளக்கமாத்துல அடிப்பது உண்டு!'' என்கிறார் சின்னத்துரை என்பவரோ ''வெளியூரில் இருந்து பொண்ணு கட்டிக்கிட்டு, சாமி கும்பிட ஊருக்கு வரும் வெளியூர் 'மாப்பிள்ளை’களும் இதுல விரும்பி கலந்துப்பாங்க. வெளக்கமாத்துல அடிக்காம விட்டா அது சாமிக் குத்தம் ஆயிடும். துடிப்பான சாமி இது.

யாரா இருந்தாலும் வெளக்குமாறால அடிப்போம்!

மூணுநாள் திருவிழாவில், 12 மணி நேரம் மட்டும்தான் சாமி கோயிலுக்குள்ள இருக்கும். அன்னைக்கே சாமியை எடுத்துட்டுப் போய் கரைச்சிருவோம். மஞ்சள் நீராட்டு மாதிரி முகத்தில் சாம்பல் அடிக்கிறதும் இங்கே  ஃபேமஸ். ஊருக்குள்ள சாமி கும்பிடுறப்ப, யார் வந்தாலும் அவங்களும் நம்ம ஊர்தான்னு  நினைச்சு முகத்துல சாம்பல் பூசுவோம். விளக்குமாறால அடிப்போம். திருவிழா சமயத்துல எந்த வி.ஐ.பி. வந்தாலும், விளக்குமாறு அடி வாங்கிட்டுத்தான் போவாங்க. இதுவரைக்கும் யாரும் கோவிச்சுக்கிட்டது இல்லை.

ஊர் சிறிசுனாலும் திருவிழாவைச் சிறப்பாக் கொண்டாடுவோம். அதனால வீட்டுக்கு 1,300 ரூபாய் வரி போட்டு ஏழு லட்ச ரூபாய் கலெக்ஷன் பண்ணினோம். திருவிழாவுக்கு மைக் செட் ரொம்ப முக்கியம். அதனால மதுரையில பெரிய மைக் செட் பார்ட்டியைத் தேடிப் பிடிச்சு  கூட்டிட்டு வருவோம். சாமி கும்பிட 'சவனம்’ குறி கேட்டு தேதி அறிவிச்சதும் லேசா மழை பெய்யும். கோயிலைக் கும்பிட்டு, சாமிய தூக்கினதும் மழை பெய்யும். இதெல்லாம்  எங்க ஊர் ஸ்பெஷல்!'' என்றார் பயபக்தியோடு!

-சண்.சரவணக்குமார்
படங்கள்: சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு