Published:Updated:

உணவும் தமிழ்... உணர்வும் தமிழ்!

எம் இனிய மணமக்களே!

''எம் தீவிரப் பற்றுதலுக்கும்... எம் தீராத அன்புக்கும்... உரிய 'நேயமுறு நெஞ்சங்களுக்கு’...

உணவும் தமிழ்... உணர்வும் தமிழ்!
##~##

யாம் மண் கீறி விளையாடிய நிலத்தில், தோட்டத்து மர நிழலில், தென்னை இளங்கீற்றில் பந்தலிட்டு, உங்கள் வருகைக்காகவும் வாழ்த்துக்காகவும் காத்திருக்கிறேன்...''- இப்படி ஒரு வேண்டுகோளோடு வந்த திருமண அழைப்பிதழ் என் கவனம் ஈர்த்தது. கவிஞரும் 'மழை மண் மரம் மானுடம்’ அமைப்பின் நிறுவனருமான ரமேசு கருப்பையாவின் திருமண நிகழ்வுதான் அது!

கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள தொழுதூரில் மே 6 அன்று, தமிழ் முறைப்படி முற்றிலும் வித்தியாசமாக நடந்தது ரமேசு கருப்பையா- செங்கொடியின் திருமணம்.

மணமகன் ரமேசு கருப்பையாவின் வீட்டுக்கு அருகில் இருக்கும் தோட்டத்தின் பெயரே 'தமிழ்க்காடு!’ மா, இலுப்பை, தென்னை மற்றும் வாழைகள் சூழ்ந்த அந்தத் தமிழ்க் காட்டுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் மிகப் பெரிய பந்தல் போடப்பட்டு இருந்தது. மாவிலைத் தோரணங்களாலும் தென்னங்கீற்றுகளாலும் பந்தலை அழகாக அலங்கரித்து இருந்தனர். மூவேந்தர்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டு இருந்தன. அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. காலைச் சிற்றுண்டியாகத் தேனும் திணையும் கலந்த மாவு உருண்டையும், முக்கனிகளான மா, பலா, வாழையும் வரகு அரிசியில் செய்த பொங்கல், இட்லியுமாகத் தமிழ் உணவு மணத்தது. பதநீர், இளநீர், நுங்கு, மூலிகைக் குளிர் நீர், நீராகாரம், கேப்பைக்கூழ், கம்மங் கூழ் என எல்லாமும் இயற்கைக் குளிர்பானங்கள்தான்.  

''எனக்குச் சின்ன வயசுல இருந்தே பெரியாரின் கொள்கைகள் மீது பிடிப்பு  ஏற்படக் காரணம் என்னுடைய பெற்றோர்தான். என் அப்பா கருப்பையா மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். என் அம்மா செல்லத்தை அந்தக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டவர். அவர்களுடைய திருமணத்தைப் பெரியார் பெருந்தொண்டர் தோழர் வே.ஆனைமுத்து 42 ஆண்டுகளுக்கு முன் தலைமை தாங்கி நடத்திவைத்தார். அரிய நிகழ்வாக என் திருமணத்தையும் இப்போது அவர் நடத்திவைத்து இருக்கிறார். தென்மொழி பத்திரிகையின் ஆசிரியரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் துணைவியாருமான தாமரை பெருஞ்சித்திரனார் தன் குடும்பம் சூழ முன்னிலை வகித்து எங்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

திருமண விழாவில் 'நெகிழி’ எனப்படும் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தாமல் முற்றிலும் துணிப் பைகளைப் பயன்படுத்துவது என முடிவெடுத்து நானும் நண்பர்களும் களமிறங்கினோம். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு தராத காகிதங்களைக் கொண்டு பத்திரிகைகள் மிகக் குறைந்த செலவில் தயார் செய்யப்பட்டன. பேனர் எனப்படும் பதாகைகள் வடிவமைப்பில்கூட நீர் வண்ணத்தையே பயன்படுத்தினோம். அந்த நீர் வண்ணமும் இயற்கை சாயத்தால் தயாரிக்கப்பட்டது. எங்கள் தோப்பில் விளைந்த இளநீரையே திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு வழங்கினோம். உணவிலும் தமிழர்களின் காய்கறிகளையே பயன்படுத்தினோம்.

உணவும் தமிழ்... உணர்வும் தமிழ்!

திருக்குறள் விளக்கவுரை உள்ளிட்ட தமிழ் நூல்களை யும் சூழலியல் விழிப்பு உணர்வு சார்ந்த புத்தகங்களையும் என் நண்பர்கள் விழாவுக்கு வந்திருந்த அனைவருக்கும் வழங்கி எல்லோரையும் குளிர்வித்தனர்'' என்றார் ரமேசு கருப்பையா உற்சாகமாக.

உணவும் தமிழ்... உணர்வும் தமிழ்!

மணப்பெண் செங்கொடி தனித் தமிழில் பேசி விழாவுக்கு வந்திருந்த எல்லோரையும் ஆச்சர்யப்படவைத்தார். ''தமிழ்நாட்டில் தூய தமிழில் பிழையின்றிப் பேசுவதைக்கூட சிலர் கேலி பேசுவது வருத்தம்தான். என்னை நினைத்து அல்ல; தமிழனின் நிலையை நினைத்து. ஆனால், என் தந்தை என்னை இளம்பிராயத்தில் இருந்தே தமிழ் ஆர்வத்தை எனக்குள் விதைத்து கூச்சமின்றிப் பேசப் பழக்கிவிட்டார்!'' என்று புன்முறுவல் பூத்தார் செங்கொடி.  

பொருத்தமான தம்பதிதான். வாழ்த்துகள் மணமக்களே!

உணவும் தமிழ்... உணர்வும் தமிழ்!

-ஆர்.சரண்
படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு